குஷ்ட நோய், தோல் வியாதிகளுக்கு நிவர்த்தி தலம், சிவக்கொழுந்தீசர் கோவில், திருத்திணை நகர்

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 5-வது தலமாக இருப்பது திருத்திணை
குஷ்ட நோய், தோல் வியாதிகளுக்கு நிவர்த்தி தலம், சிவக்கொழுந்தீசர் கோவில், திருத்திணை நகர்


பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 5-வது தலமாக இருப்பது திருத்திணை நகர். இந்நாளில், இத்தலம் தீர்த்தனகிரி என்ற பெயரால் வழங்குகிறது. இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: சிவக்கொழுந்தீசர்

இறைவி பெயர்: கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்

எப்படிப் போவது

கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில், கடலூருக்கு சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் தாண்டி மேட்டுப்பாளையம் என்ற கிராமம் வரும். அங்கிருந்து தீர்த்தனகிரிக்குச் செல்லும் சாலை பிரிகிறது. பிரியும் சாலையில் சுமார் 4 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோவில்,
தீர்த்தனகிரி அஞ்சல்,
கடலூர் வட்டம்,
கடலூர் மாவட்டம் - 608 801.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வீரசேனன் என்ற மன்னன், இத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி தனக்கிருந்த தோல் வியாதிகளில் இருந்து நலம் பெற்றான் என்று இத்தலத்து தலபுராணம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, இக்கோவில் வீரசேனன் மன்னனால் கட்டப்பெற்றது என்று கூறப்படுகிறது. இந்த மன்னனின் உருவம் கோவிலில் உள்ளது. மேலும், இக்கோவிலில் உள்ள திருக்குளத்தில் மூழ்கி இத்தல இறைவனை வழிபட்டு வந்தால், குஷ்ட நோய் நீங்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. 

கோயில் அமைப்பு 

இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. கோபுர வாயில் வழி உள் நுழைந்தால், நேரே கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் இந்தப் பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் ஆகியோரின் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன. 

பிராகார வலம் முடித்து, தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றால், நேரே நடராச சபை உள்ளது. நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதுபோலவும், சிறிய மூர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. 

உள் மண்டபத்தில் இடதுபுறம் நோக்கினால், மூலவர் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி விழுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், யோக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று இறைவனை தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

தல வரலாறு 

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்துவிட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

ஒரு சமயம், சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்துக்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே, அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, விவசாயி வீட்டுக்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். 

அடியவராக வந்த இறைவன், விவசாயியிடம் நான் உழைக்காமல் எதுவும் சாப்பிடமாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன் என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த தினைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து, கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி, சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். 

அடியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் தினைப்பயிர் விளைந்தது எப்படி? என தன் சந்தேகத்தை கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து, சிவகெருமானாக அவனுக்கு காட்சி தந்து, தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி, இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால், இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.

ஒரே நாளில் தினை விதைத்து தினைப்பயிர் வளர்ந்து கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் பெரியானுக்கு அருள்புரிந்த இத்தல இறைவனை வழிபட்டால், விவசாயப் பயிர் செழித்து வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும் என்று இப்பகுதியிலுள்ள விவசாயிகள் நம்புகிறார்கள்.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இறைவன் பெயரை இவ்வூர்ப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சுந்தரமூர்த்தி நாயனார் எடுத்து ஆண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1. நீறு தாங்கிய திருநுத லானை        
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

2. பிணிகொளாக்கை பிறப்பிறப் பென்னு
மிதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ
அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதில்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
ஐயன் வையகம் பரவிநின் றேத்தும்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

3. வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேல்எரு தேறும்
மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

4. பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற்
பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
காவ வென்றுழந் தயர்ந்துவீ ழாதே
அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை
மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

5. ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்
டுடல் தளர்ந்தரு மாநிதி யியற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

6. வேந்த ராய்உல காண்டறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடும்இப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
பரம னைக்கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

7. தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

8. பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழஉயிர் உடலைப்
பிரிந்து போம்இது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

9. நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்
நன்மை யொன்றிலாத் தேரர்புன் சமணாம்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்
தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையொர் கூறனை ஏறுகந் தானை
உம்ப ராதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

10. நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைத் திருவடி யிணைதான்
நாட லாம்புகழ் நாவலூ ராளி
நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் முருக.சுந்தர் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com