பெண்கள் ருது பரிகாரத் தலம் சொர்ணபுரீசுவரர் கோவில்,ஆண்டாங்கோயில்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 97-வது தலமாக விளங்கும் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 97-வது தலமாக விளங்கும் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், தற்போது ஆண்டாங்(ன்)கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் பெண்கள் ருது பரிகாரத் தலமாக சிறப்பு பெற்றுள்ளது.
 

     இறைவன் பெயர்: சொர்ணபுரீசுவரர்
     இறைவி பெயர்: சிவாம்பிகை, சொர்ணாம்பிகை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில், வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20, இக்கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டாங்கோவில் வழியாகச் செல்கின்றன. ஆண்டாங்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. தூரம் நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,
ஆண்டாங்கோவில்,
ஆண்டாங்கோவில் அஞ்சல்,
வலங்கைமான் S.O.
திருவாரூர் மாவட்டம் -  612 804.

இக்கோயில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 

குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ளது இத்தலம். குடமுருட்டி ஆறு, தேவாரக் காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில், இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை கடுவாய்க்கரைத் தென்புத்தூர் என்று குறிப்பிடுகிறார்.

ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்துக்கு வெளியே கோவிலின் தீர்த்தமான திரிசூலகங்கை, கோயிலின் வலதுபுறம் உள்ளது. கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், நேரே கொடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். அதையடுத்து, அநேக தூண்களுடைய கருங்கல்லால் ஆன முன் மண்டபம் உள்ளது. உள்ளே சென்று கருவறையை அடைந்தால் மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார்.
 

சூரிய பூஜை

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரை 11, 12, 23 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக்கை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
 

ருது பூஜை

இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால், விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
 

ருது தோஷ பரிகாரம் செய்ய வருபவர்கள், இந்தத் திருத்தலத்தின் எதிரில் உள்ள திரிசூலகங்கை என்ற திருக்குளத்தில் நீராட வேண்டும். பிறகு 7 எலுமிச்சைப் பழம், 7 மஞ்சள் கிழங்கு கொண்டு வந்து ஆலயத்தில் கொடுத்து இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணின் மடியில் ஒரு மஞ்சள் கிழங்கும், ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்வார்கள். பின்பு அந்தப் பெண், 7 நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 7 திங்கள்கிழமைகள் வழிபாடு செய்து வந்தால், ருது தோஷம் விலகும் என்பது ஐதீகம். மாதவிலக்குப் பிரச்னை உள்ள பெண்களும் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்து பலன் பெறலாம்.



திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை கடுவாய்க்கரைத்தென்புத்தூர் என்று குறிப்பிடுகிறார்.

ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள் அமர்
கருத்தனைக் கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனைப் புத்தூர் சென்று கண்டு உய்ந்தேனே.

யாவரும் அறிதற்கு அரியான்தனை
மூவரின் முதலாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரை ஆகிய நாதனைத்
தேவனைப் புத்தூர் சென்று கண்டு உய்ந்தேனே.

அன்பனை அடியார் இடர் நீக்கியைச்
செம்பொனைத் திகழும் திருக்கச்சியே
கம்பனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
நம்பனைக் கண்டு நான் உய்யப் பெற்றேனே.
 
மா தனத்தை மா தேவனை மாறு இலாக்
கோ தனத்தில் ஐந்து ஆடியை வெண்குழைக்
காதனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
நாதனைக் கண்டு நான் உய்யப் பெற்றேனே.
 
குண்டு பட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்
கொண்டு நல் திறம் காட்டிய கூத்தனைக்
கண்டனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
அண்டனைக் கண்டு அருவினை யற்றேனே.

பந்த பாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
மைந்தனை மணவாளனை மாமலர்க்
கந்த நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை ஈசனைக் கண்டு இனிது ஆயிற்றே.
 
உம்பரானை உருத்திர மூர்த்தியை
அம்பரானை அமலனை ஆதியைக்
கம்பு நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பிரானைக் கண்டு இன்பம தாயிற்றே.

மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென இன்பம் அது ஆயிற்றே.

இடுவார் இட்ட கவளம் கவர்ந்திரு
கடுவாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூர் அடிகட்கு ஆட்
படவே பெற்று நான் பாக்கியஞ் செய்தேனே.

அரக்கன் ஆற்றல் அழித்தவன் பாடல் கேட்டு
இரக்கமாகி அருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெற்று உய்ந்தேனே.

 

கடுவாய்க்கரைத்தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன் என்று திருநாவுக்கரசர், இறைவன் தரிசனம் கிடைக்கப்பெற்றதை தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். நாமும் சென்று, திருநாவுக்கரசருக்குக் காட்சி கொடுத்த இறைவனை வணங்கி அருள் பெறுவோம்.

திருநாவுக்கரசரின் தேவாரம் - திருவாவடுதுறை ச. வடிவேல் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com