திருமணத் தடை, ரத்தக்கொதிப்பு நீக்கும் தலம் திருஅன்னியூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 42-வது தலமாக திருஅன்னியூர் தலம் உள்ளது.

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 42-வது தலமாக திருஅன்னியூர் தலம் உள்ளது.

    இறைவன் பெயர்: அக்னீசுவரர்
    இறைவி பெயர்: கௌரி பார்வதி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசரின் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

1. கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் என்ற இடத்துக்கு வந்து, அங்கிருந்து தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று, அங்கிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் சென்றால் திருஅன்னியூர் ஊரை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து அன்னியூருக்கு நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

2. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று, அங்கிருந்து வடக்கே 3 கி.மீ. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.

3. திருக்கருவிலி கொட்டிட்டை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து வடமட்டம் வழியாக 4 கி.மீ. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்,
அன்னியூர், அன்னியூர் அஞ்சல்,
வழி கோனேரிராஜபுரம்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 201.

இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர், இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. காவிரி தென்கரைத் தலமான இந்த திருஅன்னியூர், கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது

தல வரலாறு

சிவபெருமானை புறக்கணித்துவிட்டு, மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்துகொண்டதற்காக, இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்துகொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாடத் தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான்.
 

அச்சமயம், இத்தலத்துக்கும் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால், இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அக்னிதேவன் தனக்கு அருள்புரிந்த அக்னீஸ்வரரை வணங்கி, இத்தலத்துக்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு, தன் தொடர்புடைய உஷ்ண ரோகங்கள் நீங்கவும், நற்கதி பெறவும் அருள்புரியுமாறு இறைவனை வேண்டினான். எனவே, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

தலச் சிறப்பு

பார்வதி தேவி, காத்தியாயன முனிவரின் மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்துகொண்டார். எனவே, இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களிடையே இன்றும் இருக்கும் நம்பிக்கை.

கோவில் அமைப்பு

ஒரு சிறிய 2 நிலை கோபுரத்துடன், அரிசிலாற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேரே விசாலமான முற்றவெளியில் பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. அதையடுத்து உள்ள முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. நேரே, இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். கருவறை வாயில் இருபுறமும் துவாரபாலகர்கள் கல் சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்து வலமாக வரும்போது, கருவறைச் சுவரில் அப்பர், அக்னி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிதல், ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாக இருப்பதைக் காணலாம். பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும், தலமரமான வன்னியும் உள்ளன. இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராசர் திருமேனிகள் மிக்க அழகுடையதாகக் காணப்படுகின்றன.
 

திருநாவுக்கரசர், இத்தலத்து இறைவன் மேல் பாடி அருளியுள்ள இப்பதிகம், 5-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

பாறலைத்த படுவெண் தலையினன்
நீறலைத்த செம்மேனியன் நேரிழை
கூறலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய
ஆறலைத்த சடை அன்னியூரரே.

பண்டு ஒத்த மொழியாளை ஓர் பாகமாய்
இண்டைச் செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன்
அண்டத்து அப்புறத்தான் அன்னியூரரே.

பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல் அன்னியூரரே.

வேதகீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக் கு அணி
நாதர் நீதியினால் அடியார் தமக்கு
ஆதியாகி நின்றார் அன்னியூரரே.

எம்பிரான் இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே.

வெந்தநீறு மெய் பூசும் நல் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தையார் சிவனார் செய்ய தீவண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே.

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை ஆர் குழலாளை ஓர் பாகமா
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே.

காலை போய்ப் பலி தேர்வர் கண்ணார் நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங்காடு அரங்கு ஆகவே
ஆலின் கீழ அறத்தார் அன்னியூரரே.

எரி கொள் மேனியர் என்பு பபணிந்து இன்பராய்த்
திரியும் மூஎயில் தீ எழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரியராகி நின்றார் அன்னியூரரே.

வஞ்சரக்கன் கரமுப் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சும் ஓர் அறும் நான்கும் இறப்
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை
அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே.  

இத்தலத்தைப் பற்றிய திருநாவுக்கரசரின் தேவாரம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com