சூரிய தோஷ பரிகாரத்தலம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஅன்னியூர்

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றான திருஅன்னியூர், இந்நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.
சூரிய தோஷ பரிகாரத்தலம் ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஅன்னியூர்

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றான திருஅன்னியூர், இந்நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் இத்தலம், வெண்குஷ்ட நோய் நிவாரணத் தலமாகவும் விளங்குகிறது.

இறைவன் பெயர்: ஆபத்சகாயேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர்.

இறைவி பெயர்: பிருஹந்நாயகி, பெரியநாயகி

இத் தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று என இரண்டு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து வடமேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. மாயவரத்திலிருந்து நமச்சிவாயபுரம் செல்லும் பேருந்தில், பொன்னூர் நிறுத்தத்தில் இறங்கி இக்கோவிலை அடையலாம். மாயவரத்திலிருந்து பொன்னூர் மார்க்கமாகப் பாண்டூர் செல்லும் பேருந்திலும் இவ்வூரை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,

பொன்னூர்,

பாண்டூர் அஞ்சல், நீடூர் (வழி),

மயிலாடுதுறை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609 203.

இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் என்ற இத்தலம், இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.

தலத்தின் பெருமை

சூரியன் சாபவிமோசனம் பெற்ற தலம் இது. ஆதியில், திருக்குறுக்கை திருத்தலத்தில் மன்மதனை எரித்தார் சிவபெருமான். கணவனை இழந்து வாடியிருந்த ரதியின் மீது இச்சை கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ, சூரியனின் வலக்கரம் பின்னமாகப் போகும்படி சாபமிடுகிறாள். மனம் வருந்திய சூரியனோ, சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து வழிபடுகின்றான். ஈசனது பேரருளால், சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று விமோசனம் பெற்றான்.

ரதிதேவி, தனது கணவன் மன்மதனை மீட்க இத்தலத்தில் உள்ள ஆபத்சகாயரைப் பிரார்த்திக்கின்றாள். அவளுடைய பிரார்த்தனைக்குச் ஈசன் செவிசாய்த்து, ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார்.

தட்சன் செய்த யாகத்தில் கலந்துகொண்டதால், வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன், தனது சாபம் தீர ஈசனைப் பல தலங்களில் வழிபட்டான். அதில் திருஅன்னியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை இங்கு வழிபட்டுள்ளான். இத்தீர்த்தமே அக்னி தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்துக்கு வெளியே, நுழைவாயிலுக்கு எதிரே உள்ளது.

தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார். வெண்குஷ்ட நோய் உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட நிவாரணம் கிடைக்கும்.

ஆரவாரமற்ற அமைதியான இந்தப் பொன்னூர் கிராமத்தின் வடகோடியில் எழிலுற அமைந்திருக்கிறது இச்சிவாலயம். கிழக்கு முகம் கொண்ட இச்சிவாலயம், சிறிய ஆலயமாக சிறப்புறத் திகழ்கிறது. இவ்வாலயத்துக்குக் கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் (அக்னி தீர்த்தம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) உள்ளது.

முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபமும், அதையடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவாயிலும் உள்ளன. இந்த இரண்டாவது நுழைவாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவகிரக சந்நிதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகாமண்டபத்தில், தெற்கு நோக்கிய அம்பாள் பிருஹந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாளைத் தொழுது வரும்போது பிராகாரத்தில், அக்னிக்குக் காட்சி தந்த மூர்த்தி (ஆதிமூல லிங்கம்) உள்ளார்.

கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம் தருகிறார். கருவறையில் ஆபத்சகாயேஸ்வரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ரதி வழிபட்டதால் ரதீசுவரர் என்றும், பாண்டவர்கள் வழிபட்டுள்ளதால் பாண்டதவேசுவரர் என்றும், அக்னிதேவன் வழிபட்டுள்ளதால் அக்னீஸ்வரர் என்றும் மற்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

இத்தல நாதனான ஆபத்சாகயேஸ்வரர், பெரும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு ஸ்வாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப்பெற்றுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை உள்ளனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் முருகன், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, புனுகீஸ்வரர், அஸ்திரதேவர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. வள்ளி - தெய்வானையுடன் இருக்கும் முருகன், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம். இவ்வாலயத்தின் தலவிருட்சமாக எலுமிச்சை மரம் உள்ளது. இத்தலத்தில் வருணன் மற்றும் பாண்டவர்கள் ஐவரும் பூஜித்து, பெரும்பேறு பெற்றுள்ளனர்.

சூரிய பரிகாரத்துக்கு உகந்த இத்திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை, 5 நாட்கள் காலையில் சூரியக் கதிர்கள் ஸ்வாமி மீது விழும் சூரிய பூஜை வெகு சிறப்பாக இங்கு நடக்கிறது. ஆகையால், இத்தலம் பாஸ்கர ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இத்தலத்தில் நீராடி, ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, தயிர் சாதம் நிவேதித்து வழிபடுவோரது பெரும் ஆபத்துகள் நீங்கும் என்பது இத்தலத்தில் பிரார்த்தனையாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

திருநாவுக்கரசர் பாடியருளிய இத்தலப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

பாறலைத்த படு வெண்தலையினன்

நீறலைத்த செம்மேனியன் நேரிழை

கூறலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய

ஆறலைத்த சடை அன்னியூரனே.

பண்டு ஒத்த மொழியாளை ஓர் பாகமாய்

இண்டைச் செஞ்சடையன் இருள்சேர்ந்தது ஓர்

கண்டத்தன் கரி யின் உரி போர்த்தவன்

அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே

பரவி நாளும் பணிந்தவர் தம்வினை

துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்

குரவம் நாறுங் குழலுமை கூறராய்

அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே.

வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்

சோதி வெண்பிறை துன்று சடைக்கணி

நாதர் நீதியினால் அடியார் தமக்கு

ஆதியாகி நின்றார் அன்னியூரரே.

எம்பிரான் இமையோர்கள் தமக்கெலாம்

இன்பராகி இருந்த எம் ஈசனார்

துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு

அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே.

வெந்த நீறு மெய்பூசும் நல மேனியர்

கந்த மாமலர் சூடுங் கருத்தினர்

சிந்தையார் சிவனார் செய்ய தீவண்ணர்

அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே.

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்

வானை வானவர் தாங்கள் வணங்கவே

தேனையார் குழலாளை ஓர் பாகமா

ஆனைஈர் உரியார் அன்னியூரரே

காலை போய்ப் பலி தேர்வர் கண்ணார் நெற்றி

மேலை வானவர் வந்து விரும்பிய

சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே

ஆலின் கீழ அறத்தார் அன்னியூரரே.

எரிகொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய்த்

திரியு மூவெயில் தீ எழச் செற்றவர்

கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு

அரியராகி நின்றார் அன்னியூரரே.

வஞ்சரக்கன் கரமும் சிரத்தொடும்

அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்மிறப்

பஞ்சின் மெல்விரலால் அடர்த்த் ஆயிழை

அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம் - பாடியவர் கொடுமுடி வசந்தகுமார் தேசிகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com