திருமணத் தடை நீக்கும் சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 63-வது தலமாக இருப்பது கருவிலிக்கொட்டிட்டை.
திருமணத் தடை நீக்கும் சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 63-வது தலமாக இருப்பது கருவிலிக்கொட்டிட்டை. இன்றைய நாளில் சற்குணேஸ்வரபுரம் என்று அறியப்படும் இத்தலத்தில், அம்பாள் சரவாங்கசுந்தரியாக தோன்றி சிவபெருமானை திருமணம் செய்துகொண்டதால், இத்தலம் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: சற்குண நாதேஸ்வரர்
இறைவி பெயர்: சர்வாங்க சுந்தரி

எப்படிப் போவது?
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து, அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து, வடக்கே சுமார் 1 கி.மீ. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.

கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து, அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மீ. வந்தும் கருவிலி தலத்தை அடையலாம். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம், இங்கிருந்து கிழக்கில் 6 கி.மீ. தொலைவிலும், திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் வடக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில்
கருவிலி (சற்குணேஸ்வரபுரம்)
கூந்தலூர் அஞ்சல்
எரவாஞ்சேரி S.O.
தஞ்சாவூர் மாவட்டம் – 605 501.

இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

ஸ்ரீ சர்வாங்கசுந்தரி சமேத சற்குணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள இடம், தற்காலத்தில் சற்குணேஸ்வரபுரம் என்று அழைக்கப்படுகிறது.

தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் இத்தலம் கருவிலி என்று அழைக்கப்பட்டது. கோவிலின் பெயர் கொட்டிட்டை. அரசலாற்றங்கரையில் (காவிரியின் கிளை நதி) இத்தலம் அமைந்துள்ளது. ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபமும் அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரமும் உள்ளது.

கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால், இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி, பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிராகாரச் சுவர் மாடங்களில் கோஷ்டமூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன்மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் பெரிய லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.

அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி, பெயருக்கு ஏற்றார்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஈசனுக்கு தட்சன் மரியாதை தராமல் யாகம் ஒன்றை நடத்தினான். சிவனுக்கு அழைப்பு விடுத்து அவிர்பாகம் அளிக்கும்படி தாட்சாயிணி பலவாறு எடுத்துக்கூறியும், தட்சன் மறுத்துவிட்டு, தன் இஷ்டப்படியே யாகத்தை நடத்திக்கொண்டு போனான். கோபம் கொண்ட தாட்சாயிணி, உனது யாகம் அழியட்டும் என்று சாபமிட்டுவிட்டு, கொழுந்துவிட்டு எரியும் யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள்.

தாட்சாயிணியின் பிரிவைத் தாங்காத பரமன், ஆவேசமாக அந்த யாகம் நடக்கும் இடத்தை அடைந்தார். குண்டத்தில் இருந்த சதியின் உடலை எடுத்துத் தோளில் சுமந்துகொண்டு, பித்துப் பிடித்தவர்போல ஆடத் தொடங்கினார். அகில உலகமே அதிர்ந்தது. எதிர்பாராத இந்த ஆட்டத்தால் எல்லாமே தடுமாறின. தேவர்கள் நடுக்கத்தோடு கலங்கி செய்வதறியாது, இறுதியில் மகாவிஷ்ணுவை அணுகி, தங்கள் இன்னல்களை எடுத்துரைத்தனர். அவர்களது வேண்டுகோளை கேட்ட மகாவிஷ்ணு, தனது சக்கரமான சுதர்சனத்தை ஏவி சதியின் உடலைச் சிறிது சிறிதாகத் துண்டித்தார்.

சுதர்சனத்தால் துண்டிக்கப்பட்ட சதியின் அங்கங்கள் நம் பாரத தேசத்தில் 51 இடங்களில் வீழ்ந்து மகாசக்தி பீடங்கள் என்று பிரபலமாயின. சதி மறைந்துவிட்டதால், சிவனின் கோரதாண்டவம் நின்று, உன்மத்தம் பிடித்தவர் போல் தனியாக இருந்துவந்தார்.

தாட்சாயிணி உடலை விட்ட சதியோ, பர்வதராஜனின் புத்திரியாகப் பிறந்து பார்வதி எனப் பெயர் கொண்டாள். ஈசனின் தனிமைக் கோலத்தை அறிந்த பார்வதி, சர்வாலங்கார நாயகியாக, சர்வாங்க சுந்தரியாக அவர் முன் நின்றாள். அவ்வழகில் மனத்தைப் பறிகொடுத்த இறைவன் சுயநிலை அடைந்து அவள் கைத்தலம் பற்றி மணந்துகொண்டார் எனப் புராணங்கள் கூறுகின்றன.

ஈசனுடன் அம்பிகை இணைந்த தலமாதலால், திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக கருவிலிக்கொட்டிட்டை விளங்குகிறது. இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இக்கோவிலில் நவக்கிரங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம், குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலத்துக்குப் பெயர் உண்டு. கருவிலி என்ற பெயரே, இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவிலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்குப் பிராப்தம் இருந்தால்தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்துக்கான திருநாவுக்கரசர் பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு மயங்கிப் பரியாது நீர்
கட்டிட்ட வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறை வான்கழல் கூடுமே.

ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
காலனார் வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்
வேடனாய் விசயற்கு அருள் செய்தவெண்
காடனார் உறைகின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரையான் படையார் மழுக்
கையினான் உறைகின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்றுமாகி நின்றான் தன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக்
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே.

நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பிரான் என்று இமையவர் ஏத்துமே
கம்பனார் உறைகின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.

பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

இத்தலம் பற்றி அப்பர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com