சுமை

சாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து
சுமை

சாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து காற்று குளிரேறி அக்ரகாரத்தை வருடிக் கொண்டிருந்தது. 

வாசல் திண்ணையில் உட்கார்ந்து மனசுக்குள் பிரயாணம் செய்து கொண்டிருந்த சர்மா, முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டுத் தன்னுள்ளே கலைந்தார்.

‘யாரது?’

‘நான் அப்பாசாமி, சர்மா’ இருட்டும் கொஞ்சம் வெளிச்சமும் வந்து கொண்டிருந்த அப்பாசாமி மேல் விழ, பார்வைக்கும் மனசுக்கும் அடையாளம் தெரிந்தது.

‘வாங்க அப்பாசாமி, ரொம்ப அதிசயமா இருக்கு! அஞ்சரை மணிக்குக்கூடக் கோயில்லே பார்த்தேனே? குருக்களோட பேசிட்டு இருந்தீங்க…’

‘அதிசயமாத்தா இருக்கு..’ என்றவர் சர்மாவின் பக்கத்தில் உட்காரப் போனார்.

‘இருங்க, இருங்க. ஏம்மா…வனஜா, அந்தப் பாயை எடுத்துண்டு வா’

வனஜா பாய் எடுத்து வந்ததும், அதைத் திண்ணையில் படர்த்தி அப்பாசாமியை உட்கார வைத்தார்.

‘இப்பச் சொல்லுங்க…என்ன அதிசயம்?’

‘சர்மா..உங்களால நல்ல காரியம் ஒண்ணு ஆகணும். உங்களாலே முடியும்’

‘சொன்னாதானே ஆகும் ஆகாதான்னு தெரியும்?’

‘உங்க பையன் ஸோனல் மானேஜரா இருக்காரே, அந்த இன்ஷுரன்ஸ் கம்பெனிலே இப்போ நம்ம பையனுக்கு இன்டர்வியூ வந்திருக்கு. இவன் எம்.எஸ்.ஸி ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படிச்சிருக்கான். ஆபிஸர் போஸ்டாம். உங்க மகன் ரெகமண்ட் பண்ணினா உடனே கெடைக்கும்னு இவன் சொல்றான். நீங்க என்னோட நாளைக்கு மெட்ராஸ் வந்து, உங்க மகன் கிட்டச் சொல்லணும். சிரமம் பார்க்கக்கூடாது. நம்ம தேனீசுவரர் உங்களுக்கு எல்லா பாக்கியத்தையும் தருவார்’

சர்மா மெல்லக் கண்களை மூடிக் கொண்டார்.

அப்பாசாமி சொன்ன வார்த்தைகளை, உள்ளிருந்து தன் மனைவி கேட்டுக் கொண்டிருந்திருப்பாள் என்று உணர்ந்ததும் சர்மா, இன்னும் தன் மனசுடனே ஆழ்ந்து போனார்.

‘கேட்டியா சாரதா… இவரோட புள்ளைய அழைச்சிண்டு போயி உன்னோட சீமந்தபுத்திரன் முன்னால நிறுத்தி நா ரெகமண்ட் பண்ணனுமாம்… விதி விதின்னு சொல்றது இதுதான். வனஜாவோட கல்யாணம் வர்றது. என்கிட்டே கொஞ்சம் தான் பணம் இருக்கு. நல்ல வரன் வந்திருக்கு. பம்பாய்லே ஏர் இண்டியாவிலே இருக்கார். ஒரு நாலாயிரம் குடு. அடுத்த ஆறு மாசத்துல தவறாம உனக்குத் திருப்பிடறேன்னு சொன்னா, என்னமா ஆகாசத்துக்கு எகிறினான் உன் புத்திரன்? ‘வரிசையா நாலு பெத்து அழகா வச்சிருக்கே…ஒவ்வொண்ணுக்கும் நான் பணம் குடுத்துண்டே இருந்தா ஸோனல் மானேஜர் என்ன, சேர்மன் ஆனாலும் என்னோட சம்பளம் போறாது. மொதல் பண்ணினதே என்னோட ரிடையர்மெண்ட்வரைக்கும் வரும். இனிமே யாருக்கும் ஒரு சல்லிக்காசு தர்றதா இல்லே. சிம்பிளா, எவனாவது சமையல்காரன், சர்வர், கோயில்ல பூக்கட்டறவனாப் பார்த்துக் குடுங்கன்னு கூடப் பொறந்த தங்கைன்னு நெனைக்காமக் கூட கல் மனசாப் பேசினான். சர்தான் போடான்னு வந்துட்டேன். இன்னும் பத்து நாள்ல கல்யாணம், என்ன செய்யறதுன்னு உட்கார்ந்து மனசுல தேனீஸ்வரரைக் கேட்டுட்டிருந்தேன். அப்பாசாமி வர்றார். ஊர்ல பெரும்புள்ளி. ஒரு தெருவையே வாடகைக்கு விட்டிருக்கார். எதிர்த் தோப்பு முழுக்க அவரது. பையனுக்கு வேலை வேணும். ரெகமண்ட் வேணும். பண்றது யாரு? நான் கோயில் ஜீவனம். அக்ரஹாரத்ல நீளமா வீடு. காரை பேர்ந்து இன்றைக்கோ நாளைக்கோன்னு ரேஷி காத்திண்டு இருக்கு. இதுல உன்னைப் பெத்து எம்.ஏ.படிக்க வச்சு, விழாதவன் கால்ல விழுந்து இன்ஷூரன்ஸ் கம்பெனிலே சேர்த்துவிட்டேன். இந்த நாற்பத்தஞ்சு வயசுல, லண்டன் லாயிட்ஸ் கம்பெனிலே டிரெயினிங் எடுத்து, மேற்கொண்டு படிச்சு ஸோனல் மானேஜர் ஆயிருக்கே. ரொம்ப சந்தோஷம். மனசு புல்லரிக்கிறது. ஆனா உன்னோட புத்தி, மனோபாவம் தான் சாக்கடையா இருக்கு. கடைசியா ஒரு தங்கை இருக்காளே. பி.யூ.ஸி படிச்சிட்டு வாசலுக்கும், கொல்லைக்கும் நீளமா அலைஞ்சு ஆகாச நீலமே கதின்னு இருக்காளே, அவளை நாமெல்லாமா சேர்ந்து கரையேத்திவிட வேண்டாமா? நீயான்னா அந்த ஆகாசத்துக்கே எகிறிக் குதிக்கறே. உன்னோட காசும் வேண்டாம்னு வந்திட்டேன். இப்ப என் ரெகமண்டேஷனுக்கு இவரு வந்திருக்கார். முடியாதுன்னு சொல்ல முடியாது. கோயில் மானேஜிங் டிரஸ்ட்டி. ஆனால் பஞ்சமாப் பாதகன். என்ன செய்யறது?’

‘என்ன சர்மா பேச்சே மறந்து போச்சா…? என்று அப்பாசாமி மனசிச்ன் மேகங்களை கலைத்தார்.

‘இல்லே..என்னோட சன், அப்படி எல்லாம் ரெகமண்ட் பண்ணுவான்னு தெரியலே. அப்படிப் பண்ணினாலும் அவா கம்பெனிலே அதைக் கன்ஸிடர் பண்ணுவாளோன்னும் தெரியலே. அதைத்தான் யோசிச்சேன்..’ என்று சர்மா மெல்லிய குரலில் சொன்னார்.

‘கல்லெடுத்து அடிப்போம். மாங்கா விழுந்தா விழட்டும். முயற்சிதானே?.. நாளைக்குக் காலம்பற வண்டி ஏறிடலாம். ரெண்டு நாள்ல திரும்பிடலாம். என்ன?

’வனஜா கல்யாணம் பத்து நாள்ல வர்றது. தலைக்கு மேலே காரியம் கிடக்கு. இப்பப் போயி….’

‘என்ன காரியம்? பணத்த விட்டெறிஞ்சா அதது கால்ல விழுகாதா… என்ன சிரமம்னேன்..’

‘பணமே சிரமமா இருக்கே.’

‘இருக்கறதுதான். நாளைக்கு நம்ப காரியத்தை கவனிச்சிடலாம். மறுநாளே வந்திடலாம். வேலை கிடைச்சா எனக்கும் திருப்தியா இருக்கும். மத்த நாலும் அரைகுறைப் படிப்பு தோப்பு தொறவுன்னு இருக்கு. இவன் ஒருத்தனாவது படிக்கணுமேன்னு ஆசைப்பட்டேன். அது நடந்திருக்கு. படிப்புக்கு தகுந்த உத்தியோகமும் இருந்தா மனசுக்கும் மத்த ஜனங்களுக்கும் ஒரு பிடிப்பா இருக்கும். உங்க முயற்சியினாலே அவனுக்கு ஒரு விளக்கை ஏத்திக் குடுங்க. அவ்வளவுதான் சொல்லுவேன்.’

….

‘என்ன சர்மா, பேச்சே வர்லியே?’

‘சரி…நாளைக்குப் பொறப்பட்டுடலாம்’

‘ரொம்ப சந்தோஷம்…அப்ப நான் வரட்டுமா?’

‘சித்த இருங்க…காபி போட்டுண்டு இருக்கா. ஒரு வாய் குடிச்சிட்டுப் போங்க..’

‘இங்க இருந்திட்டே எப்படிக் காபி போட்டுட்டிருக்கிறது தெரியுது?’

‘வாசனைதான்…’

வனஜா, இரண்டு டம்பளர்களில் காபி கொண்டு வந்தாள்.

தோப்பிலிருந்து காற்றின் குளிர் வாசல் நடை தாண்டி, உள்ளே வந்து உடம்பு தழுவி, உள் நரம்புச் சில்லிட வைத்தது.

அந்தச் சில்லிப்புக்கு காபி இதமாய் இருந்தது.

‘என்ன மந்திரம்யா பண்றீங்க? காபி இவ்வளவு மணமா தேவாமிர்தமா இருக்குது. எந்தக் கம்பெனி பவுடர் வாங்கறீங்க?’

‘நாங்களே வறுத்து அரைச்சிக்கறோம்’

‘அதுதானே…சரி வரட்டுமா?’

சர்மா கல்யாணத்தினால் தவித்துப் போனார். நாலைந்து இடத்தில் கேட்டிருந்த பணம் மெல்ல நழுவிக் கொண்டிருந்தது. அஸ்தியில் ஜுரம் பற்றிக் கொள்ளும் போலிருந்தது.

ஒரு காலையில் கோயிலுக்குள் போனவர் தேனீசுவரர் எதிரே, தூணோரம் தூணாய்ச் சரிந்து சாய்ந்தும் கொண்டார்.

‘இனிமே நான் எவன் கிட்டேயும் கையேந்தப் போறதில்லே. இத்தனை வருஷம், உன்னை விட்டா வேறு கதியில்லேன்னு இங்கியே, நாயா கெடந்ததுக்கு, இந்த வழி பண்ணி வச்சிருக்கே. உன் பாடாச்சு, அந்தப் பொண்ணு பாடாச்சு!...’ என்று சொல்லில்க் கொண்டு ஒரு நாள் முழுவதும் கிடந்தார்.

அன்றைய சாய்ந்திரம், கோயிலில் பூக்கட்டும் சண்முகம் உள்ளே ஓடி வந்தார்.

‘சாமி, உங்களைத் தேடிட்டு யாரோ வர்றாங்க. பம்பாயாம். உங்க சம்பந்தி ஆகிறவர்னு சொன்னாங்க.’

சர்மா எழுந்து உள் பிரகாரத்தைக் கடக்க முயற்சிக்கையில், எதிர்கால சம்பந்தியே வந்துவிட்டார்.

‘ஆத்துக்குப் போனேன். இங்கே இருப்பேள்னு சொன்னா’ என்றவர் அழைத்துப் போனார்.

‘கல்யாணப் பத்திரிகை காஞ்ச் ஸ்வாமிகள் அனுக்கிரகத்துடன்னு போட்டிருந்தோமில்லையா? இப்படிப் போட்டுட்டு வரதட்சணை சீர் செலவு பாத்திரம் பண்டம்னு பொண்ணாத்திலே ஆயிரக்கணக்கா வாங்கினா என்ன அர்த்தம்? இதுல ஸ்வாமிகளோட அனுக்கிரகம் எப்படி வரும்னு பையன் கேக்கறான்!’

‘எனக்கு ஒண்ணும் வேண்டாம். பையன் சொல்றது வாஸ்தவமா படறது. பொண்ணை முகூர்த்த மண்டபத்துக்கு அனுப்பிச்சு வையுங்கோ. மத்தது நான் பாத்துக்கறேன்….’

‘நிஜமாவா?’

‘தேனீசுவரர் சத்தியமா..’

சர்மா, அந்த இடத்தில் தேனீஸ்வரர் இருக்கும் திசை நோக்கி தண்டனிட்டார்.

கல்யாணத்துக்கு முந்தின நாள் தான் மகன் மனைவியுடன் வந்தான். மூன்றாவது மனுஷன் போல நடந்து கொண்டான். முகூர்த்தம் முடிந்ததும் தங்கையின் கையில் இரண்டு பவுன் சங்கிலி ஒன்றைக் கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொன்னான். அவள் பம்பாய்க்கு கணவன் வீட்டுக்குப் போகும் போது செச்ன்னையில் தன் வீட்டில் வந்து சில நாட்கள் தங்கச் சொன்னான். மாப்பிள்ளையிடமும் அதைச் சொன்னான்ல் இருவரும் தலையாட்டினார்கள்.

சர்மா இதை லட்சியம் செய்து கொள்ளவில்லை. வந்தவர்களை உபசாரம் பண்ணிக் கொண்டிருந்தார்.

‘ஏன்னா, உங்களுக்கு விஷயம் தெரியுமா? அப்பாசாமியின் பையனுக்கு வேலை ஆயிடுச்சாம். நம்ப பாச்சா சிபாரிசு பண்ணித்தான் கெடைச்சுதாம்.’ என்று மனைவி வந்து சொன்னாள்.

பாச்சா – மகன். மத்தியானம் பதினோரு மணி ரெயில் ஏறி சென்னைக்குப் போய்க் கொண்டிருப்பான்.

‘ம். அதற்கென்ன?’

‘இப்பத்தான் அப்பாசாமி சம்சாரம் சொல்லிட்டுப் போறா. அப்பாசாமி வனஜா கைல ஜைநூறு ரூபா கொடுத்து என்னோட ப்ரசண்டா வச்சுக்கோன்னு குடுத்த்ப் போனார். நீங்க, அந்தச் சமயத்துல சமையல்காரர் நாணாவோட பேசிட்டிருந்தேள்’

‘என்னது, அப்பாசாமியா? ஐநூறு ரூபாயா? பிரசண்டா…’ என்று கோபத்துடன் கேட்டார்.

‘அந்தப் பயலே ஆகாதுன்ண்டு முடிவு பண்ணி இருக்கேன். அவன் போட்ட ரெண்டு பவுனையும் அவன் பொண்ணு கல்யாணத்துல திருப்பிப் போடணும்னு இருக்கேன். அவனோடது எனக்கோ என் பெண்ணுக்கோ ஒரு சல்லிக் காசு கூட வேணாம். அவன் சிபாரிசு பண்ணி கெடச்ச வேலைக்காக, அந்த அப்பாசாமி லஞ்சமா ஐநூறு ரூபா குடுத்துட்டுப் போறான். அது மட்டும் எதுக்கு?’

‘திருப்பித் தர போறேளா?’

….

‘அவர் என்ன நெனைச்சுக்குவார்?’

‘என்ன நெனைசாலும் அது சுமைதாண்டி…’

‘அப்புறம் யோசிக்கலாம். மத்த வேலையைப் பாருங்க…’

‘சர்மா, சம்பந்தி கூப்பிடறார்.’ என்று நாரணபுரத்து மாமா வந்து அழைத்தார்.

ஒரு வாரத்தில் சர்மா பழைய சர்மா ஆகிவிட்டார். கல்யாணச் சந்தடி மறைந்திருந்தது. கல்யாணத்தில் மிச்சமான மளிகைச் சாமான்கள் இரண்டு மூன்று மாசத்துக்கு வரும்.

‘ஏன்னா, காபிப் பவுடர்தான் ஏழெட்டு கிலோ வந்திருக்கு. பழசானா வாசம் போயிடும்’

‘கல்யாணிகிட்டச் சொன்னேன். எடுத்துட்டுப் போம்மான்னு அவ என்னடான்னா பணம் வாங்கிட்டா எடுத்துட்டுப் போறேங்கிறா. அந்த அளவுக்கு அவ பணக்காரி ஆயிருக்கா. அவகிட்டப் பணம் வாங்கிக்கிற அளவுக்கு நான் ஏழையாயிருக்கேன்’

கல்யாணி, சர்மாவின் தங்கை.

‘சொல்லிட்டுப் போறா, விடுங்க’

‘என்னத்தை விடறது. என்னை அபிஷ்டுன்னு எல்லாரும் வச்சிருக்கா இந்த அப்பாசாமி மகனுக்கு வேலை வாங்கிட்டு, ஐநூறு ரூபா குடுத்திட்டுப் போயிருக்கார். இல்லைன்னா கொடுப்பாரா?’

‘அவரு குடுத்தா என்ன கொறைஞ்சா போயிடுவாரு?’

‘நானில்லடீ குறைஞ்சு போவேன்’.

வாசல் கதவைத் திறந்து கொண்டு யாரோ வரும் சத்தம் கேட்டது. அப்பாசாமிதான்.

‘சர்மா அக்கடான்னு உட்கார்ந்திருக்கீங்க. உங்க புண்ணியத்துல பையனுக்கு வேலை கெடச்சிருக்கு’ என்று ரொம்ப நன்றி பாராட்ட ஆரம்பித்தார்.

சர்மாவின் மனைவி காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

‘அற்புதம், அற்புதம். இந்தக் காபியக் குடிச்சிட்டா ஒடம்பும் மனசும் வெடுக்குன்னு விடுதலையாகி ஆகாயத்துல சஞ்சாரம் பண்றாப்ல இருக்கு.’

அப்போதுதான் சர்மாவுக்கு அந்த யோசனை எழுந்தது.

‘அப்பாசாமி கல்யாணத்துக்குன்னு அரைச்ச காபி பவுடர்ல ரொம்ப மீந்து போச்சு. நீங்க ரெண்டு கிலோ கொண்டு போங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பத்து நிமிஷத்தில் மூன்று கிலோவுக்கு மேல் இரண்டு பிளாஸ்டிக் உறைகளில் காப்பிப் பொடியைப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

‘என்னது சர்மா இது?’ என்று சொல்லில்க் கொண்டு வாங்கிக் கொண்டார் அப்பாசாமி.

பதிலுக்கு, ‘எடுத்திண்டு போங்க. காபிப் பொடியத்தான் என்னால் குடுக்க முடியும்’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு, ‘அப்பாசாமி, கல்யாணத்துக்கு வந்து என்னை ரொம்ப கெளரவிச்சீங்க. சம்பந்திக்கு ரொம்ப புடிச்சிருந்தது’ என்று பேச்சின் திசையை மாற்றினார்.

அப்பாசாமி ரொம்ப சந்தோஷப் பட்டுக் கொண்டே ரொம்ப நேரம் பேசிவிட்டுப் பின் புறப்பட்டுப் போனார்.

‘இந்த யோசனை எப்படி வந்தது?’ என்று கேட்டுக் கொண்டு மனைவி வந்தாள்.

‘அப்பாசாமி நாம செஞ்ச உதவிக்கு லஞ்சமா ஐநூறு ரூபா கொடுத்திட்டுப் போறார். உன்னோட மகன் ரெண்டு பவுன் சங்கிலியைக் குடுத்துட்டுப் போறான். எவனும் உள் அன்போடு செய்யலை. அவனவன் கெளரவத்தைக் காப்பாத்திட்டா என்னோட கெளரவத்தை காப்பாத்த வேணாமா? இப்ப என்னால குடுக்க முடிஞ்சுது இந்தக் காபிப் பொடிதான். சொமை கொஞ்சம் எறங்கினாப்ல இருக்கு. பாச்சா பொண்ணு கல்யாணத்துல அந்தச் சங்கிலியைத் திருப்பிப் போட்டா பின்னால மீதிச் சொமையும் எறங்கிடும்’ என்றார் சர்மா. தூரத்து தோப்பையும், அதற்கு மேல் தெரிந்த வானத்தின் இருட்டுப் பூச்சையும் சில நட்சத்திரங்களையும் பார்த்து கொண்டு.

மனைவி அவர் பேச்சின் உண்மையை உணர்ந்து நின்றாள்.

- பிரதிபா ராஜகோபாலன்  (தினமணி கதிர் 29.5.1981)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com