சினிமாவுக்குப் போன சென்ஸாரு!

விரைவிலேயே அந்தக் கவலை தீர்ந்தது. விகிதாசார முறையில் சென்னையில் பத்துப் படங்கள் தணிக்கைக்கு வந்தால் நான் ஒரு படம் பார்த்தால் போதும். ஆனால் இதில் வேறு சில சங்கடங்கள்.
சினிமாவுக்குப் போன சென்ஸாரு!

நீளமான பழுப்பு நிறத் தபாலுறையில் என் பெயர் உள்ளடங்கிய பட்டியல் ஒன்று எனக்கு ஒருநாள் வந்து சேர்ந்தது. விஷயம் ரகசியமானது என்று வீட்டில் கூட ஒருவரிடமும் சொல்லவில்லை. ஆனால் அடுத்த நாளே தினத்தந்தி முதல் ஹிந்து வரை எல்லாப் பத்திரிகைகளிலும் புதிய தணிக்கைக் குழு நபர்களின் பெயர்களை வெளியிட்டன. எல்லாருக்கும் ஒரு பெயர். எனக்கு மட்டும் இரண்டு. இரு பெயர்களும் குறிக்கப்பட்டதில் ஏதாவது கொஞ்ச நஞ்ச சந்தேகம் யாருக்காவது ஏற்பட்டால் கூட உடனே விலகி விடும். நானும் ‘சென்ஸார்’ ஆகி விட்டேன்!
“உங்களுக்கு என்ன சார்” இனிமே பெரிய பெரிய புரொட்யூசர்களெல்லாம் உங்க வீடு தேடி வரப் போறாங்க” என்றார் ஒருவர். நான் இருக்கும் தெருவில் பெரிய கார்கள் வந்தால் நிறைய இடைஞ்சல்கள் ஏற்படும் கார்களுக்கு.
“அப்படியா நினைக்கறீங்க?” என்று கேள்வியே பதிலாகச் சொன்னேன்.
ஆனால் பக்கத்திலிருந்தவர் சொன்னார்: “பெரிய புரொட்யூஸர்கள் எல்லாம் இவர் கிட்ட ஏன் சார் வரப் போறாங்க? இவர் சுண்டைக்காய்! இன்னும் பெரிய இடத்துக்குப் போவாங்க. இவர் கிட்டே சின்னச் சின்ன ஆளுங்க தான் வருவாங்க.”
“சின்னவங்க தான், சார் ஏதாவது உதவி செஞ்சா நன்றியோட இருப்பாங்க,” என்றூ முன்னவர் சொன்னார். கேட்கக் கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. ஆனால் அது ஒரு கணப்போதுக்குத் தான்.
“சினிமாக்காரங்களுக்கு நன்றியாவது கின்றியாவது.?”
முதல் நண்பர் முயற்சியைத தளர விடவில்லை. “புரொட்யூஸர்கள் வராங்களோ இல்லையோ, இனிமே நீங்க எல்லாப் படத்தையும் காசு செலவில்லாம பாத்துடலாம்” என்றார்.
இரண்டாம் நண்பர் அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார்.” எல்லாப் படத்தையும் இவர் பார்த்தேயாக வேண்டுமே!”
அந்தக் கவலை எனக்கும் இருந்தது.
விரைவிலேயே அந்தக் கவலை தீர்ந்தது. விகிதாசார முறையில் சென்னையில் பத்துப் படங்கள் தணிக்கைக்கு வந்தால் நான் ஒரு படம் பார்த்தால் போதும். ஆனால் இதில் வேறு சில சங்கடங்கள்.
“ஏன் சார்! ‘காளி’ படம் கிளைமாக்ஸிலே ஒரே நெருப்பா வரதே, அதிலே தானே ஒரு குதிரை செத்துப் போச்சு?”
“ஆமாம், அப்படித்தான் பேப்பர்லே படிச்சேன்”
“அனால் சினிமாவிலே அந்த சீன் அவ்வலவு ஒண்ணும் பிரமாதமா வரலையே?”
“நான் ‘காளி’ பார்க்கலை.”
”அதெப்படி சென்ஸார் நீங்க?”
“மத்தவங்க இருக்காங்க, அவங்க பார்த்தாங்க.”
“சண்டை சீன்னு பாத்தா ‘காளியை விட ‘பில்லா’ தேவலை.”
“நான் ‘பில்லா’ பாக்கலை.”
“ஓகோ... ஆனா ரஜினிது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் ‘முள்ளும் மலரும்’ தான்.”
“முள்ளும் மலரும்’ பாக்கலை.”
‘ரஜனிக்கும் சிவாஜிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கில்லே? ‘திரிசூலத்துல.”
“நான் ’திரிசூலம்’ பாக்கலை.”
“அது இல்லேன்னா ’பைலட் பிரேம்நாத்’படத்தை எடுத்துக்குங்க.”
‘பைலட் பிரேம் நாத் நான் பாக்கலை.”
“சிவாஜீது எந்தப் படம் வேணூம்னாலும் எடுத்துக்குங்க. இப்ப வந்ததே ’ரத்தபாசம்’-
“நான் பாக்கலை.”
”ஜெனரல் சக்கரவர்த்தி?”
“பாக்கலை.”
“நான் வாழ வைப்பேன்?”
“பாக்கலை.”
“சரி, சிவாஜிது வேண்டாம். வேறே நல்ல படம் ஏதாவது, ‘ஒரு தலை ராகம்”
“பாக்கலை.”
“மற்றவை நேரில்”
“பாக்கலை.”
“ஆறிலிருந்து அறுபது வரை?”
“இல்லை.”
“’அழியாத கோல்ங்கள்?”
“இல்லை.”
”சங்கராபரணம்?”
“அது தெலுங்குப் படம்... பாக்கலை”
“ரோசாப்பூ ரவிக்கைக்காரி?”
“பாக்கலை.”
“சுவர் இல்லாத சித்திரங்கள்?”
“இல்லை.”
“பசி?”
“இல்லை.”
“பின்னே என்ன தான் பாத்துத் தொலைச்சீங்க?”
“மின்னல் ராணி, லவ் இன் சிங்கப்பூர், வேட்டைக்காரி, நேபாலத்தில் சி.ஐ.டி. காளி கோயில் கபாலி, பம்பாய் மெயில் 109...”
“அப்புறம்?”
“சிங்கக் குட்டி 1,2,3, சிம்மக்குரல், கில்லாடி ஜோடி, வெங்கடேச விரத மகிமை, காவேரியின் சபதம்...”
நண்பர் எழுந்து போனார்.
“உன் விதி” என்று அவர் அங்கலாய்த்தது அந்தப் பேட்டை முழுக்க கேட்டிருக்கும்.
அந்தத் தலைப்பில் கூட ஒரு படம் பார்த்ததாக ஞாபகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com