45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 3

வண்டுகள் வந்து தேனைப் பருகுவதற்கு முன்னமே

தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சும் கொண்டே அன்பினால் அமர ஆட்டி
வானிடை மதியம் சூடும் வலம்புரத்து அடிகள் தம்மை
நான் அடைந்து ஏத்தப் பெற்று நல்வினைப் பயன் உற்றேனே

விளக்கம்

பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பாமாலையும் பூமாலையும் இறைவனுக்கு சேர்த்தி வணங்கிய தொண்டர்கள், இறைவனை பஞ்சகவ்யத்தால் அபிடேகம் செய்து வழிபட்டதை அப்பர் பிரான் மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பலராலும் போற்றப்படும் இறைவனைத் தொழுவதற்கு, தான் சென்ற பிறவியில் செய்த புண்ணியங்களின் பயனால் நல்வினை உறப்பெற்றேன் என்று அப்பர் பெருமான் கூறுவது நமக்கு சம்பந்தரின் வலஞ்சுழி பதிகத்தின் முதல் பாடலை (2.106.1) நினைவூட்டுகின்றது. ஆதரித்து = பெருமானின் பேரில் விருப்பம் கொண்டு: ஆதரித்தல், மனத்தின் செயல். ஏத்தி பாடுதல், வாயின் செயல், வழிபடுதல் உடலின் செயல். மனம் வாக்கு காயத்தால் இறைவனை வணங்குதல் குறிப்பிடப் படும் பாடல். பன்னி = மறுபடியும், மறுபடியும்.

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்ன நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

தேனுடை மலர்கள் என்று குறிப்பிட்டு, வண்டுகள் வந்து தேனைப் பருகுவதற்கு முன்னமே மலர்களைப் பறித்து இறைவனுக்கு சூட்டும் பழக்கம் இருந்தவர்களாக, வலம்புரத்து அடியார்கள் திகழ்ந்த நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. திருந்தடி = சிந்தனையை திருத்தும் திருவடிகள் என்றும் அழகிய திருவடிகள் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம்.

அடியார்கள் மலர்கள் கொண்டு இறைவனின் திருவடிகளில் தூவி வழிபட்ட காட்சியினை, தாங்கள் சென்ற பல தலங்களில் கண்டதை மூவர் பெருமானார்கள் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புதியதாக செடிகளிலிருந்து கொடிகளிலிருந்தும் பறித்து வரப்பட்ட மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடும் அடியார்களின் வினைகள் எவரும் காணாதவாறு மறைந்து விடும் என்று சம்பந்தர் குரங்கணில் முட்டம் பதிகத்தின் ஒரு பாடலில் (1.31.8) கூறுகின்றார். மையார் மேனி = கரிய மேனியை உடைய அரக்கன் ராவணன். அடர்த்து = நெருக்கி. உய்யா வகையால் = தப்பாத வண்ணம். மலையின் கீழே நசுக்குண்ட அரக்கன் தப்பித்துச் செல்ல முடியாதபடி மாட்டிக்கொண்ட நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இன்னருள் செய்த என்ற தொடர் மூலம், இராவணன் சாமகானம் பாடி, இறைவனை மகிழ்வித்த பின்னர் அவரது கருணையால், உயிர் பிழைத்ததுமன்றி, பல வகையிலும் அருள் பெற்றமையும் இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகின்றது.

மையார் நிற மேனி அரக்கர் தம் கோனை
உய்யா வகையால் அடர்த்து இன்னருள் செய்த
கொய்யார் மலர் சூடி குரங்கணில் முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே

நெஞ்சத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லாமல், ஒன்றிய மனத்துடன், சிறந்த மலர்களைக் கொண்டு இறைவனை இரவும் பகலும் வழிபட்ட அடியார்கள் வாழ்ந்த மயிலாடுதுறையில் உறையும் இறைவன், தலை மாலை அணிந்தவனாக தனது நித்தியத்துவத்தை உணர்த்துகின்றான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். வரம் அருளும் வள்ளல் என்று சம்பந்தர் குறிப்பிடும், மயூரநாதர் கோயிலின் நான்கு புறங்களிலும் நான்கு வள்ளலார் கோயில்கள் தற்போது உள்ளன. கிழக்கே (விளநகர்) துறை காட்டும் வள்ளல் கோயிலும், மேற்கில் (மூவலூர்) வழி காட்டும் வள்ளல் கோயிலும். தெற்கில் (பெருஞ்சேரி) மொழி காட்டும் வள்ளல் கோயிலும், வடக்கில் (தட்சிணாமூர்த்தி கோயில்) ஞானம் காட்டும் கோயிலும் உள்ளன. மயிலாடுதுறை கோயிலின் இறைவனுக்கு வள்ளல் என்ற திருநாமமும் உள்ளது.

கரவின்றி நன்மாமலர் கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வரமா மயிலாடுதுறையே

மலர்கள் கொண்டு இறைவனைத் தொழுது ஏத்தும் அடியார்களின் நிலை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை உணர்த்தும் பாடல், ஐயாறு தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் ஒரு பாடல் (4.40.8). தங்களது கைகளில் உள்ள நகங்கள் தேயும் அளவுக்கு மலர்களைப் பறித்து வழிபட்ட தொண்டர்கள் என்று அவர்களை குறிப்பிடும் அப்பர் பிரான், அவர்களது இதயம், இறைவன் உறையும் கோயிலாகும் என்று அவர்களை சிறப்பிக்கின்றார். மலர்கள் எவ்வளவு மென்மையானவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய மலர்களை, தங்களது கைகளில் உள்ள நகங்கள் தேயும் அளவுக்கு பறிக்க வேண்டும் என்றால், எண்ணற்ற மலர்களை அந்த அடியார்கள் பறித்திருக்க வேண்டும் என்பதை நாம் உணரலாம். இந்த குறிப்பின் மூலம், இறைவன் பால் அவர்கள் கொண்டிருந்த எல்லையற்ற விருப்பத்தினை, பக்தியை, அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். நாண்மலர் = அன்று மலர்ந்த மலர்கள்; அன்றைய நாளில் மலர்ந்த மலர்கள். இறைவனுக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாததால், அவரைத் தவிர அவருக்குத் துணையாக வேறு எவரும் இல்லை என்று நயமாக இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் அவருக்கு அடிமைகள் என்பதுவும் இந்த பாடலில் கூறப்படுகின்றது.

சகமலாது அடிமை இல்லை தான் அல்லால் துணையும் இல்லை
.நகமெலாம் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி
முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்
அகம் அலால் கோயிலில்லை ஐயன் ஐயாறனார்க்கே

சிவபெருமானை, அவனது திருவடிகளில் மலர்கள் தூவி, மண்ணுலகத்தவர்கள் மட்டுமா வழிபடுகின்றார்கள். மேலை உலகத்தில் உள்ள தேவர்களும் வழிபடுகின்றார்கள் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் சோற்றுத்துறை பதிகத்தின் முதல் பாடல். (4.85.1). நறுமணம் நிறைந்ததும் மற்றும் தூய்மையானதும் ஆகிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். பெருமானுடன் இணைந்ததால், பிறைச் சந்திரன் மிகவும் அழகான அணிகலனாக, இறைவனின் சடையில் விளங்குவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

காலை எழுந்து கடிமலர் தூயன தாம் கொணர்ந்து.    
மேலை அமரர் விரும்பும் இடம் விரையால் மலிந்த
சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே

கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.78.3), தவ நிலையில் ஆழ்ந்த முனிவர்கள், இருக்கு வேதத்தின் மந்திரங்களை கூறியவாறு இரவும் பகலும் பெருமானது திருமேனியின் மீது மலர்கள் தூவி, நம்மை ஆளும் இறைவன் என்று சிவபெருமானை வழிபடுவதாக சுந்தரர் கூறுகின்றார். கொம்பு = யோக தண்டம். கால் = காற்று. ஒருக்காலர் என்று, தங்களது மூச்சினை அடக்கி முனிவர்கள் ஒருவழிப்படுத்திய நிலையினை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். அசைந்து அசைந்து செல்லும் யானைகள், நீரினை இறைத்து விளையாடும் காட்சியை சுந்தரர் இங்கே கூறுகின்றார். கம்பக் களிறு = அசையும் யானை.

கொம்பைப் பிடித்து ஒருக்காலர் இருக்கால் மலர் தூவி
நம்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்பக் களிற்று இனமாய் நின்று சுனை நீர்களைத் தூவிச்
செம்பொன் பொடி சிந்தும் கேதாரம் எனீரே

அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு விருப்பமுடன் வழிபடும் அடியார்கள் என்று வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்து அடியார்களை சுந்தரர் குறிப்படும் பாடல் (7.86.3) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பெருமானைப் பற்றி பேசாதவர்களின் பேச்சுகள், பொருட்படுத்தக்கூடிய பேச்சுகள் அல்ல என்று சுந்தரர் கூறுகின்றார். எண்ணார் = இறைவனின் திருமேனிக்கு பொருத்தமாக எண்ணி. படிறன் = வஞ்சகம் நிறைந்தவன். கங்கையைத் தனது சடையில் மறைத்த செயல் இங்கே படிறன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. சடையில் மதியினைச் சூடிய பெருமானை பாடிய சுந்தரருக்கு, சடையில் பெருமான் கங்கை நங்கையை மறைத்து வைத்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். தலத்து அடியார்கள் மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதுடன், பண்ணுடன் இணைந்த பாடல்களை எப்போதும் பாடியவாறு இருந்தனர் என்றும் சுந்தரர் இங்கே கூறுகின்றார்.

தண்ணார் மாமதி சூடித் தழல் போலும் திருமேனிக்கு
எண்ணார் நாண்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்
பண்ணார் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர்
பெண் ஆணாய பிரானைப் பேசாதார் பேச்சு என்னே

இறைவனுக்கு மலர்கள் சூட்டி வழிபடும் அடியார்களை, தங்களது பாடல்களில் குறிப்பிடும் மூவர் பெருமானர்கள், நாமும் அவ்வாறு இறைவனின் திருப்பாதங்களில் மலர்கள் தூவி வழிபாட்டு பயனடைய வேண்டும் என்ற விருப்பத்துடன், இறைவனின் திருமேனியின் மீது மலர்கள் தூவி வழிபடுவதால் நாம் அடையும் பயன்களையும் தங்களது பாடல்களில் குறிப்பிடுகின்றார்கள். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நல்லூர் தலத்துப் பாடல் ஒன்றினில் (1.86.9) திருஞானசம்பந்தர், குளிர்ந்த மலர்களைத் தூவி இறைவனின் திருவடிகளைத் தொழ நினைக்கும் அடியார்களின் வாழ்வில் துன்பங்கள் இருக்காது என்று கூறுகின்றார். வண்ண மலரான் = பிரமன். வையம் அளந்தான் = திருவிக்ரமனாக அவதாரம் எடுத்து ஈரடியால் மூவுலகினையும் அளந்த திருமால்.

வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை இடுக்கணே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.93.4), பெருமானை விருப்பத்துடன், வாசனை நிறைந்த மலர்கள் தூவி வழிபடும் அடியார்கள், தங்களைப் பீடித்துள்ள பாசச் சங்கிலியிலிருந்து விடுபடுவார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். உலகத்து உயிர்களின் மீதும், உலகப் பொருட்களின் மீதும் நாம் வைத்திருக்கும் பாசப் பிணைப்புதான், அந்த பாசங்களின் வலையில் சிக்குண்ட நாம் பல செயல்கள் செய்து நமது வினைகளை பெருக்கிக்கொள்ளும்படி செய்கின்றது. ஆனால் அந்த பாசவலையிலிருந்து விடுபட எளிதில் முடியாது. இறைவனை வழிபட, இறைவனது கருணையால் தான் நாம் அந்த வல்லமையைப் பெறமுடியும் என்பது இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும். பாசவினை = பாசமும் அதனால் விளையும் வினைகளும்.

ஈசன் முதுகுன்றை நேசமாகி நீர்
வாச மலர் தூவப் பாச வினை போமே

தினமும் பொழுது புலரும் முன்னமே எழுந்து, பித்தன் போன்று நமது பிழைகளைப் பொறுத்து, எல்லையில்லாத அருள்கள் செய்யும் இறைவனாகிய சிவபெருமானின் பால் அன்பு வைத்து, மலர இருக்கும் அரும்புகளையும், முழுவதும் மலர்ந்த மலர்களையும் மிகுந்த விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் இறைவனுக்கு சமர்ப்பித்து, அவனுக்கு தூபம் தீபம் முறையாக காட்டி வழிபடும் அடியார்களுக்கு, கரும்புகட்டி போன்று இனியவனாக பெருமான் இருப்பான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் (4.31.4.) கூறுகின்றார். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழியினை நாம் அறிவோம். தான் பெற்ற மகன் எத்தனை தவறு செய்தாலும், அந்த தவறுகளை மன்னித்து அவனுடன் பழகும் பண்பு கொண்டவர் தாய். இத்தகைய கருணை உள்ளத்தை நாம் தந்தையிடம் காண்பதில்லை. நமது தவறுகள் அனைத்தையும் பொறுத்து, நம்மிடம் பரிவு காட்டும் இறைவனை, தாய் போன்று பித்த மனம் உடையவனை பித்தன் என்று அழைக்கின்றோம்.

பெரும்புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டானாரே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.82.1), அப்போதுதான் மலர்ந்த மலர்களைக் கொண்டு, உலகங்களுக்கு நாயகனாக விளங்கும் பெருமானின் திருவடிகளில் மலர்களை இட்டு வணங்கினால், நாம் இதற்கு முன்னம் செய்த பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

விண்ட மாமலர் கொண்டு விரைந்து நீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர் செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே                

பொழிப்புரை

தேனுடைய மலர்களைக் கொண்டு, பெருமானின் அழகிய திருவடிகளை அர்ச்சனை செய்தும், பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் ஐந்து பொருட்களை கொண்டு மிகுந்த அன்புடன் இறைவனை நீராட்டியும், வானத்தில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிய வலம்புரத்து அடிகள் தம்மை, அடியார்கள் வணங்கிப் போற்றுகின்றார்கள். இவ்வாறு போற்றப்படும் இறைவனை, அடியேன் சரணடைந்து போற்றுவதற்கு வழிவகுத்த நல்வினை உடையவனாக அடியேன் இருத்தலால், அதன் பயனாக இறைவனை வழிபடுகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com