அவர்கள் வித்தியாசமானவர்கள்!  

உஷா தைரியமாக புரொபசர் திருமதி பிரமீளா கபூரிடம், ’பிராஸ்டிடூஷன் அண்ட் ஸ்டூடன்ஸ்’ பற்றி எழுதி அடுத்த மாத கருத்தரங்கிற்குச் சமர்பிப்பதாகச் சொன்னாள். ஒரு கணந்தான் அப்புறம் பயம் வந்து விட்டது.
அவர்கள் வித்தியாசமானவர்கள்!  

உஷா தைரியமாக புரொபசர் திருமதி பிரமீளா கபூரிடம், ’பிராஸ்டிடூஷன் அண்ட் ஸ்டூடன்ஸ்’ பற்றி எழுதி அடுத்த மாத கருத்தரங்கிற்குச் சமர்பிப்பதாகச் சொன்னாள். ஒரு கணந்தான் அப்புறம் பயம் வந்து விட்டது. தன்னிடமிருந்து அவ்வார்த்தைகள் எவ்வாறு வெளிப்பட்டன என்று யோசித்துப் பார்த்தாள்.
நிறைய அம்மாதிரிப் பெண்களைப் பற்றி ஒரு சூழலில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் பெண்களைப் பற்றி தமிழில் உஷா நிறையவே படித்திருந்தாள். அந்தப் படிப்பு அவளுக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்று துயரம் அடையும் பெண்கள் பால் இரக்கமும், பச்சாதாபமும் கொள்ள வைத்திருந்தது. அதுவே அவளையும் அறியாமல் அவர்களைப் பற்றி இன்னும் நெருக்கமாகப் பழகி ஒரு கட்டுரையை எழுதத் தூண்டியது.
புரொபசர் பிரமீளா கபூர் உஷாவைப் பார்த்து மெள்ள புன்னகை பூத்தாள்.
புரொபசர் பெரும்பாலும் சிரிக்க மாட்டாள். முகம் எப்பொழுதும் உணர்ச்சியற்று இருக்கும். இப்போது சிரிப்பதற்கு எதற்கு? 
உஷாவிற்கு திடீரென்று பயம் வந்தது. பயத்துடனும் கலவரத்துடனும் வகுப்பை நோட்டமிட்டாள். ஆனால் யாரும் அவளைக் கவனிக்கவில்லை. தங்களுக்குள் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். அது அவளுக்கு ஆறுதல் அளித்தது. நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.
சொன்னது போல் கட்டுரை எழுத முடியுமா? என்ற ஐயம் வந்தது. அவளோ பம்பாய்க்குப் புதிது. வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. உஷா பி.ஏ. பாஸ் பண்ணிவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கதைப் புத்தகங்கள் படித்துக்கொண்டு- டைப் கற்றுக் கொண்டிருந்தாள். பம்பாயில் ஒரு நிறுவனத்தில் காபி ரைட்டராக இருந்த அவள் இரண்டாவது அண்ணன் அவளை அழைத்துக் கொண்டு வந்து எம்.ஏ. ஜெர்னலிஸத்தில் சேர்த்து விட்டான்.
உஷாவுக்குப் பம்பாயும், படிக்கும் புதிய துறையும் மனசுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஏதோ எழுதி சாதிக்க வேண்டும் என்று மனத்தில் அழுத்தமாகத் தீர்மானித்துக் கொண்டாள். தீர்மானத்தோடு படித்ததால் வேலை செய்தாள். உஷா ஆங்கிலம் கல்லூரியில் நன்றாகச் செல்லுபடியானது. அதோடு அவள் அறிவும், அழகும் பழகும் பாங்கும் விரைவிலேயே ஒரு முக்கியப் புள்ளியாக்கி விட்டது. எனவே தான் புரொபசர் பிரமீளா கபூர் ஜூனியர் மாணவியான அவளிடம் செமீனாருக்கு கட்டுரை எழுதி வாசிக்கும்படி கேட்டுக்கொண்டாள்.
“குட், வெரி குட். ரொம்ப நல்ல சப்ஜெக்ட்” பிரமீளா கபூர் பாராட்டி உரைத்தாள்.
உஷா பதிலொன்றும் சொல்லாமல் புரொபசரையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னால் அதைச் சாதிக்க முடியுமா என்ற பயம் வந்து கீழே அழுத்திக்கொண்டிருந்தது.
“ஐ வில் ஹெல்ப் யூ” என்று விமலா கன்னா அவளுக்கு உதவ முன்வந்தாள். அவள் பம்பாய்வாசி. அவள் குடும்பம் மூன்று தலைமுறையாக பம்பாயிலேயே வசிக்கிறது. பம்பாயின் ஒவ்வொரு பகுதியும்
அவளுக்குப் பரிச்சயமானது. அவள் வீட்டிற்குக் கூட ஒரு முறை உஷா சென்றிருக்கிறாள். அங்கு தான் விமலா கன்னாவின் அத்தையை, கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் சமூக சேவையையே தனது லட்சியமாகக் கொண்டு உழைக்கும் ராணி கன்னாவைப் பார்த்தாள்.
அவள் ஓர் அற்புதமான சமூக சேவகி. அவள் உதவி கிடைத்தால், கட்டுரையை நன்றாக எழுதி விடலாம் என்றூ யோசித்துக் கொண்டிருந்த போது- விமலா கன்னா உதவ முன் வந்தது. தன் வேலையின் பளுவையே குறைத்து விட்டது போலிருந்தது. அச்சமெல்லாம் அகல, சாதித்து விடலாம் என்று தீர்மாணித்துக் கொண்டாள்.
இரண்டு பேரும் ஒரு மாலைப் பொழுது முழுவதும் உட்கார்ந்து யோசித்துப் பேசிப்பேசி, என்ன மாதிரியான கேள்வி கேட்பது; எப்படிப் பேசி, உண்மையான தகவல்களை வெளிக் கொண்டு வருவது? எழுதி, அடித்து, திருத்தி மறுபடியும் எழுதி ஒரு கேள்வித் தாளை தயார் பண்ணினார்கள். கண்கலை மூடிக் கொண்டே விமலா கன்னா கேட்டுக் கொண்டாள். எல்லாம் சரியாக வந்திருப்பது போல அவளுக்குத் தோன்றியது.

கேள்விகள் பொய்யைக் களைந்து மெய்யைக் கொண்டு வந்து விடும் என நம்பினாள். ஆனால் கேள்விகள் கொஞ்சம் நீளமாக இருப்பது போல விமலா கன்னாவுக்குத் தோன்றியது. அதைமாற்றலாமாவென்று நினைத்தாள்.
‘வேண்டாம், அப்படியே இருக்கட்டும். கேட்கும் போது மாற்றிக் கொள்ளலாம்’ என்று விட்டு விட்டாள்.
புதன் கிழமை இரண்டு பேரும் நேரடி இண்டர்வியூவுக்குப் போவதாகத் தீர்மானித்துக் கொண்டு பிரிந்து சென்றார்கள்.
அன்று புதன் கிழமை.
உஷா இரண்டு மணி நேரத்திற்கு முன்பே விமலா கன்னா வீட்டிற்குச் சென்று விட்டாள். அவல் இல்லாமல் இண்டர்வியூ பண்ண முடியாது. இந்தியோ, மராட்டியோ தெரியாமல் காரியம் நடக்காது என்பது உஷாவுக்கு இரண்டு நாளிலேயே தெரிந்து விட்டது. உஷா உள்ளே நுழைந்த போது- விமலா கன்னா தயாராகிக் கொண்டிருந்தாள். இவளைக் கண்டதும் ஒரு புன்னகை பூத்தாள்.
“இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும்.”
“எஸ்-” உஷா நாற்காலியில் உட்கார்ந்து, தயாரித்த கேள்விகளை இரு முறை நோட்டம் இட்டபடியே டீயைப் பருகினாள்... விமலா கன்னா வீட்டு டீ அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்பொழுது வந்தாலும்
டீ தான் கேட்டு வாங்கிக் குடிப்பாள். அப்புறம் அவள் வரும் பொழுதெல்லாம் டீ வருவது ஒரு பழக்கமாகி விட்டது.
உஷா டீயைக் குடித்து விட்டு கப்பைக் கீழே வைத்தாள்.
“புறப்படலாமா?” விமலா கன்னா பையை எடுத்துக்கொண்டு முன்னே வந்தாள்.
“ஓ!” உஷா அவசரம் அவசரமாக ஃபைலை எடுத்துப் பையில் திணித்துக் கோண்டு அவள் பின்னேயே சென்றாள்.
இருவரும் வாசலுக்கு வந்ததும் டாக்ஸி வந்தது. விமலா கன்னா கையை நீட்டினால். டாக்ஸி நின்று, இரண்டு பேரும் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.
விமலா கன்ன இந்தியில் டாக்ஸி டிரைவரிடம், போக வேண்டிய இடத்தைப் பற்றிச் சொன்னாள். அவன் ஒருமுறை இருவரையும் திரும்பிப் பார்த்து விட்டு தலையசைத்தான்.
154, 73, 128- என்று வீட்டின் முகப்பில் தென்படும் பல எண்களைக் கடந்து மெதுவாக டாக்ஸி சென்று கொண்டிருந்தது. விமலா கன்னா தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
உஷாவுக்குத் தெருவில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. கடைகள், ஓட்டல்கள், டாக்ஸி வியாபாரம் எல்லாம் எங்கும் போலவே தான் நடந்து கொண்டு இருந்தது. அந்தத் தெருவை வித்தியாசப்படுத்தும் அம்சம் என்ன? அதைக் கண்டறிவது என உஷா தீர்மானித்துக் கொண்டாள்.
“டாக்ஸி நில்லு.” விமலா கன்னா.
123= நம்பர் வீட்டின் முன்னே டாக்ஸி நின்றது. ஒரு கணம் விமலா கன்னா நிமிர்ந்து நம்பரை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். அப்புறம் படீரென்று கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினாள்.
உஷா இறங்கலாமா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தாள். பயம் வந்து விட்டது. தான் அந்த வழிக்கே அவ்ந்திருக்கக் கூடாது என்ரு சொல்லிக் கொண்டாள். சாலயில் போகும் எல்லோரும் தன்னையே வேடிக்கை பார்ப்பது போல அவளுக்குத் தொன்றியது. டாக்ஸியில் இருந்து கீழே இறங்காமலேயே விமலாகன்னாவைப் பார்த்தாள்.
“இறங்கு உஷா.” விமலா கன்னா படபடத்தாள். கையை முன்னே நீட்டினாள்.
உஷாவுக்குத் தப்பித்துக் கொண்டு போக வழியெதுவும் தென்படவில்லை. வரும் போதிருந்த உற்சாகமும், குதூகலமும் வடிந்து விட்டது. அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தான் மனத்தளவில் ரொம்ப சனாதனி தான் போலும் எனத் தீர்மானித்துக் கொண்டு புடவைத் தலைப்பை இழுத்து தலையில் போட்டுக் கொண்டு ஃபைலால் பாதி மூஞ்சியை மூடிக் கொண்டு தலை குனிந்தபடி டாக்ஸியை விட்டுக் கீழே இறங்கினாள்.
“ரொம்ப வெட்கமா?”
“உள்ளே போ.”
விமலா நிமிர்ந்து அவளைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்து விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவள் போகும் வேகம் உஷாவுக்கும் பிடித்திருந்தது.அவளும் தன்னைப் போல கொஞ்சம் பயந்திருப்பது போல உஷாவுக்குத் தோன்றியது.
இரண்டு பேரும் மாடிப்படியேறி உள்ளே சென்றார்கள். பெரிய ஹால், சுவரை ஒட்டி இரண்டு சோபா, சோபாவில் வரிசையாகப் பெண்கள் பெல்பாட்டத்தில், மேக்ஸியில், புடவையில், கண்களுக்கு மை தீட்டிக் கொண்டு, தலைக்கு ஷாம்பூ போட்டு கேசத்தைப் பறக்கவிட்டுக் கொண்டு- அழுத்தி சீவிக் கொண்டு--.
உஷா எண்ணிப் பார்த்தாள். ஒன்பது பெண்கள், ஏதோ நாடக அரங்கில்- சினிமா கொட்டகையில் உயர்ந்த வகுப்பு வாங்கிக் கொண்டு படம் ஆரம்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருப்பது போலக் காத்திருக்கிறார்கள்.
அவளுக்குப் புத்தகத்தில் படித்ததை விட எல்லாம் சூழல் வேறாகவும்- வித்யாசமாகவும் இருந்தது. கன்னத்தில் கையை அழுத்திக் கொண்டு மறுபடியும் அவர்களை நோட்டம் விட்டாள். மூன்றாவதாகஉட்கார்ந்திருந்த ஒருத்தி- உஷாவைப் பார்த்து புன்னகை பூத்தாள். அவள் வருத்தமாக- துயரத்தில் அமிழ்ந்து கிடப்பது போல இவளுக்குத் தெரியவில்லை. விருந்துக்கு வந்திருப்பது போல சந்தோஷத்துடன் இருக்கிறாள். அது பொய்யா- தான் காண்பது எல்லாம் வெறும் மாயமான தோற்றமா- இல்லை, சந்தோஷமாக சாதாரணமாக அதை எடுத்துக் கொண்டு எல்லோரையும் போல இருக்கிறார்களா?

உஷாவால் தீர்மாணிக்க முடியவில்லை. திரும்பி விமலா கன்னாவைப் பார்த்தாள்.
விமலா கன்னா இரண்டு பெண்களிடம் இந்தியில் பேசி விட்டு, உஷா பக்கம் திரும்பி, “இவர்கள் கர்னாடகப் பெண்கள். நமது இண்டர்வியூவுக்குச் சம்மதத்திருக்கிறார்கள்” என்றால் ஆங்கிலத்தில்.
“தேங்ஸ்”
உஷா எல்லோரையும் பார்த்து புன்னகை பூத்தாள்.
“ப்ளீஸ் சிட்.” ஒருத்தி ஒதுங்கி இடம் கொடுத்தாள். உஷா திரும்பிப் பார்த்தாள். விமலா கன்னா நான்கு பெண்கள் தள்ளி உட்கார்ந்து இந்தியில் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள். வெளியே இருந்த போது மனத்தில் இருந்த கூச்சமெல்லாம் கரைந்து விட்டது போல இவளுக்கும் இருந்தது.
“இங்கிலீஷ் தெரியுமா?”
“பேசினால் புரியும்.”
“என்ன படிச்சி இருக்கே?”
“டென்த்”
“பெயரு?”
“சீதா தேவி.”
“எப்படி இங்கே  வந்தே? யார் உன்னை இங்க கொண்டாந்து விட்டா?”
“அதுவா?”
“உம்” உஷா அவள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். யோசித்தாள், ஏதோ ஒரு கதை வரும் என நினைத்தாள். அவளுக்குக் கதை வேண்டாம். உண்மைச் சம்பவம் வேண்டும். நிஜம்
வேண்டும். அசலான நிஜத்தை அடைவது எப்படி?
உஷா, சீதாதேவி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வாலிபன் உள்ளே வந்தான். சுவரில் நன்றாக சாய்ந்து கொண்டு எல்லோரையும் ஒரு முறை நோட்டமிட்டான். எல்லோருடைய கண்களும் ஒரு முறை அவன் பக்கம் சென்று திரும்பின. உஷா
சூழ்நிலையை மனதில் பதித்துக் கொண்டு விட்டாள். கட்டுரைக்கு ஆதாரமான செயல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் எவ்வளவை அடைய முடியுமோ? அதையெல்லாம் அடித்துக் கொண்டு போய் விட
வேண்டும். பார்வை விமலா கன்னா பக்கம் சென்றது. அவள் பேசிக் கொண்டு இருந்தாள். அவளுக்குக் காட்சியும், சாட்சியும் முக்கியமல்ல; ஏனெனில் அவள் கட்டுரை ஒன்றூம் தயாரிக்கவில்லை.
உஷா வாலிபனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சீதாதேவி புன்னகை பூத்தாள்.
அவன் சிரித்துக் கொண்டு, முன்னே வந்து, திடீரென உஷா பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மீது கை போட்டான். அவள் பயந்து மிரண்டு போய் எழுந்தாள். அவன் கையைப் பற்றினான்.
“அது இல்லை” என்றால் சீதாதேவி அவனிடம்.
“ஏன் இல்லை?” பேச்சு தடுமாறியது. ஆனால் உஷா கையை விட்டு விட்டான்.
“அது என் கெஸ்ட்?”
“உன் கெஸ்டா?”
அவன் பெரிதாக நகைத்து, “உன் கெஸ்ட் என் கெஸ்டா தான் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே” என்றான்.
சீதாதேவி மறுத்துத் தலையசைத்தாள்.
அவன் வெறித்து உஷாவையே பார்த்தான். விமலாகன்னா முன்னே வந்து, “ஒன்னும் பயப்படாதே. தைரியமா இரு” என்றாள். ஆனால் உஷாவுக்குப் பயமாகத்தான் இருந்தது. வாழ்க்கை என்பது புத்தக நிகழ்ச்சி இல்லை. அது வேறு ஒன்று. தப்பிக்க ஏதாவது முயற்சி பண்ண வேணும். என்ன செய்வது என்று உஷாவுக்குத் தெரியவில்லை. மிரண்டு போய் எல்லோரையும் பார்த்தாள். அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள், தான் தப்பிக்க வழியே இல்லை போலும் என நினைத்தாள். தைரியம் எல்லாம் போய்- கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்து விட்டது..
சீதாதேவி ஓரடி முன்னெ வந்து அவன் முன்னே நின்று கொண்டு, “இப்ப உனக்கு என்ன வேணும்?” என்றாள் அவளிடம்.
“அவ-” சிரித்துக் கொண்டே உஷாவைக் காட்டினான்.
“இல்லை.”
“இல்லை. ஏன் இல்லை?”
“இல்லைன்னா இல்லை தான்.”
“அப்படியா?” அவன் பார்வை எல்லோர் மீது ஒருமுறை சென்று திரும்பியது. அப்புறம் திடீரென்று உஷா மீது பாய்ந்து கட்டியணைத்தான்.
“போடா, அயோக்கியப் பயலே!” சீதாதேவி அவன் கையைப் பற்றி இழுத்துத் தள்ளி அடி வயிற்றில் ஓர் உதை விட்டாள். அவன் பெரிதாகக் கத்திக் கொண்டு, கீழே விழுந்தான். அப்புறம் விழுந்த வேகத்தில் எழ கையை தரையில் ஊன்றினான். ஒருத்தி அவன் கையைத் தட்டி விட்டு, மூஞ்சியில் குத்தினாள்.
உஷாவால் அதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க முடியவில்லை.பயத்தில் உடம்பு நடுங்கியது. பின்னால் நகர்ந்து விமலா கன்னா கரத்தைப் பற்றிக் கொண்டு, “வா, போயிடலாம்” என்றாள்.
“உம்.”
இருவரும் வேகமாக மாடிப்படி இறங்கி சாலைக்கு வந்தார்கள்.

தினமணி கதிர்- 16.01.81

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com