குழந்தைப்பேறு சித்திக்க, சுகப்பிரசவம் ஆக தயாநிதீஸ்வரர் கோவில், வடகுரங்காடுதுறை

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 49-வது தலமாக இருப்பது வடகுரங்காடுதுறை.
குழந்தைப்பேறு சித்திக்க, சுகப்பிரசவம் ஆக தயாநிதீஸ்வரர் கோவில், வடகுரங்காடுதுறை

பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 49-வது தலமாக இருப்பது வடகுரங்காடுதுறை. வாலி வழிபட்ட பெருமை உடைய இத்தல இறைவன், ஒரு கர்ப்பிணிக்குத் தாகம் தீர்த்து அருளியவர்.

இறைவன் பெயர்: தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர்

இறைவி பெயர்: ஜடாமகுடநாயகி, அழகுசடைமுடியம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான பெருமாள் கோவிலும் இருப்பதால், இவ்விடம் ஆடுதுறை பெருமாள் கோவில் என்ற பெயரால் அறியப்படுகிறது.

ஆலய முகவரி

அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில்,

ஆடுதுறை பெருமாள் கோவில்,

உள்ளிக்கடை அஞ்சல், கணபதி அக்ரஹாரம் வழி,

பாபநாசம் வட்டம்,

தஞ்சாவூர் மாவட்டம் – 614 202.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு அருகில் உள்ளதால் அவரை சந்தித்து எந்நேரமும் சுவாமி தரிசனம் செய்யலாம்

திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் வாலியால் வழிபடப்பட்ட இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியில் திருவிடைமருதூருக்கு அருகாமையில் சுக்ரீவனால் வழிபடப்பட்ட ஆடுதுறை (தென்குரங்காடுதுறை - காவிரி தென்கரைத் தலம்) என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில் பெருமாள்கோவில் என்றோர் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்துவதற்கு, வடகுரங்காடுதுறை என்ற இந்த தேவாரத் தலம் இன்று ஆடுதுறை பெருமாள்கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிறிய ஊர்.

சாலையோரத்திலேயே, சற்றே உள்ளடங்கினாற்போல் கோயில் தென்படுகிறது. ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் இரண்டு பிராகாரங்களும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், வலது பக்கம் பழைய வாகன மண்டபம். அதற்கு மேற்காக, நவக்கிரகச் சந்நிதி. சமீபத்திய பிரதிஷ்டை. அதற்கும் மேற்காக, அம்பாள் சந்நிதி. மூலவர் கோயிலுக்குப் போகும் உள் வாயிலுக்கு எதிரே பிரதோஷ நந்தியைக் காணலாம். இவற்றைத் தவிர, இந்த வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. வெளிப் பிராகாரத்தின் ஒரு பகுதியில் பசு மடம் உள்ளது. உள் வாயில் வழியே நுழைந்து உள் பிராகாரத்தை அடையலாம்.

ராவணனுடன் வாலி போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. ஆலய விமானத்தில் இறைவனை வாலி வழிபடும் சிற்பமும், கர்ப்பிணிக்கு ஈசன் தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன.

இறைவன் கருவறை வலம் வரும்போது மூலவர் சந்நிதியின் தெற்குச் சுற்றுச் சுவரும் மேற்குச் சுற்றுச் சுவரும் சந்திக்கிற இடத்தில், சிவபெருமானை வாலி வழிபடுவதைக் காட்டும் சிறிய சிற்பம் உள்ளது. மூலவர் பின்புறக் கோஷ்டத்தில், வழக்கமாக லிங்கோத்பவர் இருப்பதற்குப் பதில் இங்கு அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம் மிகமிக அழகாக உள்ளது. தென்மேற்குப் பகுதியில், மஹா கணபதி சந்நிதி உள்ளது. அடுத்து வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்கு முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற திருப்புகழில் இத்தலத்து முருகப் பெருமான் மீது 3 பாடல்கள் உள்ளன.

அடுத்து, காசிவிஸ்வநாதரும் கஜலட்சுமியும் உள்ளனர். வடக்குச் சுற்றில் வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்த நடராஜர் சபை உள்ளது. இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற நடராஜப் பெருமான் மூலவராக, சிலாரூபமாக (கற்சிலை) காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும் நடராஜரும் மூலவர்களாக இங்கு தரிசனம் தருவது வெகு விசேஷம். கிழக்குச் சுற்றில் சனி பகவான், பைரவர், சூரியன், நாகர், தேவாரம் பாடிய மூவர் மற்றும், அவர்களை அடுத்து எந்தப் பெண்ணுக்காகத் தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அந்தச் செட்டிப் பெண் சிலையும் உள்ளன.

கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் தயாநிதீஸ்வரர். வாலிக்கு வால் வளர அருள் செய்ததால் வாலிநாதர் என்றும், கர்ப்பிணியின் தாகம் தீர்க்க தென்னைமரக் குலையை வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்குநாதர் என்றும், ஒரு சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்ததால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் மற்ற பெயர்களால் இத்தல இறைவன் அறியப்படுகிறார். இறைவன், அழகுசடைமுடிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்மன் சந்நிதியில், இறைவி அழகுசடைமுடியம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்விதத் தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.

தல வரலாறு

நல்ல வெய்யில் காலத்தில், இத்தலத்தில் ஒரு கர்ப்பிணி நடந்து வந்துகொண்டிருந்தாள். கடும் வெய்யிலால் அவளுக்குத் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன், இங்கு அருகில் இருந்த தென்னை மரத்தை வளைத்து, இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள்.

இறைவன் சந்நிதி முன் உள்ள முகமண்டபத் தூண் ஒன்றில் சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்சநேயரைக் காணலாம். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கியச் சிவத்தலங்களில் வடகுரங்காடுதுறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர் ஒரு பிரார்த்தனாமூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்துகொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார். 

கருவறையைச் சுற்றி வரும்போது காணப்படும் தட்சிணாமூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷமுடையது. இவரை மனமாற பிரார்த்தித்தால் குருபலம் பெருகும். மேலும், இவ்வாலயத்தில் இறைவன் கருவறை வடக்கு கோஷ்டத்தில் காணப்படும் விஷ்ணு துர்க்கை மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்குப் பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும். இத்தலத்தில் துர்க்கைக்கு ராகு கால பூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் கூடிய சந்நிதியில், அருள்மிகு அழகுசடைமுடியம்மை எனும் பெயருடன் அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர்.

அம்பாளும் பிரார்த்தனாசக்தி, கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாட்களில், மடியில் பாலிகை கட்டிவந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப்பேறு சித்திக்கும். அம்மனுக்கு மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. வாலி இத்தல இறைவனை வழிபட்டுள்ளதை சம்பந்தர் தனது பதிகத்தின் 6-வது பாடலில் சிறப்பித்துப் பாடியுள்ளார். 8-வது பாடலிலும், இக்கோயிலில் வாலி வழிபட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

1. கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை

வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்

ஓங்குமா காவிரி வடகரை யடை குரங்காடுதுறை

வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே.

2. மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்ல

சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி

உந்துமா காவிரி வடகரை யடை குரங்காடுதுறை

எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே.

3. முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி

எத்துமா காவிரி வடகரை யடை குரங்காடுதுறை

மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்

சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.

4. கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி

எறியுமா காவிரி வடகரை யடை குரங்காடுதுறை

மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்

குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே.

5. கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய்

விண்டமுன்னீர்

காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி

ஓடுடைக் காவிரி வடகரை யடை குரங்காடுதுறை

பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே.

6. கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி

வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி

ஆலுமா காவிரி வடகரை யடை குரங்காடுதுறை

நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று.

8. நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க

வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்

ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி

ஆலியா வருபுனல் வடகரை யடை குரங்காடுதுறையே.

9. பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே

யொருங்குநோக்கிப்

பெருந்திறத் தனங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்

வருந்திறற் காவிரி வடகரை யடை குரங்காடுதுறை

அருந்திறத் திருவரை யல்லல்கண் டோ ங்கிய அடிகளாரே.

10. கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்

பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி

எட்டுமா காவிரி வடகரை யடை குரங்காடுதுறைச்

சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே.

11. தாழிளங் காவிரி வடகரை யடை குரங்காடுதுறைப்

போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்

காழியான் அருமறை ஞானசம்பந்தன கருதுபாடல்

கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை மு.முத்துக்குமரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com