45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 1

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான்

(வலம்புரம் – நேரிசை)

முன்னுரை

சீர்காழியிலிருந்து கோலக்கா சென்ற அப்பர் பிரான், பல சோழ நாட்டுத் திருத்தலங்கள் சென்று பெருமானை தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். அப்பர் பிரான் வலம்புரம் சென்றதாக, தனியாக பெரியபுராண குறிப்பு ஏதும் காணப்படவில்லை; என்றாலும், நனிபள்ளி முதலா பல தலங்கள் என்ற குறிப்பில் இந்த தலமும் அடங்கும் என்று பெரியபுராண உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

அவற்றில் ஒன்றான நேரிசை பதிகத்தை நாம் இங்கே சிந்திப்போம். வலம்புரத்து அடிகள் என்று தலத்து இறைவனை இந்த பதிகத்தில் குறிப்பிடும் அப்பர் பிரான், அவர் அழகாக இருந்த நிலையினை பாடல் தோறும் குறிப்பிடுகின்றார்.

ஆண்ட அரசு எழுந்தருளக் கோலக்காவை அவரோடும் சென்று
                  இறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டு அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால்
                வேதநாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடூர் நீடு திருக்குறுக்கை
                திருநின்றியூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார் கழல்
              தொழுது வணங்கிச் செல்வார்


பாடல் 1

தெண்திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும் காலைத்
தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது அடி
                                 வணங்கி எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள் தம்மைக்
கொண்டு நற்கீதம் பாடக் குழகர் தாம் இருந்தவாறே

விளக்கம்

இரைத்து = சீர் பாடி, பெருமையினை பாடி. தெண்திரை = தெளிந்த அலைகள். ஓதம் = நீர். தொண்டு = தொண்டர்கள். அப்பர் பிரான், தொண்டர்கள் பெருமானை குறித்து கீதங்கள் பாடி வணங்கியதாக இங்கே குறிப்பிடுகின்றார். பெரியபுராண குறிப்புகளின்படி திருஞானசம்பந்தர் ஏழு வயது நிறைந்து அவருக்கு உபநயனம் செய்துவைக்கப்பட்ட பின்னரே, அப்பர் பிரான் அவரை சீர்காழியில் சந்தித்ததாக உணர்கின்றோம். திருக்கோலக்கா தலத்தில் பொற்றாளம் பெற்று திரும்பிய பின்னர் நனிபள்ளி தலம் சென்று அங்கிருந்து சீர்காழி திரும்பும் வழியில், வலம்புரம், சாய்க்காடு, வெண்காடு ஆகிய தலங்களுக்கு திருஞானசம்பந்தர் சென்றதாக நாம் பெரியபுராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே அப்பர் பிரான் வலம்புரம் தலம் சென்றதற்கு முன்னமே திருஞான சம்பந்தர், வலம்புரம் சென்று பதிகம் அருளினார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எனவே, அடியார்கள் இசைப் பாடல்கள் பாடி இறைவனை துதித்ததாக அப்பர் பிரான் கூறுவது, அந்த தலத்தில் இருந்த அடியார்கள் ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்களை பாடியதாக குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது.

அப்பர் பெருமானின் குறிப்பிலிருந்து வலம்புரம் தலத்திற்கு மிகவும் அருகில் கடல் இருந்ததாக தெரிய வருகின்றது. கடலலைகள் பெருமானின் திருவடிகளை வருடியதாக அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

வலம்புரத்து அடிகளின் திருவடிகளை, தெளிந்த கடலின் நீரலைகள் சென்றடைந்து அலசும் தருணத்தில், ஆங்கே உள்ள அடியார்கள் பெருமானின் பெருமைகளை பாடியவாறு அனைத்து உலகங்களுக்குத் தலைவனாக உள்ள பெருமானைத் தொழுது வணங்குகின்றார்கள். மேலும் செறிந்து காணப்படும் பல வகையான மலர்களில் உள்ள தேனைப் பருகியதால், மயக்கம் அடைந்து தம்மை மறந்து உறங்கும் வண்டினங்கள் மிகுந்த வலம்புரத்து தலத்தில் உறையும் அடிகளை, அடியார்கள் தங்களது உள்ளத்தில் இருத்தி, சிறப்பான இசைப் பாடல்களைப் பாட, குழகர் இருக்கும் வண்ணம் தான் என்னே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com