செய்த பாவங்கள் நீங்க, வெள்ளடைநாதர் கோவில், திருக்குருகாவூர் வெள்ளடை

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 13-வது தலமாக விளங்கும் இத்தலம், தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று பெயர் பெற்றிருந்தது. தற்போது திருக்கடாவூர் என்று வழங்கப்படுகிறது.
செய்த பாவங்கள் நீங்க, வெள்ளடைநாதர் கோவில், திருக்குருகாவூர் வெள்ளடை

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 13-வது தலமாக விளங்கும் இத்தலம், தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருக்குருகாவூர் வெள்ளடை என்று பெயர் பெற்றிருந்தது. தற்போது திருக்கடாவூர் என்று வழங்கப்படுகிறது.

ஞானசம்பந்தரின் பாவங்களைப் போக்கிய தலம், சுந்தரருக்கு இறைவன் கட்டமது கொடுத்து அருளிய தலம் என்று பெருமைகளைப் பெற்ற தலம். இத்தலத்துக்கு சம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

இறைவன் பெயர்: வெள்ளடையீசுவரர், வெள்விடைநாதர்,

இறைவி பெயர்: காவியங்கண்ணி அம்மை

எப்படிப் போவது?

சீர்காழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில், சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் தெற்கே 1 கி.மீ. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும்.

ஆலய முகவரி

அருள்மிகு வெள்ளடையீசுவரர் திருக்கோவில்,
திருக்கடாவூர், வடகால் அஞ்சல்,
சீர்காழி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் - 609 115.

இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் மெய்க்காவலர் அருகில் வசிப்பதால், அவரை விசாரித்து தொடர்புகொண்டால் எந்நேரமும் இறைவனைத் தரிசிக்கலாம்.

ஊரின் பெயர் குருகாவூர். கோவிலின் பெயர் வெள்ளடை. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில், திருக்குருகாவூர் வெள்ளடை என்று அறியப்பட்ட இத்தலம், இந்நாளில் திருக்கடாவூர் என்று வழங்கப்படுகிறது. ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. இறைவன் வெள்விடைநாதர், சதுர ஆவுடையார் மீது சிறிய பாணம் கொண்ட லிங்க உருவில், கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இறைவி காவியங்கண்ணி அம்மை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். 

இறைவியின் பெயரை ஞானசம்பந்தர் "காவியங்கண்ணி மடவாளோடுங் காட்டிடைத் தீயகலேந்தி நின்றாடுதிர்" என தன்னுடைய இவ்வூர்ப் பதிகத்தின் 6-வது பாடலில் குறிப்பிட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தியின் மேல் பாகத்தில் நடராஜர் உருவம் இருப்பது தரிசிக்கத்தக்கது. விஷ்ணு, கரியமாணிக்கப் பெருமாள் என்ற பெயருடன் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். 

கருவறைப் பிராகாரத்தில் நால்வர் சந்நிதி, நடராஜப் பெருமான் சந்நிதி, காசி விஸ்வநாதர் விசாலாட்சி சந்நிதிகளுடன், சனீஸ்வரன், மாவடி விநாயகர், சிவலோகநாதர் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் பைரவர், சூரியன், மாரியம்மன், ஸ்ரீஅய்யனார் ஆகியோரின் திருவுருவங்களும் அமைந்துள்ளன.

கருவறைப் பிராகாரத்தில், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொதுவாக, முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால், இங்குள்ள முருகன் தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். தென் திசையைப் பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாகக் கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

சுந்தரருக்கு இறைவன் அமுது படைத்தல் 

சுந்தரர் தனது தொண்டர் கூட்டத்துடன், சீர்காழியிலிருந்து இவ்வூருக்கு எழுந்தருளும்போது, தாகமும் பசியும் அவரையும் அவரது தொண்டர்களையும் வருத்தின. இறைவர் அந்தணர் உருவம் கொண்டு, வழியில் தண்ணீர்ப்பந்தல் ஏற்படுத்தி, அவர்களுக்குத் தண்ணீரும் கட்டமுதும் அளித்தார். சுந்தரர் உண்டு உறங்கும்போது, இறைவன் பந்தலோடு மறைந்தருளினார். சுந்தரர் தூக்கத்திலிருந்து எழுந்து ‘‘இத்தனையாமாற்றை யறிந்திலேன்’’ எனத் தொடங்கும் பதிகம் பாடி, கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டார்.

இதற்கு ஏற்ப, ‘‘பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்’’ என்னும் குறிப்பு, அவரது பதிகத்தின் 3-வது பாடலில் காணப்படுகிறது. சுந்தரருக்கு இறைவன் கட்டமுது அளித்தருளிய விழா, ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் இத்தலத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு, சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்துக்குக் குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு - சம்பந்தரின் பாவங்களைப் போக்குதல்

சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள், கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு, சமணர்களைக் கழுவேற்றிய பாவம் நீங்க, சம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார். தான் காசிக்குச் செல்ல அருளும்படி, சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார்.

சம்பந்தருக்குக் காட்சி தந்த சிவன், அவரை காசிக்குச் செல்ல வேண்டாம் என்றும், திருக்குருகாவூர் வெள்ளடையில் அவருக்குக் கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்குவந்த சம்பந்தர், சிவனை வேண்டினார். அவருக்குக் காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையைப் பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர், பாவம் நீங்கப்பெற்றார். 

இவ்வாலயத்தின் தீர்த்தமான இக்கிணறு, பால்கிணறு என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனிச்சுற்று மதிலுடன் உள்ளது. தை அமாவாசை நாளன்று, இறைவனுக்குத் தீர்த்தம் கொடுக்கும் சமயத்தில், இக்கிணற்று நீர் பால் நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள். மற்ற நாள்களில் இந்தத் தீர்த்தம் திறக்கப்படுவதில்லை.

ஆண்டுதோறும், பக்தர்கள் தை அமாவாசை நாளில் இங்கு நீராட பெருமளவில் வருகிறார்கள். மேலும், தைப்பூச நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஞானசம்பந்தரின் பாவங்களைப் போக்கிய இத்தலத்தில், இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், நமது பாவங்களும் தொலைந்துபோகும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.

இத்தலத்துக்கான சுந்தரிரன் பதிகம்

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே.

வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 

வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர்கள் திருஞான பாலசந்திரன், மயிலாடுதுறை சிவகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com