45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 2

மாவடு போன்று அகன்ற கண்ணினை உடைய பார்வதி

மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப்
பிடிக் களிறு எண்ணத் தம்மில் பிணை பயின்று அணை                                                                                                       வரால்கள்
தொடுத்த நன்மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி ஏத்த
வடித் தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே

விளக்கம்

வடுவகிர்கண்ணியம்மை என்பது தலத்து இறைவியின் திருநாமம். அதனை உணர்த்தும் வகையில், மாவடு போன்று அகன்ற கண்ணினை உடைய பார்வதி தேவி என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பாமாலைகள் பாடி இறைவனை வழிபட்ட அன்பர்கள், இறைவனுக்கு மலர் மாலைகள் சூட்டி துதித்தாக இந்த பாடலில் கூறுகின்றார். இரிந்து = அச்சம் கொண்டு ஓட.

பொழிப்புரை

நீர்நிலைகளில் வாளை மீன்கள் பாய்வதால் ஏற்படும் ஆரவாரத்திற்கு அஞ்சிய வண்டுகள் பயத்துடன் ஓட, நீர்நிலைகளில் உள்ள வரால் மீன்கள், பெண் யானையுடன் ஆண் யானை சேர்வது போன்று ஒன்றை ஒன்று அணைத்துக்கொண்டு பிரியாமல் காணப்படும் தலமாகிய வலம்புரத்தில் உள்ள தொண்டர்கள், பூக்களைக் கொண்டு தொடுத்த மாலைகளை இறைவனுக்கு சூட்டி, அவரை புகழ்ந்து வணங்குகின்றார்கள். மாவடு போன்று அகன்ற கண்களை உடைய பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள வலம்புரத்து அடிகள், மேலே குறிப்பிட்ட சூழ்நிலையில், அளிக்கும் காட்சிதான் என்னே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com