அம்மை நோய்க்கு ஒரு பரிகாரத் தலம் சாட்சிநாதர் கோவில், திருஅவளிவநல்லூர்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 100-வது தலமாக விளங்குவது அவளிவநல்லூர். தன்னை வழிபடும் ஒரு அர்ச்சகரின் மகளுக்கு ஏற்பட்ட அம்மை நோயின் பாதிப்பை நீக்கி அவளுக்கு நல்வாழ்வை அருளிய இறைவன் கோயில் கொண்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 100-வது தலமாக விளங்குவது அவளிவநல்லூர். தன்னை வழிபடும் ஒரு அர்ச்சகரின் மகளுக்கு ஏற்பட்ட அம்மை நோயின் பாதிப்பை நீக்கி அவளுக்கு நல்வாழ்வை அருளிய இறைவன் கோயில் கொண்டுள்ள தலம்.
 

      இறைவன் பெயர்: சாட்சிநாதர்
      இறைவி பெயர்: சௌந்தரநாயகி, செளந்தர்யவல்லி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என இரண்டு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?
கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப்பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்,
அவளிவநல்லூர்,
அரித்துவாரமங்கலம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 802.

இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 

தல வரலாறு
பண்டைய நாளில் ஆதி சைவ அந்தணர் ஒருவர் சிவதொண்டையே பிறவிப் பயனாகக் கருதி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வந்தார். அவருக்கு இரு பெண்கள் இருந்தனர். இருவரும் ஒரே உருவ சாயலுடன் வாழ்ந்து வந்தனர். மூத்தவள் சுசீலை; இளையவள் விசாலாட்சி. தக்க வயது வந்ததும் மூத்த பெண் சுசீலையை விஷ்ணுசர்மா என்பவருக்கு மணம் முடித்தார். இருவரும் சில காலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். விஷ்ணுசர்மா காசி யாத்திரை செல்ல விருப்பம் கொண்டார். தனது மனைவி சுசீலையை அவளது தந்தை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு காசிக்கு கிளம்பிச் சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் சுசீலைக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். மேனி எங்கும் அம்மைத் தழும்புகள் உண்டாகி தனது அழகு குன்றி காணப்பட்டாள்.

சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த விஷ்ணுசர்மா வீடு திரும்பினார். அவர் திரும்பி வரும் சமயம் திருமணம் ஆகியிருந்த அந்தணரின் இரண்டாவது மகளும் பெற்றோரைக் காண வந்திருந்தாள். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக் கண்டு, இவள் என் மனைவியல்ல என்றும், உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி என்றும் வாதிட்டார். அந்தணர் எவ்வளவோ சொல்லியும், விஷ்ணுசர்மா அதைக் கேட்கவில்லை. இதனால் இரு பெண்களையும் பெற்ற அந்தணர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் அவரையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் மறுதாள் கோவிலுக்கு வரச் சொல்லி அந்தணரின் கனவில் தோன்றிக் கூறிவிட்டு மறைந்தார்.

மறுநாள் இறைவனின் வாக்கை நிறைவேற்ற எண்ணிய அந்தணர், தனது மகள் சுசீலை மற்றும் மருமகனுடன் இந்தத் திருத்தலத்துக்கு வந்தார். அப்போது முனிவர் வேடத்தில் அங்கு வந்த சிவபெருமான், அனைவரையும் கோவிலின் எதிரே உள்ள சந்திரபுஷ்கரணி என்ற தீர்த்தக் குளத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அனைவரும் அவ்வாறே செய்தனர். மூழ்கி எழுந்தபோது, அனைவரும் வியக்கும் வகையில் அழகற்றுப் போயிருந்த சுசீலை, தன்னுடைய திருமணத்தின்போது இருந்த அதே அழகிய தோற்றத்துடன் மேலும் பொலிவாக கண் பார்வையும் திரும்பப் பெற்று காட்சியளித்தாள்.

இறைவனும், இறைவியும், விண்ணில் ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சிக் கொடுத்து விஷ்ணுசர்மாவை நோக்கி, நீங்கள் அக்னிசாட்சியாக மணம் முடித்த ‘அவள் இவள்தான்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தனர். தன் பொருட்டு சிவபெருமானே வந்து சாட்சி சொன்னதை அறிந்த அந்தணர் மிகவும் மகிழ்ந்தார். மனம் தடுமாறி இளைய பெண்ணே தனது மனைவி என்று வாதிட்ட மருமகனும் உண்மையை உணர்ந்தார். சுசீலையும் கணவனுடன் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள்தான் இவள் என்று சாட்சி கூறியதால், இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் மேனி அழகு, தோற்றப்பொலிவு இல்லாமல் அம்மைத் தழும்புகள் இருப்பவர்களும், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்களும் இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் நலம் பெறலாம் என்பது ஐதீகம். வேண்டுதல் உள்ளவர்கள் ஆலயத்தின் எதிரில் உள்ள சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கு நெய் விளக்கேற்றி வைத்து அர்ச்சனை செய்து நம்பிக்கையுடன் வழிபட்டால் பலன் பெறலாம்..

தலச் சிறப்பு

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இந்த 5 தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷம். இந்த ஐந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்திருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக்கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்,
 

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்கால வழிபாட்டுக்கு உரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டுக்கு உரியது.  
3. அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டுக்கு உகந்தது.
4. ஆலங்குடி (திருஇரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டுக்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டுக்கு உரியது.
 

திருஞானசம்பந்தர் தம் தல யாத்திரையின்போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
 

இக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. நான்கு புறமும் ஓங்கி உயர்ந்த மதில் சுவர்களுடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் இரண்டாவது வாயில் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.
 

மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் - பார்வதி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. காலபைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
 

பஞ்ச ஆரண்ய தலங்கள் வரிசையில் காலை வழிபாட்டுக்கு உரிய இத்தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று காலை வழிபாட்டில் இறைவனையும், இறைவியையும் தரிசித்துப் பயன் பெறுங்கள்.

ஞானசம்பந்தர் தேவாரப்பாடல் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

அப்பர் தேவாரம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com