வேர்கள் மண்ணோடு தான்

காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்து, முத்துமாலை என்றும், சந்தனப் பேழை என்றும் அடுக்கிக் கொடுத்த போது... கரோலின் திக்குமுக்காடிப் போனாள்.
வேர்கள் மண்ணோடு தான்

போயிங் விமானம் ஒன்று தன் வருகையை ராடாரில் பதித்து விட்டு, சிவப்பு ஒளிக்கற்றைகளை வாரியிறைத்துக் கொண்டு ரன்வேயில் வழுக்கிக் கொண்டு ஓடி வந்து நின்றது.

குப்புசாமிக் கவுண்டருக்கு, விமான நிலையத்தின் நியான் சைன்களும், மைக்கில் பிரசவமான அறிவிப்புகளும் கலக்கத்தை உண்டு பண்ணின. பொங்கி வழிந்த கும்பலில், தன மகனைத் தேடப் புறப்படுகையில்... அவருக்கு சிரமம் ஏதும் வைக்காமல், அவரைக் கண்டுபிடித்து, கட்டிப் பிடித்து ஒரு முத்தத்தில் தன மனத்தில் உற்பத்தியான அன்பையெல்லாம் கொட்டினான் நடராஜன்.

மூன்று வருட லண்டன் வாசம், மேனியை மெருகூட்ட, சதைப்பிடிப்புடன், சற்றே கூடி விட்ட நிறத்துடன் கம்பீரமாக நின்ற மகனை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து, பார்வையாலேயே சந்தோஷத்தைக் கொட்டினார்.

நடராஜனின் தோல் மீது சாய்ந்து கொண்டு, உடம்போடு ஒட்டினாற்போல் நின்று கொண்டிருந்த வெள்ளைக்காரி கவுண்டரின் மனதில் கடல் போன்ற கவலையை எழுப்பி விட அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கண்களில் கவலை தோன்ற அவளை உறுத்து விழித்தார்.
  
"அப்பா, இந்தப் பொண்ணு கரோலின். என்கூட லண்டனில் படிச்சவ, நம்ம ஊரைப் பார்க்கணுமின்னு இங்க வந்திருக்கா. நம் வீட்ல தாங்குவா."

கரோலின், கவுண்டரின் கையை தன் கைக்குள் எடுத்துக் குலுக்கித் தன் அன்பை தெரிவித்துக் கொண்டாள். கவுண்டரோ தவித்தார். கரோலின் வருகை, அவர் மனதில் பலவிதமான சந்தேகங்களை விதைத்தது. அவளுடைய கழுத்தைப் பார்த்து அதில் கயிறு ஏதும் இல்லாததைக் கண்டு மணத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டார். ஆனாலும் மனம் சமாதானமடையாமல் தவித்துக் கொண்டே இருந்தது.

அன்று இரவே கிளம்பி விட்டனர் கிராமத்தை நோக்கி. ஊரே திரண்டு குப்புசாமிக் கவுண்டரின் வாசலை நிறைத்துக் கொண்டு நின்றது-- நடராஜனின் வரவுக்காக! அவர்களுக்கெல்லாம் சொல்லி மாளாத பெருமை, தங்கள் ஊர்ப்பையன் வெளிநாடு சென்று படித்து விட்டு வருகிறான் என்று!

ஆரம்ப விசாரிப்புகளுடன் அனைவரும் கலைந்து சென்றனர், அவரவர் கற்பனைக்கேற்ப கரோலினைப் பற்றி விவாதித்துக் கொண்டு! கவுண்டர் அங்கிருந்தவர்களிடமெல்லாம் ‘கரோலின்’ஊரைச் சுற்றிப் பார்க்க வந்திருப்பதாக மறக்காமல் சொல்லி வைத்தார்.

மகனுக்குப் பிடிக்குமே என்று சோளப் பணியாரங்களை ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு, கூடவே சூடு பறக்கும் காபியையும் கொண்டு சென்று கரோலினுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மகனின் முன்னால் வைத்தாள் தாய் சிவகாமி அம்மாள்.

“வாட் இஸ் திஸ்?” என்று கேட்டு ஒரு பணியாரத்தை விண்டு வாயில் போட்டவள், பச்சை மிளகாயின் காரத்தால் சிவந்து விட்ட முகத்துடன், கண்களில் கண்ணீர் ததும்பி வழிய நின்றாள். நடராஜனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. காப்பி டம்ளரைத் தட்டி விடவே, காப்பி தரையில் கோலமிட்டு நின்றது.

“ரெண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடலையே?” என்று நினைத்து மனம் வேதனைப் பட்டாள்.

தாயார் வேறு எதாவது இனிப்பாக கொடுக்கலாம் என்று எண்ணி பானையில் அடுக்கி வைத்திருந்த ‘பச்சை மாவு’ உருண்டையில் இருந்து இரண்டு விள்ளல்களை எடுத்து வந்து கொடுத்தாள்.

இது என்ன இப்படி பல்லில் ஒட்டுகிறது? இத மனுஷன் திங்க முடியுமா? எந்தக் காலத்தில் செய்ததோ? நாத்தமடிக்குது. அதையும் வீசி விட்டான். பலகாரம் என்று இல்லை. சாதமும் இப்படித் தான். எதையுமே உண்ணாமல் ஒதுக்கி வைத்து விட்டு, இரண்டு பேரும் ரொட்டித் துண்டுகளுக்கிடையில் வெண்ணெய் வைத்து சாண்ட்விச்சாக்கி சாப்பிட்டனர். மீதி வயிற்றை நிரப்ப.

சிவகாமியால் நம்ப முடியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. மூன்று ஆண்டு லண்டன் வாசம் மகனுடைய குணத்தை வெகுவாக மாற்றியமைத்து விட்டது என்பது தான்.

குப்புசாமிக் கவுண்டருக்கு மகனது போக்குப் பிடிக்கவில்லை. முன்பெல்லாம் ஏர் ஓட்டுவது, களை வெட்டுவது போன்ற வேலைகளை லீவு நாட்களில் செய்வான். ஆனால் இப்போது, தன் காலில் மண் படுவதை தன் படிப்புக்கு கேவலம் என்கிற மாதிரி தோட்டத்துப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்காமல் விட்டேற்றியாக இருந்தான். தன்னுடன் ஆசையாகப் பேச வருகின்றவர்களையும், அலட்சியத்துடன் ஒதுக்கித் தள்ளினான்.

கரோலினுடன், ஆற்றங்கரை, வயல்வெளி, என்று பொழுதை போக்கினான், இரண்டு பேருமாக தோப்பில் இளநீரைச் சீவிக் குடித்து மாங்காயை அடித்து தின்று, ஊர்ச் சிறுவர்களுடன் சேர்ந்து பட்டம் விட்டும்... பொழுதை ஆனந்தமாய்க் கழித்தனர். இடையிடையே பக்கத்தில் இருந்த கோயில்களுக்கும், திருவிழாக்களுக்கும் கரோலினைக் கூட்டிப் போனான். 

"ஓ! ராஜ்! ஹவ் பியூட்டிஃபுல்?” என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷித்தாள் கரோலின், காஞ்சிபுரம், மாமல்லபுரம், திருச்செந்தூர், கன்யாகுமரி என்று பல ஊர்களுக்கும் அவளைக் கூட்டிப் போய். இந்தியாவின் பாரம்பரியக் கலைச் சின்னங்களைக் காட்டி, கோவில்களில் தரிசனம் செய்வித்து, அங்கு சிலைகளில் பொதிந்து நிற்கும் கதைகளைச் சொல்லி காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்து, முத்துமாலை என்றும், சந்தனப் பேழை என்றும் அடுக்கிக் கொடுத்த போது... கரோலின் திக்குமுக்காடிப் போனாள்.

“ஐ லவ் திஸ் கண்ட்ரி வெரி மச்!” என்று சொல்லிச் சொல்லி கரைந்து போனாள் கரோலின்.

இருபது நாட்களை சந்தோஷமாகக் கழித்து விட்டு மீண்டும் முல்லைப்பட்டிக்கே திரும்பி வந்தனர்.

ஊருக்குள், கலைத்து விடப்பட்ட தேனீக் கூட்டமாய், கச முசவென்ற பேச்சு ஆரம்பித்தது. நடராஜனையும் கரோலினையும் இணைத்து!

“நாம என்ன பண்றது சிவகாமி? தலைக்கு மேலே வளர்ந்த பிள்ளை. படிச்ச பையன் வேறே. அடிச்சுத் திருத்தற வயசா அவனுக்கு? ஏதோ வெளிநாட்ல இருந்து வந்தவன்... ஒரு பத்து நாள் இங்கே இருந்தா மறுபடியும் நம்ம பழக்க வழக்கத்துக்கு வந்துடுவான்னு பார்த்தா இவன் திருந்த மாட்டான் போல இருக்கே...ம்.. என்ன பண்றது?” மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டர் கவுண்டர்.

இடையிடையே நடராஜனின் மாமா வேறு வந்து தனம் நடராஜனுக்காகக் காத்துக் கொண்டிருப்பதை ஞாபகப்படுத்தி, திருமணத்திற்கு தேதி கேட்டுக் கொண்டிருந்தார்.

தனம் - நடராஜன் இருவரும், சிறு வயது முதலே ஒருவருக்கொருவர் என்று வளர்ந்து வந்தவர்கள். லண்டன் பயணத்திற்கு முன்பே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று துடித்த போதும், பாஸ்போர்ட், விசா என்று அலைந்து திரிந்து, நிம்மதியாக நிமிர்ந்த போது நாட்கள் ஓடி விட்டன. பயணத்திற்கு சில நாட்களே இருந்ததால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.

தனத்தின் தந்தையை ஒருவழியாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். மகனிடம் எப்படிப் பேச்சைத் துவங்குவது என்று தவித்தார் கவுண்டர். ‘தனம் பள்ளிக்கூடப் படிப்பு மட்டுமே படித்தவள். ஒருவேளை இப்போது தனம் வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது?’ என்று பலவாறாக மனம் குழம்பிக் கிடந்தார்.

கரோலினும், நடராஜனும் ஊர் திரும்பி வந்து மூன்று நாட்கள் ஓடி விட்டன. இரண்டு பேரும் வெளித் தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டு ‘ஏர் மெயில்’ ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு பேச்சில்சுவாரஸ்யமாக ஆழ்ந்து கிடந்தனர்.

மகனை நேரில் கேட்டு விடுவது என்ற முடிவுடன் அவன் முன்னால் போய் நின்றார் கவுண்டர். சிவகாமி தூணைப் பிடித்தபடி, ‘என்ன பேசப் போகின்றார்கள்’ என்ற ஆவலுடன் காத்து நின்றாள்.

“தம்பீ நடராசு! ஒனக்கு படிப்பு முடிஞ்சி போச்சு. இனியொரு கலியாணத்தையும் முடிச்சுட்டன்னா என் கடமை தீந்து போகும். உங்க மாமன் நேத்து வந்துட்டுப் போறார். கலியாணத்தை எப்ப வச்சுக்கலாம்னு உன்னைக் கேட்கச் சொல்லிட்டுப் போறார். நீ என்ன பதில் சொல்றே?”

“இதுல என்னைக் கேக்கறதுக்கு என்ன இருக்குது? எனக்கு தனம், தனத்துக்கு நானுன்னு தான் சின்ன வயசிலியே முடிவு பண்ணியாச்சே! உங்க இஷ்டப்படியே செய்யுங்க. எனக்கு சந்தோஷந்தான்!”

கவுண்டரின் முகம் பளீரென சந்தோஷத்தால் துலங்கியது. 

“அப்ப சரி. வர்ற வெள்ளிக் கிழமை வெத்திலை பாக்கு மாத்திட்டு, தையிலே கலியாணத்தை வச்சுக்கலாம். நம்ம ஊர் கோயில்லே கலியாணத்தை முடிச்சுடலாம். எணைச்சீர், கைகோர்வை அரிசி, மங்களவார்த்தை இதெல்லாம் இல்லாம தாலியை மட்டும் கட்டி முடிச்சிடலாம். உனக்கு மணவறையில உட்கார்றதுக்கு கஷ்டமாயிருக்கும். என்ன நாஞ் சொல்றது சரிதானே?”

“வெத்தலைப் பாக்கு அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை மாத்திக்கலாம். இந்த வாரம் எனக்கு கொஞ்சம் வேலையிருக்குது. கரோலினை மெட்ராஸ் கூட்டிட்டுப் போய், அவ புருஷன் ஜேம்ஸ் கிட்டே விடணும்.

நாளைக்கு ஜேம்ஸ் லண்டனிலிருந்து வர்றார். அங்கருந்து ரெண்டு பேருமா பம்பாய்க்குப் போறாங்க. கலியாணத்தை தையிலியே வெச்சுக்கலாம். நம்ம ஜாதி வழக்கப்படி ஒண்ணு விடாமச் செய்யணும். கல்யாணம் ஒரு தடவை தானே பண்ணிக்கப் போறோம்?” ஆணித்தரமாக அவன் குரல் ஒலித்தது.

கவுண்டர் முக மலர்ச்சியுடன் நின்றார்.

மரம் எவ்வளவு தான் பெரிதாக இருந்தாலும், வெளியுலகத்தில் கிளைகளுடன் கிளர்ந்து படர்ந்திருந்தாலும் அது கீழே விழுவது கிடையாது. ஏனென்றால் - வேர்கள் மண்ணோடு தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com