நோய்கள் தீர்த்து, ஆயுள் நீட்டிக்கும் மேகநாத சுவாமி கோவில், திருமீயச்சூர்

மேகநாதர் கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.
நோய்கள் தீர்த்து, ஆயுள் நீட்டிக்கும் மேகநாத சுவாமி கோவில், திருமீயச்சூர்


இறைவன் பெயர்: மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர்
இறைவி பெயர்: லலிதாம்பிகை, சௌந்தரநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மீ. தொலைவு. மேகநாதர் கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்,
திருமீயச்சூர், திருமீயச்சூர் அஞ்சல்,
வழி - பேரளம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 405.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தமிழகத்தில் கோச்செங்கட் சோழன், யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டி, சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்துக்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயில், திருமீயச்சூர் இளங்கோயில் என  இரண்டு கோயில்கள் இத்திருக்கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு. 
 

சோழர் காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள கஜப்ரஷ்ட விமானம், மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிராகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிராகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
 

திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர், சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும், துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும், கல் தூண்களும் சோழர் காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. கோயிலின் உள்பிராகாரத்தை விட்டு வெளியே வந்தால், வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்த கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்தசொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் முன் நின்றால், நமது கவலைகள் எல்லாம் பறந்து போகும்.
 

திருமீயச்சூர், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.. அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இத்தலத்துக்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். 

தலத்தின் சிறப்பு 

சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப்போன சூரியன், சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால், வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி, இக்கூக்குரலால் தம்முடைய ஏகாந்தத்துக்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக்கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட ‘வசினீ’ என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றன. 

இச்சம்பவத்தைச் சித்தரிக்கும்விதமாக, கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திரபுராணேச்வரர், பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாக இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறு எந்தக் கோயிலிலும் காண்பது அரிது. இந்தச் சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதுபோலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால், அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இதுவாகும். கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் உள்ள துர்க்கை ஒரு சிறப்பு மூர்த்தம். சாந்தமான முகத்தில் புன்சிரிப்பு தவழ காட்சி அளிக்கும் துர்க்கை, தனது இடது கரத்தில் சுகப்பிரம்மமான கிளையை வைத்துள்ளார். இந்த துர்க்கையிடம் பக்தர்கள் தங்கள் குறைகளைக் கூறினால், அவர் தனது கிளியை அம்பாளிடம் தூது அனுப்பி நிறைவேற்றி வைப்பார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி வரை, உதய காலத்தில் மூலவர் மேகநாதரை சூரியன் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகிறது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை இன்றளவும் காணலாம். 

இங்குள்ள லிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டு பல நன்மைகள் அடைந்தான். எனவே, தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால், எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம் பெறுவர் என்று நம்பப்படுகிறது. 

கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்னைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோஷங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றுக்கும் இந்தத் தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகிறது. இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சிவபெருமானுக்குப் படைத்த பின், நோய்க்குப் பரிகாரமாக உண்பர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
 

இத்தலத்தில் கோஷ்டத்திலுள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை, மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்து, மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

1999-ம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால், அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்புகொண்டு கேட்கையில், அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப் பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்ததால், கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அபிஷேகப் பொருட்கள் அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு தங்கக்கொலுசு அணிவிக்கப்பட்டது.
 

மேகநாத சுவாமி கருவறைக்கு வடக்கில் மீயச்சூர் இளங்கோயில் என்ற மற்றொரு கோவிலும் உள்ளது. இங்கு இறைவன் சகலபுவனேஸ்வரர்.என்று பெயரிலும், இறைவி மேகலாம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். காளி வழிபட்ட சிறப்பை இந்த இளங்கோவில் பெற்றுள்ளது. மீயச்சூர் இளங்கோயில் இறைவன் மேல் அப்பர் பதிகம் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள மீயச்சூர் தலத்துக்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் 
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி 
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை தன் 
மீயச்சூரைத் தொழுது வினையை வீட்டுமே.

2. பூ ஆர் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர் 
நா ஆர் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி 
ஏ ஆர் மலையே சிலையாக் கழி அம்பு எரி வாங்கி 
மேவார் புரமூன்று எரித்தார் மீயச்சூராரே. 

3. பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் 
மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத் 
தன் நேர் பிறர் இல்லானைத் தலையால் வணங்குவார் 
அந் நேர் இமையோர் உலகம் எய்தல் அரிது அன்றே. 

4. வேக மத நல் யானை வெருவ உரிபோர்த்துப் 
பாகம் உமையோடு ஆகப் படிதம்பல பாட 
நாகம் அரைமேல் அசைத்து நடமாடிய நம்பன் 
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச்சூரானே. 

5. விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் 
படையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார் 
பெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார் 
விடையார் நடையொன்று உடையார் மீயச்சூராரே. 

6. குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை 
ஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகோடி 
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில் நம்பன் 
மிளிரும் மரவம் உடையான் மீயச்சூரானே. 

7. நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் 
கோல வடிவு தமது அம் கொள்கை அறிவு ஒண்ணார் 
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் 
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே. 

8. புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் 
ஒலிகொள் புனலோர் சடைமேல் கரந்தார் உமை அஞ்ச 
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை 
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே. 

9. காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார் 
போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார் 
கோதி வரிவண்ட் அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி 
மேதி படியும் வயல்சூழ் மீயச்சூராரே. 

10. கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டைக் 
கொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார் 
பெண்டான் பாகம் உடையார் பெரிய வரை வில்லால் 
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே. 

11. வேடம் உடைய பெருமான் உயும் மீயச்சூர் 
நாடும் புகழார் புகலி ஞானசம்பந்தன் 
பாடல் ஆய தமிழ்ஊர் ஐந்தும் மொழிந்து உள்கி 
ஆடும் அடியார் அகல் வானுலகம் அடைவாரே. 

திருமீயச்சூர் இளம்கோயில் - அப்பர் தேவாரம் - பாடியவர் புதுச்சேரி சம்பந்த குருக்கள்

திருமீயச்சூர் கோயில் - சம்பந்தர் தேவாரம் - பாடியவர் கொடுமுடி லோக வசந்தகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com