குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அமைதியுடன் வாழ, மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது வடதிருமுல்லைவாயில்.
குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அமைதியுடன் வாழ, மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது வடதிருமுல்லைவாயில். குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக மன நிம்மதி இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் ஏற்படும் பல குழப்பங்கள் தீர்ந்து யாவரும் ஒற்றுமையுடன் வாழ வழிபட வேண்டய தலம் என்ற சிறப்பு இத்தலத்துக்கு உண்டு.

இறைவன் பெயர்: மாசிலாமணி ஈஸ்வரர்

இறைவி பெயர்: கொடியிடை நாயகி

இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் ஒரு பகுதியான அம்பத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில்,

திருமுல்லைவாயில் அஞ்சல்,

திருவள்ளூர் மாவட்டம் – 609 113.

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட, தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

தல வரலாறு

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான், ஒருமுறை திக்விஜயம் மேற்கொண்டபோது, எருக்கம் தூண்களும் வெண்கலக் கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்துவந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். (இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்).

போரில் தோல்வியுற்ற தொண்டைமான், தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக்கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால், தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து ரத்தம் வருவதைக் கண்டான். யானையில் இருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக்கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். (இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10-வது பாடலில் குறிப்பிட்டுள்ளார். பாடல் கீழே தரப்பட்டுள்ளது.)

இறைவன் அவன்முன் தோன்றி, அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன், அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றிகொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி, சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். அசுரர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களைத் தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்திவைத்தான். அதுவே இந்த மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் காணலாம்.

தெற்கில் உள்ள ராஜகோபுரம், இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்துக்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன், பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். அவருக்குப் பின்னால் மதில் மீது தல வரலாற்றுச் சிற்பம், யானை மீதிருந்து தொண்டைமான் மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது - சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு வெளிப்பிராகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால், முதலில் இறைவி கொடியிடைநாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால், இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. சுயம்பு லிங்கமாக தீண்டாதிருமேனியராக இறைவன் இங்கு எழுந்தருளியுள்ளார். இறைவன் மற்றும் இறைவி சந்நிதிகள் இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடைநாயகியின் சந்நிதி, இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. ஆலய தீர்த்தமான சுப்பிரமண்ய தீர்த்தம், கோவிலுக்கு வெளியே கிழக்கு வாயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான பாணம், சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது. ஆதலால், அபிஷேகங்கள் ஆவுடையாருக்குத்தான் செய்யப்படுகின்றன. வாளால் வெட்டுப்பட்டதால், மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்துக்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி, சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி கிழக்கு பார்த்து திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திரு உருவங்கள் உள்ளன. மேலும், மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாகக் காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில், நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான், நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி-பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில், பிற்காலப் பிரதிஷ்டையான ரசலிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை, பௌர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

திருப்புகழ் தலம்

இத்தலத்தில், முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிராகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன.

கிழக்கு வெளிப் பிராகாரத்தில், பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்துக்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவைப் பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை; சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை; இத்தலத்து கொடியிடை அம்மை ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. வெள்ளிக்கிழமை பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில், இம்மூன்று அம்பிகைகளையும் ஒரே நாளில் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தல் பெருஞ் சிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.

சுந்தரர், சங்கிலி நாச்சியாரிடம் உன்னை விட்டுப் பிரியேன் என்று சத்தியம் செய்து கொடுத்து திருவொற்றியூரில் திருமணம் செய்துகொண்டார். சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டதும் கண் பார்வை பறிபோய், திருவாரூர் புறப்பட்டு வரும்போது இத்தலம் வந்து தன் துயரத்தைப் போக்கி அருளுமாறு பதிகம் பாடி வழிபட்ட சிறப்புடைய தலம்

திருமுல்லைவாயில் பதிகத்தின் இரண்டாவது பாடலில் இத்தலத்து அம்பிகையை, கொடிபோலும் இடையினை உடைய உமையவள் என்று இத்தலத்து அம்பிகையின் பெயரான கொடியிடை நாயகியை குறிப்பிட்டுப் பாடியுள்ளார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட இறைவனே என்று கூறி தன் துன்பத்தைப் போக்கி அருளுமாறு வேண்டுகிறார். இத்தல இறைவன், மன்னன் தொண்டைமானுக்கு அருள்புரிந்த செயலை தனது பதிகத்தின் 10-வது பாடலில் குறிப்பிடுகிறார். தனது பதிகத்தின் 5-வது பாடலில், இத்தலம் பாலியாற்றின் வடகரையில் இருந்ததைக் குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது பாலியாற்றின் அறிகுறிகூட இல்லாமல் வறண்டுபோய்விட்டது.

திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்

சீருடைக் கழல்கள்என் றெண்ணி

ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்

ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்

முருகமர் சோலை சூழ்திரு முல்லை

வாயிலாய் வாயினால் உன்னைப்

பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்

கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்

வெருவிட வேழம்அன் றுரித்தாய்

செண்பகச் சோலை சூழ்திரு முல்லை

வாயிலாய் தேவர்தம் அரசே

தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்

சங்கிலிக் காஎன்கண் கொண்ட

பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்

பொறிவரி வண்டிசை பாட

அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்

அலவன்வந் துலவிட அள்ளற்

செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்

பாசுபதா பரஞ்சுடரே

சந்தன வேருங் காரகிற் குறடுந்

தண்மயிற் பீலியுங் கரியின்

தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்

கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி

வந்திழி பாலி வடகரை முல்லை

வாயிலாய் மாசிலா மணியே

பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்

வள்ளலே கள்ளமே பேசிக்

குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்

கொள்கையான் மிகைபல செய்தேன்

செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த

திருமுல்லைவாயிலாய் அடியேன்

பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய

வார்குழல் மாமயிற் சாயல்

அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்

அருநடம் ஆடல்அ றாத

திணிபொழில் தழுவு திருமுல்லைவாயில்

செல்வனே எல்லியும் பகலும்

பணியது செய்வேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்

நாயினேன் றன்னைஆட் கொண்ட

சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்

தடங்கடல் நஞ்சுண்ட கண்டா

செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லைவாயில்

தேடியான் திரிதர்வேன் கண்ட

பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்

மாணிதன் மேல்மதி யாதே

கட்டுவான் வந்த காலனை மாளக்

காலினால் ஆருயிர் செகுத்த

சிட்டனே செல்வத் திருமுல்லைவாயில்

செல்வனே செழுமறை பகர்ந்த

பட்டனே அடியேன் படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்

சூழ்கொடி முல்லையாற் கட்டிட்

டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்

டருளிய இறைவனே என்றும்

நல்லவர் பரவுந் திருமுல்லைவாயில்

நாதனே நரைவிடை ஏறீ

பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்

பாசுபதா பரஞ்சுடரே

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்

வெருவிட நீண்டஎம் மானைத்

திரைதரு புனல்சூழ் திருமுல்லைவாயில

செல்வனை நாவல்ஆ ரூரன்

உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்

உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்

நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி

நண்ணுவர் விண்ணவர்க் கரசே

இத்தலத்துக்கான சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் முருக. சுந்தர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com