கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க ஒரு தலம், நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில், திருக்கூடலையாற்றூர்

மூன்றாவது தலமாக விளங்குவது கூடலையாற்றூர்.

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில், மூன்றாவது தலமாக விளங்குவது கூடலையாற்றூர். கல்வித் தடை தீங்க, கல்வி தொடர்பான பிரார்த்தனை செய்துகொள்ள, மற்றும் இதர வித்தைகள் கற்கவும், கற்றவை மறக்காமல் இருக்கவும் வழிபட்டு பரிகாரம் செய்வதுகொள்ள வேண்டிய தலம் இதுவாகும்.

இறைவன் பெயர்: நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர்
இறைவி பெயர்: புரிகுழல் நாயகி, ஞானசக்தி

இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

விருத்தாசலத்தில் இருந்து ஶ்ரீமுஷ்ணம் என்ற வைணவத் தலம் வழியாகச் சென்றால், சுமார் 31 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

சிதம்பரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை காவாலக்குடி செல்லும் பேருந்து மூலமாக இத்தலத்தை அடையலாம். சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்தும் இத்தலம் வழியாகச் செல்கிறது.

கும்பகோணம் - சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, பின் காவாலகுடி செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்று காவாலகுடியை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். கோயில் வரை வாகனங்கள், பேருந்து செல்லும்.

ஆலய முகவரி
அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்,
திருக்கூடலையாற்றூர்,
காவலாகுடி அஞ்சல்,
காட்டுமன்னார்கோவில் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608 702.

இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 

தலப்பெருமை

மகரிஷி அகத்தியர், தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இத்தல இறைவனை பிரார்த்தித்தார். எனவே, இங்கு குழந்தைகளை அழைத்துவந்து, படித்த பாடங்கள், கற்ற கலைகள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். மேலும், பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே, கல்வி தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இது கருதப்படுகிறது. மேலும், கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்கவும் இத்தல இறைவன் வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
 

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி, இத்தலத்தில் இறைவனை பிரம்மா வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவேதான், இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் மற்றும் கண்ணுக்குப் புலப்படாத ஆகாயகங்கையும் கூடும் இடத்தில் அமைந்த தலம் ஆதலால், இது திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தை தட்சிணப் பிரயாகை என்று கூறுவர். ஒரு சமயம், வெள்ளப்பெருக்கினால் கோயில் அழிந்தமையால், அக்கற்களைக் கொண்டுவந்து ஊரில் திருக்கோயில் கட்டி, அதில் இறைவர் இறைவியாரை எழுந்தருளப் பண்ணியுள்ளனர்.
 

இக்கோயிலின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம், பலிபீடம் இல்லை. வெளிச்சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், காசி விஸ்வநாதர் லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகள் ஏறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம்.
 

கம்பீரமான சுயம்பு சிவலிங்கத் திருமேனி. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை முதலியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. சுவாமிக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய புரிகுழல்நாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நடராச சபையில் நடராஜருடன் சிவகாமி மூர்த்தமும் உள்ளது. சித்திரை மாதம் முதல் மூன்று தேதிகளில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது, அம்பாள் ஞானசக்தி சந்நிதியைக் காணலாம்.

எமதர்மராஜாவின் உதவியாளரான சித்ரகுப்தருக்கு சந்நிதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. அந்தச் சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது. இங்குள்ள சித்ரகுப்தர், உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. மூலவரைத் தரிசித்துவிட்டு வரும்போது, வலதுபுறம் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது.
 

பொதுவாக, சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சந்நிதி இருப்பது வழக்கம். ஆனால் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. புரிகுழல்நாயகி, ஞானசக்தி என்ற பெயர்களில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கிறாள். ஞானசக்தி சந்நிதியில் குங்குமமும், புரிகுழல்நாயகி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும்; ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. புரிகுழல்நாயகி என்ற அம்பாளின் பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் முதல் பாடலில் கூறியுள்ளார்.

திருப்புகழ் தலம்

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
 

சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது அடியார்களுடன் திருமுதுகுன்றம் நோக்கிச் செல்லும் வழியில் கூடலையாற்றூரை அடைந்தார். ஆனால், அங்கு தங்காமல் தொடர்ந்து செல்லும்போது, இறைவன் ஒரு முதிய அந்தணராக சுந்தரரை எதிர்கொண்டார். சுந்தரர் அவரை நோக்கி திருமுதுகுன்றம் செல்லும் வழி எது என்று கேட்க, அந்தணரோ இவ்வழி கூடலையாற்றூர் செல்கிறது என்று கூறி, சற்று தூரம் சுந்தரருடன் வந்து பின்பு மறைந்துவிட்டார். தான் வணங்கும் இறைவனே அந்தணராக வந்து கூடலையாற்றூருக்கு வழி காட்டி அருளிய இறைவனின் கருணையைப் போற்றி, கூடரையாற்றூர் அடைந்து திருப்பதிகம் பாடி அருளினார்.
 

கூடலையாற்றூர் வழியே வந்த தன் முன் அந்தணர் உருவில் இறைவன் தோன்றிய வியத்தகு செயலை அடியேன் அறியாமல் போனேனே என்று தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.

1. வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகளிள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

2. வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொடும் உடனே
கொய் அணி மலர்ச்சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

3. ஊர்தொறும் வெண்டலைகொண்டு உண் பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.
    
4. சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே
கொந்து அணவும் பொழில்சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.     

5. வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல்
சோதி அது உருவாகிச் பரிகுழல் உமையோடும்
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

6. வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொடும் உடனே
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

7. மழைநுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல்
இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும்
குழையணி திகழ்சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.
    
8. மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கணமும் சூழக்
குறள்படை அதனோடும் கூடலையாற்றூரில்
அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.
    
9. வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்
பாலன மென்மொழியாள் பாவையொடும் உடனே
கோலம் அது உருவாகிக் கூடலையாற்றூரில்
ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

10. கூடலையாற்றூரிற் கொடியிடை யவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன் தமிழால் நாவலவூரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை பற்று அறுமே.

சுந்தரர் அருளிய தேவாரம் - பாடியவர் கொடுமுடி லோக. வசந்தகுமார் ஓதுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com