குன்ம நோய் நிவாரணத் தலம் நீள்நெறிநாதர் கோவில், திருத்தண்டலை நீள்நெறி

சென்ற வாரம், சரும நோய் குறிப்பாக வெண்குஷ்ட நோய் தீர வழிபட வேண்டிய தலமாக திருநெல்லிக்கா என்ற தலத்தைப் பற்றி படித்தோம்.
குன்ம நோய் நிவாரணத் தலம் நீள்நெறிநாதர் கோவில், திருத்தண்டலை நீள்நெறி

சென்ற வாரம், சரும நோய் குறிப்பாக வெண்குஷ்ட நோய் தீர வழிபட வேண்டிய தலமாக திருநெல்லிக்கா என்ற தலத்தைப் பற்றி படித்தோம். அதன் தொடர்ச்சியாக, பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 110-வது தலமாக குன்ம நோய் நிவாரணத் தலமாக விளங்கும் மற்றொரு தலம் திருத்தண்டலை நீள்நெறி பற்றி தெரிந்துகொள்வோம். இத்தலம் தற்போது தண்டலச்சேரி என்று வழங்கப்படுகிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: நீள்நெறிநாதர்

இறைவி பெயர்: ஞானாம்பிகை

எப்படிப் போவது

திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 4.5 கி.மீ. தொலைவில், திருவாரூர் செல்லும் சாலையில் தண்டலச்சேரி கிராமம் இருக்கிறது. பிரதான சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோவில்,

தண்டலச்சேரி கிராமம்,

வேளூர் அஞ்சல்,

திருத்துறைப்பூண்டி வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 614 715.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தண்டலை என்பது இப்போது தண்டலைச்சேரி என வழங்கப்படுகிறது. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில், ஊரின் பெயர் தண்டலை என்றும், இங்குள்ள கோயிலின் பெயர் நீள்நெறி என்றும் வழங்கப்பெற்றது. கோச்செங்கட்சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரணமாக, யானை ஏறாத, ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. அத்தகைய ஆலயங்களில், திருத்தண்டலை நீள்நெறி கோவிலும் ஒன்றாகும். இந்தப் பழமையான சிவன் கோயில், காலத்தின் கோலத்தால் சிதைந்துவிட்டது. பிற்காலத்தில், தேவகோட்டை ராம.அரு.அரு. இராமநாதன் செட்டியார் அவர்கள், இப்போதுள்ள கோயிலை கற்றளியாகக் கட்டித் தந்துள்ளார்கள். விமானங்கள் சுதை வேலைப்பாடுடையவை.

குன்ம நோய் தீர்க்கும் தலம்

கோட்செங்கண்ணன் என்ற சோழ மன்னன், சிவபெருமானுக்கு 70 மாடக்கோயில்கள் கட்டியவன். ஒருமுறை இவனுக்கு குண்ம நோய் (தீராத வயிற்று வலி) ஏற்பட்டது. பலவகை மருந்துகள் உண்டும், பல கோவில்களில் வழிபாடு செய்தும் வயிற்று வலி தீரவில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க, சிவன் அசரீரியாக தோன்றி, "கோச்செங்கட்சோழனே, உனது குன்ம நோய் கல்மாடு புல் தின்னும் தலத்துக்குச் சென்று வணங்கினால் நிவர்த்தியாகும்" என்றார். மன்னனும் அப்படி ஒரு தலம் தேடி அலைந்தான்.

குருந்தை மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள இத்தலத்தில் ஒரு சிவாலயம் இருக்கக் கண்டான். முறைப்படி, முதலில் விநாயகரை வழிபட்டு, அருகம்புல் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அப்போது, பிராகாரத்தின் வெளியே உள்ள நந்தி அருகே செல்லும்போது, அவன் கையில் இருந்த அருகம்புல்லால் ஆன மாலையை, சிவனுக்கு எதிரில் இருந்த நந்தி தன் நாவினால் பற்றி இழுத்துத் தின்ன ஆரம்பித்தது. அந்த வேளையில், தனது குன்ம நோய் வேதனை தீர்வதை கோச்செங்கட்சோழன் உணர்ந்தான். அப்போது அவனுக்கு, சிவன் கூறியது நினைவுக்கு வந்தது. குன்ம நோய் நீங்கியதால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்து, மாடக்கோவில் அமைப்பில் உருவாக்கி இறைவனை வழிபட்டான். இத்தலத்தில், புல்லைத் தின்பதற்காக கழுத்தைத் திருப்பிய நிலையில் நந்தி இருப்பதை இன்றும் பார்க்கலாம். கோட்செங்கசோழனுக்கு குன்ம தோய் தீர்த்து அருளிய இத்தல இறைவனை, குன்ம நோய் உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபடுவதன் மூலம் தங்களது நோயிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலுக்கு ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள் நுழைந்தால், முன் உள்ள முகப்பு மண்டபத்தில் கொடிமரத்து விநாயகர் உள்ளார். கொடிமரம் இல்லை. கொடிமர விநாயகர் அடுத்து பலிபீடம், நந்தி உள்ளன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், கருவறையின் பின்புறத்துக்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்களும், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன.

கருவறை முன் மண்டபத்தில் கோச்செங்கட்சோழன், அரிவாட்டாய நாயனார், நால்வர் மூலத்திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. துவாரபாலகர்களைத் தொழுது, விநாயகரை வணங்கி உட்செல்லும்போது, மேற்புறத்தில் இருபுறமும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது, இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு தாயனாரைத் தடுப்பது, தாயனாருக்கும் அவர் மனைவிக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மகிழலாம்.

உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடராஜர், நால்வர், மனைவியுடன் அரிவாட்டாய நாயனார், கோச்செங்கட்சோழன் ஆகிய திருமேனிகள் சிறப்புடையவை. நடராஜ சபையில் ஆடற்கடவுள் சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகியோருடன் காட்சி தருகிறார். இத்தலத்திலுள்ள மூலவர் சிவலிங்கம், அழகான சிறிய திருமேனியுடன் நீணெறிநாதர் என்று பெயருடன் அருள்புரிகிறார். இறைவன் சந்நிதிக்கு வடகிழக்கில் வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை சந்நிதி கருவறையோடு சேர்த்து அமைக்கப்பெற்ற தனி சந்நிதியாக தனி விமானத்துடன் உள்ளது.

அரிவாட்டாய நாயனார்

தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலம் என்ற ஊரில் (இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது) வேளாளர் குலத்தில் தாயனார் என்பவர் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடம் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

தாயனாரின் பக்தியை உலகறியச் செய்ய இறைவன் திருஉளம் கொண்டு, அவருக்கு வறுமை ஏற்படச் செய்தார். வறுமையைக் கண்டு அடியார் மனம் தளராமல், தெய்வத் திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்கச் சென்றார். வேலைக்கு கூலியாகக் கிடைக்கும் செந்நெல்லைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். கார் நெல்லை தனக்கு உணவுக்கு பயன்படுத்திக்கொண்டார்.

இதன்பின்னரும், இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். வயல்களில் எல்லாம் செந்நெல்லே விளையுமாறு செய்தார். இவருக்குக் கூலியாக கிடைத்த செந்நெல்லை எல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்துக்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில், கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத் தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தனர்.

ஒருநாள், இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்துகொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். உத்தராயண காலமாதலால், வயல்களில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தன. தாயனார் பசியினால் கீழே விழப்போக, அவரை மனைவி தாங்கிக்கொண்டார். கூடையில் சுமந்துவந்த நைவேத்தியப் பொருள்கள் நிலத்தில் உள்ள வெடிப்பில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை.

எனவே, நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்துகொள்ளத் துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தைக் கண்டு, உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த வெடிப்பில், உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்றும் வெளிப்பட்டது. அத்திருக்கரம், தாயனாரின் கையைப் பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சத்தமும் கேட்டது.

இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன், இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத் துணிந்தமையால், இவருக்கு "அரிவாட்ட நாயனார்" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.

ஆலயத்தின் மற்ற சிறப்புகள்

தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலை கடைந்தனர். அப்போது மந்தாரர மலை சாயாமல் இருக்க, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று, மந்தார மலை சாயாமல் இருக்க தன் வலிமையான கூர்ம ஓட்டினால் தாங்கிக்கொண்டார். தன் பெருஞ்செயலால் மகாவிஷ்ணு செருக்குற்று கடலைக் கலக்,க சிவபெருமான் ஆமையைக் கொன்று அதன் ஓட்டை அணிந்துகொண்ட தலம் இதுவாகும். திருமால் கர்வம் நீங்கப்பெற்று இறைவனை வழிபட்டதாக ஐதீகம். மகாவிஷ்ணு வழிபட்ட கூர்மபங்கமூர்த்தி (லிங்கம்) சந்நிதி, பிராகாரத்தில் உள்ளது. இறைவனுக்கு வெள்ளியினால் ஆன கூர்ம உரு பதக்கம் இன்றளவும் இறைவனுக்கு அணிவிக்கப்படுகிறது.

தாயனார் தன் கழுத்தை அரிவாளால் அரிந்துகொள்ள முற்பட்டபோது, வயல் வெடிப்பில் இருந்து தன் திருக்கரத்தை நீட்டித் தடுத்து இறைவன் காட்சி கொடுத்தார். முதலில் நடராஜர் உருவில் காட்சி கொடுத்ததாகவும் பின்பு அம்மையப்பராக ரிஷபாரூடராகக் காட்சி கொடுத்ததாகவும் ஐதீகம். இது உச்சிகால வேளையில், ஒரு தை மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. தில்லையில் இருந்து நடராஜப் பெருமான் தை திங்கள் திருவாதிரை நாளில் இங்கு எழுந்தருள்வதாக ஐதீகம். தில்லையில் தை மாதம் திருவாதிரை நாளில் நடராஜருக்கு உச்சிகால பூஜை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லையில் உச்சிகால பூஜை வேளையில் நடராஜப் பெருமானை காணப்பெறாத பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள், தங்கள் ஞான திருஷ்டியால் நடராஜர் தண்டலையில் இருப்பதை அறிந்து இத்தலம் வந்து பெருமானை வழிபட்டனர். இதற்குச் சான்றாக, ஆலயத்தின் கீழ்மதில் சுவரை ஒட்டி உள்ள மண்டபத்தில், இந்த இரு முனிவர்களும் பூஜித்ததாகக் கருநப்படும் லிங்கத் திருமேனிகள் உள்ளன.

இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடியருளிய 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் சிதைந்துபோன 3 பாடல்கள் போக மீதியுள்ள 8 பாடல்களை இங்கு காணலாம்.

ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் நிலைத்த செல்வத்தை உடையவர்களாகப் பிறவிப்பிணி நீங்கப் பெற்றவராவர்.

1. விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே

சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்

கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்

நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.

2. இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்

திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்

புகழும் பூமக ளும்புணர் பூசுரர்

நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.

3. பரந்த நீலப் படரெரி வல்விடங்

கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்

சுரந்த மேதி துறைபடிந் தோடையில்

நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.

4. தவந்த என்புந் தவளப் பொடியுமே

உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்

சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்

நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.

11 பாடல்கள் கொண்ட இப்பதிகத்தின்

5, 6, 7-ம் பாடல்கள் சிதைந்துவிட்டன.

8. இலங்கை வேந்தன் இருபது தோளிற

விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்

சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்

நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.

9. கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்

றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்

செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்

நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.

10. கலவு சீவரத் தார்கையில் உண்பவர்

குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்

சுலவு மாமதிலும் சுதை மாடமும்

நிலவு தண்டலை நீணெறி காண்மினே.

11. நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்

தோற்று மேன்மையர் தோணி புரத்திறை

சாற்று ஞானசம்பந்தன் தமிழ்வல்லார்

மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.

சம்பந்தர் அருளி பதிகம் - பாடியவர் கரூர் குமார.சுவாமிநாத தேசிகர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com