பித்ருதோஷ நிவர்த்தி தலம் பரிதியப்பர் கோவில், திருப்பரிதிநியமம்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 101-வது தலமாக இருப்பது திருபரிதிநியமம். தற்போது பரிதியப்பர் கோவில் என்று வழங்கப்படுகிறது.
பித்ருதோஷ நிவர்த்தி தலம் பரிதியப்பர் கோவில், திருப்பரிதிநியமம்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 101-வது தலமாக இருப்பது திருபரிதிநியமம். தற்போது பரிதியப்பர் கோவில் என்று வழங்கப்படுகிறது. தனது தோஷம் நீங்க சூரியன் வழிபட்ட தலங்களில் பரிதிநியமும் ஒன்று. ஜாதகத்தில் சூரியன் பித்ருகாரகன் என்று அறியப்படுகிறார். பித்ருகாரகனான சூரியன் இத்தல இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றதால், இத்தலம் ஒரு பித்ருதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

இறைவன் பெயர்: பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர்

இறைவி பெயர்: மங்களநாயகி, மங்களாம்பிகை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது

தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ள மேலஉளூர் சென்று, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலம் இருக்கிறது.

தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் சடையார்கோயில், பொன்னாப்பூர் வழியாக பரிதிநியமம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாடுக்கு நேர் வடக்கே 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,

மேலஉளூர் அஞ்சல்,

தஞ்சாவூர் RMS,

தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.

இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

சூரியன் தனக்கு இருந்த குன்மநோய் தீர இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு தனது நோய் நீங்கப்பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது.

மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம், சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

கிழக்கு நோக்கியுள்ள இந்த ஆலயம் இரண்டு கோபுரங்களுடன் விளங்குகிறது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் நேரே கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம்.

வெளிப் பிராகாரத்தில் வசந்த மண்டபத்துக்குப் பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள் பிராகாரம் அடைந்தால், அங்கு விநாயகர், முருகன், கஜலட்சுமி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.

துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உள்ளே சென்றால், மூலவர் பரிதியப்பர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம், அதையடுத்து மூலவரை நோக்கியபடி சூரியன் இருப்பதைக் காணலாம். சண்டிகேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன.

ஆலயத்துக்கு மூன்று தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும், சந்திரதீர்த்தம் மற்றும் வேததீர்த்தம் கோவிலின் பின்புறமும் உள்ளன. தலமரம் அரசமரம்.

தலச் சிறப்பு

பங்குனி மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படுகின்றன. மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது ஆகும். அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள்.

எத்தகைய பிதுர் தோஷத்துக்கும் இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக எந்தக் கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும், இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்க்கண்டேயர் அருவ வடிவில் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்

பெண்கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப் பேணார் பலிதேர்ந்து

கண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்

பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிநியமமே.

அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்

நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி

இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிநியமமே.

வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச

நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து

நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்

பாண்முக வண்டினம் பாடியாடும் பருதிநியமமே.

வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்

துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து

அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்

பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிநியமமே.

நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்

தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்

ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பார்புல்கு தொல் புகழால் விளங்கும் பருதிநியமமே.

வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்

திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்

சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க் கிடம்போலும்

பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதிநியமமே.

பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி

மறையொலி பாடி வெண்ணீறு பூசி மனைகள் பலிதேர்வார்

இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிநியமமே.

ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த

மாசடையாத வெண்ணீறு பூசி மனைகள் பலிதேர்வார்

காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்

பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிநியமமே.

நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்

கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்

ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிநியமமே.

கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான

சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி

நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்

பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பருதிநியமமே.

பையர வம்விரி காந்தள்விம்மு பருதிநியமத்துத்

தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்

பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்தேத்த

ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.

சம்பந்தர், திருப்பரிதிநியமம் தலத்தை பலவாறு சிறப்பித்து தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார். வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்றும், பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்றும், பறையொலியும், சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப்பரிதிநியமம் என்றும், பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்றும், உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்றும், தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்றும் குறிப்பிடும் அவர், இப்பதிகத்தின் 10 பாடல்களையும் பாடி புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை; அவர்களுக்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார்.

இத்தலத்தைப் பற்றி சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் திருமறைக்காடு சொ.சிவக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com