திருமணத் தடை, தீராத கடன் பிரச்னை நீங்க சிவலோக தியாகேசர் கோவில், ஆச்சாள்புரம்

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலம். திருநல்லூர் பெருமணம் என்று தேவாரம் பாடப்பெற்ற காலத்தில்....
திருமணத் தடை, தீராத கடன் பிரச்னை நீங்க சிவலோக தியாகேசர் கோவில், ஆச்சாள்புரம்

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலம். திருநல்லூர் பெருமணம் என்று தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் பெருமை பெற்ற இத்தலம், இன்றைய நாளில் ஆச்சாள்புரம் என்று வழங்கப்படுகிறது.

இறைவன் பெயர்: சிவலோக தியாகேசர்

இறைவி பெயர்: திருவெண்ணீற்று உமையம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது. தனது வாழ்நாளில் சம்பந்தர் பாடிய “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று தொடங்கும் கடைசிப் பதிகமும் இத்தலத்தில்தான் பாடப்பெற்றது.

எப்படிப் போவது

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தைக் கடந்தால், கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். இதே சாலையில் மேலும் 6 கி.மீ. செல்ல, மயேந்திரப்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சிதம்பரம், மற்றும் சீர்காழியில் இருந்து ஆச்சாள்புரம் செல்ல நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு சிவலோக தியாகேசர் திருக்கோவில்,

ஆச்சாள்புரம், ஆச்சாள்புரம் அஞ்சல்

சீர்காழி வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609 101.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம், கோவிலுக்கு எதிரில் உள்ளது. ராஜகோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன், கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.

நூற்றுக்கால் மண்டபத்தில், திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூரணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது.

சுவாமி கருவறை கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடு அமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது.

ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும், கருவறை மேற்கு சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி, தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிராகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தரின் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால், அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறுதான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தர் இறைவனோடு ஐக்கியமான திருவிழா மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது.

நமசிவாய திருப்பதிகம்

திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து, தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். மனைவியுடன் இறைவன் திருவடி சேர்வதே ஏற்றதாகும் என்று கருதிய சம்பந்தர், பதிகம் பாடி இறைவனை துதிக்க, சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றி அதனுள் புகுவதற்கு ஒரு வாயிலையும் காட்டி அருளினார்.

சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும்படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுள் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.

சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. இத்தகைய சிறப்புமிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.

ரிணவிமோசன லிங்கேஸ்வரர்

இத்தலத்தில் இறைவன் சந்நிதி சுற்றுப் பிராகாரத்தில் காணப்படும் ரிணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதி ஒரு சிறப்பு வாய்ந்த சந்நிதியாகும்.

ரிணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கள்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால், நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற இத்தலம், ஒரு சிறப்புபெற்ற திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது. இத்தலம் வந்து இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாக நம்பிக்கை.

ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்துதான் சம்பந்தர் திருமணத்துக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது.

இந்த நல்லூர் கிராமத்திலுள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் பார்க்க வேண்டிய இடமாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜாதக தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால், தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்துக்கான இப்பதிகம், 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

1. கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில

சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்

நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

2. தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்

பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்

வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்

பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே.

3. அன்புறு சிந்தைய ராகி அடியவர்

நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்

றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்

துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

4. வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது

கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்

நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்

புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.

5. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்

ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை

நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்

வேறுகந் தீருமை கூறுகந் தீரே.

6. சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்

பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது

நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்

திட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே.

7. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை

பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த

நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல

போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.

8. தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை

உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு

நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்

புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.

9. ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை

மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை

நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்

போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.

10. ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்

பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்

நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய

வேதன தாள்தொழ வீடெளி தாமே.

11. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்

பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை

உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்

கறும்பழி பாவம் அவலம் இலரே.

திருநல்லூர் பெருமணத்தில், இறைவன் சந்நிதியில் சம்பந்தரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில்

இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம், நமசிவாயத் திருப்பதிகம் என போற்றப்படுகிறது.

1. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

2. நம்பு வாரவர் நாவி னவிற்றினால்

வம்பு நாண்மலர் வார்மது வொப்பது

செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்

நம்பன் நாமம் நமச்சிவாயவே.

3. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்

தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்

தக்க வானவ ராத்தகு விப்பது

நக்கன் நாமம் நமச்சியவே.

4. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்

நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்

நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி

நயனன் நாமம் நமச்சி வாயவே.

5. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்

இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே.

6. மந்த ரம்மன பாவங்கள் மேவிய

பந்த னையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே.

7. நரக மேழ்புக நாடின ராயினும்

உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்

விரவி யேபுகு வித்திடு மென்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே.

8. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்

தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்

மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை

நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

9. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்

பாதந் தான்முடி நேடிய பண்பராய்

யாதுங் காண்பரி தாகி அலந்தவர்

ஓதும் நாமம் நமச்சிவாயவே.

10. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்

வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்

விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்

நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.

11. நந்தி நாமம் நமச்சிவாய எனுஞ்

சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன் சொல்

சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்

பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

இந்தப் பதிகம்தான், திருஞானசம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப் பதிகமாகும்.

சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் முருக. சுந்தர் 

சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலை மாணவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com