நாக தோஷம் மற்றும் சகல தோஷங்களும் விலக வேதபுரீஸ்வரர் கோவில், திருவோத்தூர்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 8-வது தலமாக விளங்குவது
நாக தோஷம் மற்றும் சகல தோஷங்களும் விலக வேதபுரீஸ்வரர் கோவில், திருவோத்தூர்

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 8-வது தலமாக விளங்குவது திருவோத்தூர் என்ற இத்தலம், இது இந்நாளில் செய்யாறு, திருவத்தூர், திருவத்திபுரம் என்று அறியப்படுகிறது. இத்தலத்திலுள்ள நாகலிங்கத்தை வழிபடுவதால், நாக தோஷம், திருமணத் தடை மற்றும் சகல தோஷங்களும் விலகும். இத்தலத்துக்கு, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: வேதபுரீஸ்வரர்

இறைவி பெயர்: பாலகுசாம்பிகை, இளமுலைநாயகி

எப்படிப் போவது
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில், சுமார் 14 கி.மீ. சென்றால், செய்யார் செல்லும் சாலை வலதுபுறம் பிரிகிறது. அச்சாலையில் சுமார் 20 கி.மீ. சென்றால் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 34 கி.மீ. தொலைவு. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், ஆரணி ஆகிய இடங்களிலிருந்து இத்தலத்துக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவத்திபுரம், 
செய்யாறு வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் - 604 407.

இவ்வாலயம், காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.

சிவபெருமான், இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச்செய்தமையால், இத்தலம் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது. திரு அடைமொழி சேர்ந்து திருஓத்தூர், திருவோத்தூர் என்றாயிற்று. சேயாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயம், 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. 

ராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து, 2-வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்துக்கும், 2-வது கோபுரவாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. நந்தி, சுவாமியை நோக்கி இல்லாமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது.

இறைவன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும்போது, தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாகக் கூறப்படுகிறது. இறைவன் சுயம்புலிங்கமாக, வேதபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். ஆவுடை, சதுர வடிவமான அமைப்புடையது. சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும்.

வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை - 1. திருப்பனந்தாள், 2. திருப்பனையூர், 3. திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), 4. புறவார் பனங்காட்டூர் என்பன. உள்சுற்றுப் பிராகாரத்தில், தென்கிழக்கில் கருங்கல்லால் ஆன பனைமரமும், அதனடியில் ஒரு சிவலிங்கமும்,  ஆண் பனை குலை ஈன்றுமாறு சம்பந்தர் பாடிக்கொண்டு நிற்கும் காட்சியும், ஐதிகச் சிற்பமாக அமைந்து விளங்குவதைக் காணலாம்.

உள்பிராகாரத்தில் வலம் வரும்போது, விநாயகர், சுப்பிரமணியர், நாகநாதர், நடராஜர், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இப்பிராகாரத்தில், பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசனம் செய்தால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவானைக்கா, சிதம்பரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய தலங்களைத் தரிசித்த பலனுண்டு. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தனிக் கோயிலாகத் தட்சிணாமூர்த்தியும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். மகாமண்டபத்தின் நடுவில் நின்றால் சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், நவக்கிரகம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இவ்வமைப்பு வேறு எங்கும் காணமுடியாது. 

உட்பிராகாரத்தில், உயரமான பீடத்தில் நாகலிங்கம் சந்நிதி அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், திருவோத்தூர் தலம் வந்தபோது, அவரை வெறுக்கும் சமணர்கள் ஒரு வேள்வி செய்து, ஐந்து தலைகளை உடைய ஒரு பாம்பை ஞானசம்பந்தர் மீது ஏவினார்கள். அப்போது, இத்தல இறைவன் ஒரு பாம்பாட்டியாக வந்து, ஐந்து தலை நாகத்தின் தலை மீது ஏறி அதை அடக்கி ஆலயத்தினுள் வந்து அமர்ந்தார். அதுவே இந்த நாகலிங்கம் சந்நிதி. இந்த நாகலிங்கத்தை வழிபட்டுவர, நாக தோஷங்கள் விலகும். நாகலிங்கத்தின் நேர் பார்வையில் சனி பகவான் சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால், சனியால் ஏற்படும் தொல்லைகள், தோஷங்கள், நாகலிங்கத்தை வழிபடுவதால் தீரும். திருமணம் ஆகாதவர்கள், சனிக்கிழமைகளில் இந்தச் சந்நிதியில் தீபமேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

அம்மன் பாலகுஜாம்பிகை, தனிக்கோயிலில் தரிசனம் தருகிறாள். சுற்றுப்பிராகாரம் உள்ளது. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். ஆலயத்துக்கு வெளியே உள்ள சேயாறும், வெளிப்பிராகாரத்தில் உள்ள கல்யாணகோடி தீர்த்தமும், இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக உள்ளன. சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப் பெருமாள் சந்நிதியும் இருக்கிறது.

இறைவனை முருகப்பெருமான் பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து, வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.

கோயிலைப் பராமரித்து வந்த சிவனடியார் ஒருவர், கோயில் நிலங்களில் பனை வைத்து வளர்த்துவந்தார். அவையாவும் ஆண் பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் மிகவும் வருந்தினார். திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு எழுந்தருளியபோது, சம்பந்தரிடம் கூறி விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர், ஆண் பனைகளை குலை ஈன்றும் மரமாக திருப்பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவோத்தூர். பதிகம் பாடிய சம்பந்தர், தனது பதிகத்தின் திருக்கடைக்காப்பில், குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் என்று அருளியபோது, ஆண்பனைகள் குலை ஈன்ற அற்புதம் நீகழ்ந்தது.

சம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி
ஏத்தாதார் இலை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர் உம்ம குணங்களே.

இடையீர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே புள்ளிமான் உரி
உடையீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்
சடையீரே உம தாளே.

உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம
ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க்
கள்வீரே உம காதலே. 

தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே அடியார் வினை
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே அருள் நல்குமே.

குழை ஆர் காதீர் கொடு மழுவாட்படை
உழை ஆள்வீர் திரு ஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்
அழையாமே அருள் நல்குமே.

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ திரு ஓத்தூர்
நக்கீரே அருள் நல்குமே.

தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ திரு ஓத்தூர்
ஆதீரே அருள் நல்குமே.

எனதான் இம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதிர் ஏய்தவன் ஓத்தூர்
என்றார் மேல் வினை ஏகுமே.

நன்றா நான்மறையானொடு மாலுமாய்ச்
சென்றார் போலும் திசையெலாம்
ஒன்றாய் உள் எரி ஆய் மிக ஓத்தூர்
நின்றீரேயு உமை நேடியே.

கார் அமண் கலிங்கத் துவர் ஆடையர்
தேரர் சொல் அவை தேறன்மின்
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீரவன் கழல் சேர்மினே.

குரும்பை ஆண்பனை ஓத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும் புகலியுண் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.

ஞானசம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com