நவக்கிரக தோஷங்களைப் போக்கும் வெள்ளிமலைநாதர் கோவில், திருதெங்கூர்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 116-வது தலமாக விளங்குவது திருதெங்கூர் திருத்தலம்.
நவக்கிரக தோஷங்களைப் போக்கும் வெள்ளிமலைநாதர் கோவில், திருதெங்கூர்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 116-வது தலமாக விளங்குவது திருதெங்கூர் திருத்தலம். நவக்கிரங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், இத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு கங்கையில் நீராடிய பலனைப் பெறவும் இத்தலம் சிறப்பு பெற்றதாகும். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர்

இறைவி பெயர்: பெரியநாயகி

எப்படிப் போவது

திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து, அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி திருநெல்லிக்காவல் சென்று, அதே சாலையில் மேலும் 2 கி.மீ. சென்றால் திருதெங்கூர் தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோவில்,

திருத்தங்கூர், திருநெல்லிக்காவல் அஞ்சல்,

திருத்துறைப்பூண்டி வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610 205.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலத்தின் சிறப்பு

ஒரு சமயம், உலகில் பிரளயம் ஏற்பட்டு பூவுலகம் முழுவதையும் கடல் நீர் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி, சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி, உலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும், இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது.

உமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி, இத்தலத்துக்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது.

உமையம்மைக்கு விருப்பமான தலம் என்பதையும், திருமகள் வந்து சிவபூஜை செய்த தலம் என்பதையும் தெரிந்துகொண்ட நவக்கிரகங்கள், இத்தலத்துக்கும் வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்துப் பலனடைந்தார்கள்.

தென்னை மரங்கள் நிறைந்து வளம் பெற்ற ஊர் என்பதால் தெங்கூர் என்று இத்தலத்துக்குப் பெயர் வந்தது என்றும் கூறுவர். அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.

சிவகங்கை தீர்த்தம்
கங்கை நதியில் நீராடுபவர்களின் பாவங்களைச் சுமந்து வாடிய கங்கை, அந்தப் பாவங்களை எல்லாம் போக்கிக்கொள்ள பூலோகத்தில் உள்ள பல தீர்த்தங்களில் மூழ்கி சிவபூஜை செய்தாள். அப்படியும் பாவம் முழுவதும் போய்விடவில்லை. இந்த நிலையில், இத்தலத்தின் சிறப்பைப் பற்றி அறிந்தாள், சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி. திருத்தங்கூர் வந்து கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி 48 நாட்கள் செந்தாமரை மலர்களால் சிவனுக்குப் பூஜை செய்தாள். கங்கைக்குக் காட்சி தந்த ஈசன், அவள் பாவங்களை எல்லாம் போக்கினார். மேலும், அவள் உருவாக்கிய தீர்த்தத்துக்கு சிவகங்கை தீர்த்தம் எனப் பெயரிட்டு, அதில் கங்கை எப்போதும் நிறைந்திருக்க அருளாசி புரிந்தார்.

கோவில் அமைப்பு 
இத்தலத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் பலிபீடத்தையும், நந்தியையும் காணலாம். கொடிமரத்துக்குப் பதில் கொடிமர விநாயகர் உள்ளார். இரண்டு பிராகாரங்கள் உள்ள இவ்வாலயத்தின் வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வலதுபுறம் அம்பாள் பெரியநாயகி சந்நிதி தனிக்கோயிலாக இருப்பதைக் காணலாம். உள்வாயிலைத் தாண்டிச் சென்றால், கருவறை வாயிலிலுள்ள துவாரபாலகர்களையும், மற்றும் இருபுறமும் உள்ள விநாயகர், சுப்பிரமணியரையும் வணங்கி உட்சென்று, கிழக்கு நோக்கி சற்று உயர்ந்த பாணமுடைய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தரும் மூலவரைத் தரிசிக்கலாம். உட்பிராகாரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரக சந்நிதி முதலியவற்றைக் காணலாம். நடராஜ சபையும் இப்பிராகாரத்தில் உள்ளது. பைரவர், சூரியன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

கருவறை சுற்றுப் பிராகாரத்தில் உள்ள சந்நிதிகளில் முக்கியமானவை இரண்டு. அவற்றில் முதலாவது மகாலட்சுமியின் சந்நிதி. மகாலட்சுமி சிவபூஜை செய்த தலமாதலால் இச்சந்நிதி முக்கியமானது. அடுத்தது, வடக்குப் பிராகாரத்தில் மகாலட்சுமி சந்நிதி எதிரில் நவக்கிரகங்கள் ஸ்தாபித்த சிவலிங்கங்கள். வரிசையாக அமைந்துள்ளன.

மகாவிஷ்ணுவின் வாமன அவதார காலத்தில், அவரால் தனது இரண்டு கண்களில் ஒன்றை இழந்தார் சுக்கிர பகவான். தனது ஊனத்தைப் போக்கிக்கொள்ள சிவபூஜை செய்வதே சிறந்தது என்று எண்ணி இத்தலம் வந்தார். சிவபெருமானை பல காலம் மிகுந்த பக்தியுடன் பூஜை செய்தார். வெள்ளிமலைநாதர், அம்பாள் பெரியநாயகியுடன் காட்சி தந்து சுக்கிரனுக்கு அருள் செய்து வரங்கள் பல அருளினார். சுக்கிரன் இத்தலத்துக்குப் பூஜை செய்ய வந்தபோது, மற்ற எட்டு கிரகங்களும் இத்தலம் வந்து தத்தமது பெயரால் ஒவ்வொரு லிங்கம் நிறுவி அவர்களும் வழிபட்டனர். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்தால், நவக்கிரக தோஷங்கள் மற்றும் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த திருத்தங்கூர் திருத்தலத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் இறைவனின் திருமேனியில் படுகிறது. இந்த சூரிய பூஜையை சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடுகிறார்கள்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ‘தெங்கூரில் வெள்ளியங்குன்றில் அமர்ந்த இறைவர்’ என்று இத்தலத்து இறைவனைக் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும், முற்பிறவிகளில் நாம் செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர், துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர் என்று இத்தலத்து இறைவனைக் குறிப்பிடுகிறார். நவக்கிரக தோஷங்கள் நீங்க, நமது பழவினைகள் நீங்க இத்தலம் சென்று இறைவனை வழிபடுங்கள்.

புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்

கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்

இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்

விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே.

சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்

கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்

பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த

வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்

படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்

சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்

விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்

கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்

வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி

விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்

தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை

கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக

விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்

எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்

சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற

வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே.

நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்

முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்

பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி

வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே.

எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்

கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்

தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்

விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே.

தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்

பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்

ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்

வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர

இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்

கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த

விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரைக்

கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்

சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்

பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் சிவகாசி மு.இரமேஷ்குமார் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com