நரகமும் சொர்க்கமும் 

பட்டணத்துக்காரனிடம் அவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் திரும்பத் திரும்ப ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். மாதந்தோறும் சம்பளப் பணத்தை  ஒழுங்காக மணியார்டர் செய்து விட வேண்டும் என்பது தான் அது.
நரகமும் சொர்க்கமும் 

பெற்ற குழந்தையை அனுப்பி வைப்பது என்பது லேசானதல்ல. அதுவும் பட்டணத்துக்கு. பார்க்க வேண்டுமென்று நினைத்தாலும் கூட இரண்டு நாள் ஆகுமாமே போய் வர. அடேயப்பா உலகம் ரொம்பத்தான் நாகரீகமாகி விட்டது. ஒரு இடத்துக்குப் போய் வரவே இப்படி ஒரு பாடா? 
"இந்தாம்மா! இந்தக் கதையெல்லாம் வேண்டாம்... உனக்குப் புட்ச்சிருந்தா சொல்லு... நான் வேற ஊடுங்களுக்குப் போகணும்... நீ ஒருத்தி தான் பொம்பளையா? இல்ல ஆயாவா?... நம்ம கம்பெனில வந்து பாத்தியானா தெரியும்... எத்தினி புள்ளீங்க நிக்குதுன்னு... அவன் அவன் ஏரோபிளேன்ல ஏறிப் பறந்து துபாய், சிங்கப்பூருன்னு பறந்து பூறான்.  என்னமோ ஊர்ல இல்லாத புள்ளய பெத்து பூட்டோம்னு கெடந்து அட்ச்சுக்கிறியே...."
அதற்கும் மேல் அவள் தன் மகன் மேல் அன்பு செலுத்த முடியாது. பக்கத்து வீடுகளுக்கு அவன் புறப்பட்டு விடுவான் போலிருந்தது. 
நீங்க இம்புட்டு தூரத்துக்குச் சொல்லும் போது நான் மறுப்புச் சொல்லவா முடியும்? புள்ளய ஒரு ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது இப்படி ரயில்லே ஏத்தி அனுப்பிச்சுக் கண்ணுல காட்டிட்டுப் போனீங்கன்னா ஒங்களுக்குப் புண்ணியமாய் போகும்..." இதைக் கூட அவள் தயக்கத்தோடு தான் சொல்ல வேண்டியிருந்தது. பட்டணத்து மனிதர்கள் தான் எதிலும் சீக்கிரம் சலிப்படைந்து விடுகிறார்களே, ஒருவேளை இந்த ஆளும் கூட அந்த மாதிரி சலிப்படைந்து விடலாம். அதுக்காக, என்ன இருந்தாலும், அவள் பெற்ற மகனைப் பற்றி, அவனுடைய எதிர் காலத்தைப் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமலா இருந்து விட முடியும்? எத்தனையோ பேர்கள் ஊரில் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் தான். என்றாலும் அவள் அவனை வளர்த்தது மாதிரியா?
இவள் ரொம்பவும், யோசிப்பதையும் துருவித் துருவிக் கேட்பதையும் பார்த்து அவன் பக்கத்து வீடுகளுக்குச் சென்றாலும் சென்று விடுவான். ஐயோ, அப்படி ஆகி விட்டால் எல்லாமே கெட்டது. ஏழைக்கு ஆண்டவன் தான் இரக்கப்படணும். வேறு யாரால் அவளுடைய கஷ்டத்தைத் தீர்க்க முடியும்? மனித ஒத்தாசையினால் முடிகிற காரியமா இதெல்லாம்?
"தோ பாரும்மே... சும்மா வாணும் பீராஞ்சுக் கிட்டிராதே.... நீ என்ன ஓம் புள்ளய சும்மாவா விடப் போறே?.... மாசா மாசம் பத்து ரூவா எம்.ஓ வில் கீறல் போட்டுப் போட்டு வாங்கப் போறேல்லே?... நல்லா ரோதனையாப் போச்சும்மே. சரியான சாவுக் கிராக்கி நீ... ஒரு பையனைக் கூட்டிக்கிறதுக் கோசரம் இத்தினி அவுர் ஆனா நான் எப்போ பொறப்படறதும்மே?...
“நீங்க குப்ப நாயக்கர் வூட்டுக்குத் தான போயிட்டு வரணும்?... நீங்க போயிட்டுத் திரும்பறதுக்குள்ளே இந்தா பின்னாலேயே புள்ளய அளச்சிட்டு வாறேன்...”
ஒரு காலத்தில் அவளுடைய தம்பிமார்கள் எல்லாம் எப்படி வளர்ந்தார்கள். பெரியவன் தங்கையாவுக்குக் கல்யாணம் நடக்கும் போது கூட நாசரேத்து ரயில் ரோட்டுக்குத் தெற்கே கொஞ்சம் நிலமும், நாலைந்து பருவப் பனைகளும் கூட இருந்தன. அதற்குள் இப்படி எல்லாம் தலைகீழாக மாறி விட்டதே. தங்கைய்யாவே மலையாளத்துப் பக்கம் மில் வேலைக்குப் போய் விட்டானே. அவனுக்கும் நாலைந்து பிள்ளைகளாகி பெரிய சம்சாரியாகி விட்டான்.
“ஏளா.. ஒன் புருசன் சரியில்ல....” என்று கெட்டி பொம்மம்புரத்து மாமி காதுப் பாம்படங்கள் ஆட அடிக்கடி சொல்லுவாள். அவள் அனுபவசாலி. செயலாக இருந்த எவ்வளவு குடும்பங்களைப் பார்த்திருக்கிறாள். அவளுக்குத் தெரியாதா எப்படி இந்த மாதிரியெல்லாம் ஆகிறதென்று?.... அவள் சொல்லுவது அனேகமாகச் சரியாகத்தானிருக்கும்.
இந்த வீட்டு ஆம்பளை சரியாக இல்லாமல் இருக்கப் போய்த்தானே அருமாந்த பிள்ளையை எல்லாம் இப்படிக் கண்காணாத தொலைவுக்குப் பட்டணத்துக்கு அனுப்பிப் பிழைக்க வேண்டியதாகி விட்டது.
அவனுடைய துணிகள் என்று ஒன்றும் அதிகமில்லை, ஆனாலும் அவனுடைய துணிகளை எடுத்துப் பையில் வைக்கும் போது, அவளுக்கு அழுகையே வந்து விட்டது. செய்துங்கநல்லூர் சந்தையில் வாங்கினது அந்தப் பை. நாலாம் வருசத்துப் பண்டியல் சமயத்துலோ எப்போதோ, அவளுடைய மாமனார் ஊருக்கு வருகிற வழியில் செய்துங்கநல்லூரில் இறங்கி  அந்தப் பை நிறைய இனிப்புச் சேவும், கொஞ்சம் கருவாடும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அவர் போய்ச் சேர்ந்தும் தையோடு தை இரண்டு வருஷம் ஓடிப் போய் விட்டது. செத்தவர்களுக்கு நாள் சீக்கிரம் போய் விடும் என்பது எவ்வளவு சரியாகப் போய் விட்டது.
“ஏலேய்... ஐயா, மூக்கா... “ என்று ஒரு தடவை வாசல் பக்கம் வந்து சத்தம் கொடுத்து விட்டுப் போனாள்.
மேல வீட்டுத் தொண்டு சுவருக்குள்ளிருந்து அவனுடைய தலை தெரிந்தது. சேக்காளிகளிடம் சொல்லி விட்டு வர போயிருந்தான். பின்னே? அவனுக்கும் வேண்டிய நண்பர்கள் என்று உண்டுமே. மேலும் அதெல்லாம் ஒருநாள் பழக்கமா என்ன? ஆனால், ஒரு துரதிருஷ்டம் இந்த வருஷம், வருகிற பதநீர் பருவத்தில் அவர்களோடு பாண்டி ஆடுவதற்கு அவன் இருக்க மாட்டான். இனி மேல் தான் அவன் பட்டணத்துக்காரனாயிற்றே. ஒரு வேலை திரும்பி வரும் போது பாளையங் கோட்டை வாத்தியார் மாதிரி பேண்ட், சர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு வருவானோ என்னவோ?
"ஏய் நீ ரஜனியைப் பாப்பியாடே?..." என்று கேட்டான், ஆசாரி மகன். மூக்கனுக்கானால் சந்தோசம் தாங்க முடியவில்லை. பெருமையில் முகம் விரிந்தது.
"பின்னே பாக்காமாலாடா இருப்பான்?... பேசுதீயே நீயும்... ரஜனியைப் போய் பாத்தா வேல எல்லாம் வாங்கித் தருவாராமில்லே?... சேரகொளத்துல தலையாரித் தேவர் மவனுக்கு அவரு தான் வேல வாங்கித் தந்தாராமில்லே..."
ரஜனி காந்த்தைப் பற்றி நினைத்ததுமே மூக்கனுக்கு மனசெல்லாம் நிறைந்து போய் விட்ட மாதிரி இருந்தது. நிஜமாகவே அடுத்த பண்டியலுக்கு ஊருக்குத் திரும்பும் போது அவன் ரொம்பப் பெரிய மனுஷனாகத் தான் வர போகிறான். திரும்பவும் அவள் கூப்பிடுகிற சத்தம் கேட்டது.
வீட்டைப் பூட்டிக் கொண்டு புறப்படுகிற சமயத்தில் அவள் அவனை அப்படியே நெஞ்சோடு நெஞ்சாக அணைத்து இறுக்க கட்டிக் கொண்டு அழுதாள். எத்தனை வருஷங்களாக இரவும் பகலும் அவளோடு கூடவே அலைந்த பிள்ளை அவன். 
"கிருமமா ஒரு இடத்துல இருக்கணும் என்ன?... கண்டா பயலுவளோடயும் அலையாத, அங்க உண்டான வேலையப் பார்த்துகிட்டு மொதலாளிமார் சொல்லுததைக் கேட்டு இருக்கணும். சாப்பாடு, துணிமணி, சோப்பு, எண்ணை எல்லாம் அவியளே தாராவளாம்... கண்டவனுவளோடயேயும் அலைஞ்சி கெட்டப் போயிராத... பொறவு ஒங்க அய்யாவை மாதிரி செயில்ல கம்பி என்ன வேண்டியது தான். நல்ல படியா நடந்து இருந்தியானா மேன்மைக்கு வருவ... அந்த ஆண்டவரு தான்  ஒனக்குப் புத்திய தரணும்..."
அவளை போலவே மொட்டையனும், ஆத்தங்கரையாலும் தங்கள் பிள்ளைகளை பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகளின் தாய், தகப்பன்மார்கள் எல்லோரும் மெயின் ரோடு வரை பிள்ளைகளை வழியனுப்ப வந்தார்கள். பட்டணத்து ஆள் எதிர்பார்த்த படி அந்த ஊரில் ஆறு பையன் கூட சிக்கவில்லை. இதில் அவனுக்கு கொஞ்சம் வருத்தம் தான். போகிற வழி பூராவும் அவர்கள் மாறி மாறி அந்தப் பையன்களுக்கு புத்திமதி சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
பட்டணத்துக்காரனிடம் அவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் திரும்பத் திரும்ப ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். மாதந்தோறும் சம்பளப் பணத்தை  ஒழுங்காக மணியார்டர் செய்து விட வேண்டும் என்பது தான் அது. பஸ்ஸில் பையன்களை எல்லாம் அந்த ஆளோடு ஏற்றி விட்டதும் எல்லோருமே அழுது விட்டார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் பெற்றவர்களில்லையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com