இழந்த செல்வம் / பொருளை மீண்டும் பெற சிவபுரநாதர் கோவில், சிவபுரம்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 67-வது தலமாக இருப்பது சிவபுரம்.
இழந்த செல்வம் / பொருளை மீண்டும் பெற சிவபுரநாதர் கோவில், சிவபுரம்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 67-வது தலமாக இருப்பது சிவபுரம். ஆதி சங்கராச்சாரியாரின் தாயார் பிறந்த ஊர் என்ற பெருமை உடையது இத்தலம்.

இறைவன் பெயர்: சிவபுரநாதர்

இறைவி பெயர்: சிங்காரவல்லி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் மூன்றும் என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 612 401.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும். அரிசிலாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் 5 நிலை ராஜகோபுரத்தையும், 2 பிராகாரங்களை உடையதாகவும் அமைந்துள்ளது. ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள இரண்டாவது பிராகாரத்தில் கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் காணலாம். இந்தப் பிராகாரத்தின் வலதுபுறம் பைரவர் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. 

மூன்று நிலை உள்ள 2-வது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் முதல் பிராகாரம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. எதிரே முன் மண்டபம், அதன் பின் இறைவன் கருவறையில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவர், கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி. இவர் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமி மீது விழுகிறது. கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

ஒருமுறை நந்தியின் சாபத்துக்கு ஆளாகி வராகமாக உருமாறிய மகாவிஷ்ணு, இத்தலத்தில் இறைவன் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண்பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் பாரவன்காண் என்று தொடங்கும் பாடலில் (6-ம் திருமுறை, 87-வது பதிகம், 6-வது பாடல்) பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண் என்று பாடியுள்ளார். 

பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறை எயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க்கு எல்லாம்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே. 

முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டது. பின்பு அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெருமுயற்சியால் திரும்பக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்புக் கருதி, இப்போது திருவாரூர் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராஜர் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபட்டு வரப்படுகிறது. நடராஜப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் சந்நிதியில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.

வெளிப் பிராகாரத்தில் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு 11 தேய்பிறை அஷ்டமியில் தயிர்சாதமும், வடைமாலையும் சார்த்தி அர்ச்சனை செய்துவந்தால் தீராத நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற, இழந்த பொருள் மற்றும் செல்வத்தை திரும்பப் பெற, தொழில் வளம் பெற பலன் கிட்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி ஆகிய சனி உபாதைகளும் 11 தேய்பிறை அஷ்டமியில் இத்தலத்து இறைவனையும், பைரவரையும் வழிபட நீங்கும். 

இத்தலத்தில், கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒருமுறை நந்தியெம்பெருமானின் சாபத்துக்கு ஆளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். ஆகையால், இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் அங்கப்பிரதட்சிணம் செய்து இறைவனை வழிபட்டார். பின்பு ஊர் எல்லையைத் தாண்டிச் சென்று அங்கிருந்தபடி இத்தல இறைவனை பதிகம் பாடி வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் கரிவலம் வந்த நல்லூர் முருக.சுந்தர் ஓதுவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com