இழந்த பதவியை மீண்டும் பெற… யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம்

இழந்த பதவி, பெருமைகளை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இருப்பது திருதரும்புரத்தில் உள்ள யாழ்முறிநாதர் கோவில்.
இழந்த பதவியை மீண்டும் பெற… யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம்

இழந்த பதவி, பெருமைகளை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இருப்பது திருதரும்புரத்தில் உள்ள யாழ்முறிநாதர் கோவில்.

      இறைவன் பெயர்: யாழ்முறிநாதர், தர்மபுரீஸ்வரர்
      இறைவி பெயர்: மதுர மின்னம்மை, தேனமிர்தவல்லி
      இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

இத்தலம், காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன், இடதுபுறம் காணப்படும் மாதா கோவில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியும் இடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில்,
தருமபுரம்,
காரைக்கால் அஞ்சல்,
புதுச்சேரி – 609 602.

இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


தல வரலாறு
மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை சிவன் பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டார். பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவந்தால் இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்று சிவபெருமான் எமனுக்கு அருள் செய்தார். அதன்படி, எமன் பூவுலகில் பல சிவஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தலம் வந்த எமதர்மன், இங்கு தீர்த்தம் உண்டாக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு வரும் மற்ற பக்தர்களுக்கும் பணி தந்து அருள வேண்டும் என எமன் கேட்டுக் கொண்டார். எமதர்மனின் வேண்டுகோளின்படி சிவன் இங்கே சுயம்பு மூர்த்தியாக இடம் கொண்டார். இங்கு தவம் செய்து சிவன் அருள் பெற்ற எமனுக்கு மீண்டும் அவரது பதவியைத் திருப்பிக் கொடுத்த தலம் திருபைஞ்சிலி ஆகும்.
 

பணி இடை நீக்கம் பெற்றவர்கள், பதவியை இழந்தவர்கள், வேலை கிடைக்காமல் வருந்துபவர்கள் இத்தலம் வந்து யாழ்முறிநாதரையும், அம்பாளையும் வழிபட தகுந்த வேலை கிடைத்தும், இழந்த வேலையை மீண்டும் பெற்றும் வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனடியார்களுக்கு கேடு செய்தல், அவர்களை நிந்தித்தல், அவமதித்தல் போன்ற செயல்களும் தோஷமாகும். இவற்றிலிருந்து விடுபட யாழ்முறிநாதரை வழிபட்டு நிவாரணம் பெறலாம்.,  
 

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு பெற்றமையினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவர். திருஞானசம்பந்தரின் யாழ்முறிப் பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமான இவ்விடத்துக்கு ஒருமுறை சம்பந்தர் வருகை தந்தார். அவருடன், சம்பந்தர் பதிகங்களை யாழில் பாடிவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்திருந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிப்பதனால்தான் திருஞானசம்பந்தர் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்று கூறினர். அதைக் கேட்ட பாணர் வருந்தி, திருஞானசம்பந்தரிடம் முறையிட்டார். திருஞானசம்பந்தரும் “மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். திருஞானசம்பந்தரின் இசை திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமல் போக, பாணர் யாழை உடைக்கச் சென்றார். திருஞானசம்பந்தர் தடுத்து, பாணரை இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார். இறைவனும் யாழ்முறிநாதர் என்று பெயர் பெற்றார்
 

சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பதுபோலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பதுபோலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.

கோவில் அமைப்பு

தருமை ஆதீனத்தின் நிர்வாகத்தில் கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்துள்ள மூன்று நிலை கோபுரத்துக்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் இருக்கின்றன. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் அம்பாள் மதுரமின்னம்மை சந்நிதி உள்ளது. வெளிப் பிராகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது.


இரண்டாம் கோபுர வாயிலுக்கு நேரே 16 கால் மண்டபத்தை அடுத்து, கருவறையில் இறைவன் யாழ்முறிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி அழகாக தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. தட்சிணாமூர்த்தி இருபுறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க, முயலகன் மீது காலை ஊன்றியபடி எழுந்தருளியுள்ளார். லிங்கோத்பவர், இருபுறமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருக்க காட்சி தருகிறார். தெற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேதாதட்சிணாமூர்த்தி திருவுருவம் தரிசிக்க வேண்டிய ஒன்று. அதேபோல, உற்சவ மூர்த்திகளுள் ஸ்ரீயாழ்முறிநாதரின் திருவுருவமும் பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.
 

இத்தலத்தின் தீர்த்தமாக விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தரும தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் வடபுறமும் மற்றும் முன்புறம் அமைந்துள்ளன. தலமரமாக வாழை உள்ளது.
 

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இதுவே யாழிசையில் அடங்காமல் போன பதிகமாகும்.

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
 
பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
 
விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.

வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
 
நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
 
கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.
 
தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.
 
தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
 
வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
 
புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.
 
பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் பாலச்சந்திரன் மற்றும் சுந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com