ராகு தோஷம், திருமணத் தடை நீங்கும் தலம் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், ஆற்றூர் மந்தாரம்

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11-ம் தேதி ஜூலை 27-ம் தேதி, ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும்,
ராகு தோஷம், திருமணத் தடை நீங்கும் தலம் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், ஆற்றூர் மந்தாரம்

இறைவன் பெயர்: சொர்ணபுரீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்
இறைவி பெயர்: அவயாம்பிகை, கயற்கண்ணி (அஞ்சனாட்சி)

எப்படிப் போவது?

வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து, அங்கிருந்து பந்தநல்லூர் சாலையில் திரும்பிச்சென்று கேசிங்கன் என்ற ஊரைத் தாண்டி வலதுபுறம் பிரியும் சாலையில் விசாரித்துச்சென்று ஆத்தூரை (ஆற்றூர்) அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து வடமேற்கில் சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பந்தநல்லூரிலிருந்து வடக்கே சுமார் 7 கி.மீ. தொலைவிலும் ஆத்தூர் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்,
ஆத்தூர்,
வழி மணல்மேடு,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டிணம் மாவட்டம் – 609 204.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11-ம் தேதி ஜூலை 27-ம் தேதி, ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆனார்கள். நலம் தரும் பரிகாரத் தலங்கள் தொடரில், நாம் ராகு - கேது தோஷங்களில் இருந்து விடுபட வழிபட வேண்டிய தலங்கள் என்று திருநாகேஸ்வரம், திருபாம்புரம், பாமணி போன்ற தலங்கள் பற்றி படித்துள்ளோம், இந்த வரிசையில், ராகு - கேது பெயர்ச்சியை அடுத்து, மற்றுமொரு ராகு தோஷ பரிகாரத் தலமான வக்கரை மந்தாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

திருநாவுக்கரசர் அருளிய ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில், வக்கரை மந்தாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம், இன்றைய நாளில் ஆற்றூர், ஆத்தூர் என்று மக்கள் வழக்கில் கூறப்படுகிறது. மந்தாரம் ஒரு தேவார வைப்புத் தலம். தனிப்பதிகம் பெறாது, மற்றொரு தலப் பதிகத்தில் தலப்பெயர் இடம் பெற்றிருந்தால், அது வைப்புத் தலம் என்று போற்றப்படுகிறது.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்தபோது அருளியதாகும்.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை

மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங் கரையில் உள்ள அருட்டுறை, பெண்ணாடகம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை, முதலிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

சூரபத்மனை அழித்த பிறகு முருகப் பெருமான் பல சிவஸ்தலங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்தார். ஆற்றூர் என்று இக்காலத்தில் அறியப்படும் இத்தலம் வந்தபோது, நீராட வேண்டி தன் வேலாயுதத்தை பூமியில் விடுத்தார். அது ஒரு நதியாக மாறிற்று. அந்த நதியில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தார். முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்ட சுப்பிரமணிய நதி, இக்காலத்தில் மண்ணியாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்ணியாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்துக்கு நந்திபுரம், நடனபுரம், மந்தாரவனம் என்ற பெயர்களும் அந்நாளில் இருந்துள்ளன.

கிழக்கு நோக்கிய இவ்வாலயம், இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. நந்தி மண்டபமும், பலிபீடமும் கோவிலுக்கு வெளியே உள்ளது. மூலவர் சொர்ணபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். இங்கு அவயாம்பிகை, கயற்கண்ணி என்று இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், சொர்ணபைரவர் சந்நிதியும் தரிசிக்க வேண்டியவையாகும். ஆலயத்தின் தல விருட்சம் மந்தார மரம். தீர்த்தம் மண்டூக தீர்த்தம். இத்தலம் ஒரு காலத்தில் மந்தார வனமாக இருந்தது. மந்தார வனத்தில் எழுந்தருளியுள்ளதால் இத்தல இறைவனுக்கு மந்தாரவனேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.

இத்தலத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கயற்கண்ணி என்ற பெயரில் ஒரு பெண் இருந்தாள். ஏழை அந்தணர் தன் பெண்ணுக்குத் திருமணம் செய்ய முடியாமல் தவித்து இத்தல இறைவனை வழிபாடு செய்தார். அப்போது இத்தல இறைவனே அந்தப் பெண்ணை ஆட்கொண்டார். இந்த தலம், இறைவன் கயற்கண்ணியை மணம் புரிந்த தலம் ஆதலால், கயற்கண்ணி அம்பிகையை வழிபட்டால் திருமணத் தடை, சுக்கிர தோஷம் ஆகியவை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

மண்டூக தீர்த்தம்

கோவிலுக்கு வெளியே இவ்வாலயத்தின் சிறப்புமிக்க மண்டூக தீர்த்தம் உள்ளது. இத்தலத்திலுள்ள இக்குளத்தில் ஒரு தவளை வெகு நாட்களாக வசித்து வந்தது. ஒரு சமயம் பெருமழை பெய்ய, தவளை கரை ஓரத்தில் ஒதுங்கியது. பசியால் இரை தேடி வந்த பாம்பு ஒன்று இத்தவளையை விழுங்கியது. நெடுநாளாக இக்கோவில் குள தீர்த்தத்தில் வாசம் செய்து வந்ததற்கு இதுதான் பலனா என்று தவளை நினைத்து வருந்தியது. அம்பிகை அங்கு எழுந்தருளி தவளைக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, பாம்பின் பிடியிலிருந்து தவளை விடுபட்டது. தீர்த்தமும் மண்டூக தீர்த்தம் என்று பெயர் பெற்றது. (மண்டூகம் என்றால் தவளை). இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் மண்டூக தோஷம், காலசர்ப்ப தோஷம், ராகு தோஷம், ஜாதகத்தில் ராகு 1, 2, 5, 7, 8 மற்றும் 11-ம் இடங்களில் இருக்கும் தோஷம் ஆகியவை இத்தலத்தில் ராகு காலத்தில் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும்.

நந்தி வழிபட்டது

இத்தலத்தில் ஒரு முனிவர் புத்திர பாக்கியம் வேண்டி சிவபெருமானை வெகு நாட்களாக வழிபாடு செய்துவந்தார். சிவன் அருளால் நந்தியம்பெருமான் அந்த முனிவருக்கு மகனாக அவதரித்தார்.

முனிவர் தன் மகனுக்கு நந்தி என்று பெயர் சூட்டினார். நந்தி, சிவபெருமானை பூஜை செய்துவர, நந்திக்கு ஞானம், அறிவு ஆற்றல் ஆகிய வரங்களை இறைவன் அளித்து ஞானத்தை உபதேசித்தார். இந்த நந்தியை வழிபாடு செய்தால் அறிவு, ஞானம், புத்திர பாக்கியம், பதவி உயர்வு பெறலாம். இந்தப் புராண வரலாற்றை நினைவுபடுத்துவதுபோல, சிவபெருமானை நந்தி வழிபடும் கல் சிற்பம் இவ்வாலயத்தில் உள்ளது.

இக்கோவிலுள்ள அஷ்டபுஜ துர்க்கை கையில் பூவும், கிளியும் ஏந்தி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கையை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அபிஷேக அர்ச்சனை செய்தால் மனதில் நினைத்த காரியங்கள், திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் கைகூடும்.

இத்தலத்திலுள்ள பைரவர் சொர்ணபைரவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த பைரவரை அஷ்டமி திதியன்று அபிஷேகம் செய்து, சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், கண் திருஷ்டி, பில்லி, சூனியம், நீதிமன்ற விவகாரங்கள் போன்றவை நீங்கும்.

சோழர் காலத்திய கலவெட்டுகள், இவ்வாலயத்தின் கருவறைச் சுற்றுச் சுவரில் காணப்படுகின்றன. தலபுராணத்தை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பாடியுள்ளார்.

இத்தலம் பற்றி அப்பர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com