45. தெண்திரை தேங்கி ஓதம் - பாடல் 7

அந்நாள் வரை சிவபெருமானை நினையாதிருந்த ஆன்மா

செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழம் இனிய நாடித்
தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று
கொங்கையர் குடையும் காலைக் கொழுங்கனி அழுங்கினாராம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே

விளக்கம்

தேம்பழம் = இனிய பழம். தடம் = அகன்ற. கயம் = நீர்நிலை. மேலோட்டமாக பார்க்கும்போது, இயற்கை காட்சியை விவரிப்பதுபோல் தோன்றினாலும் சற்று ஆழமாக சிந்தித்தால் அப்பர் பிரான் இந்த இயற்கை நிகழ்ச்சி மூலம் நமக்கு உணர்த்துவது வேறு பொருளாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. முதல் ஐந்து பாடல்களில் சிவானந்தத்தில் ஆழ்ந்து கிடக்கும் வலம்புரத்து அடியார்களின் செய்கையை குறிப்பிடும் அப்பர் பிரான், ஆறாவது பாடலில் அந்த சிவானந்தத்தை பெறவேண்டும் என்ற ஏக்கத்தினை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், தடம் பொய்கை என்று சிவனருட் கடலை குறிப்பிடுகின்றார் என்ற ஐயம் தோன்றுகின்றது.

அந்நாள் வரை சிவபெருமானை நினையாதிருந்த ஆன்மா, தனக்கு நிலையான பேரின்பமாகிய, முக்திப் பேற்றினை அடைய வேண்டி சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வருகின்றது. அங்கே சிவானந்தத்தில் திளைத்து நீராடிக்கொண்டிருக்கும் மற்ற ஆன்மாக்களைக் காண்கின்றது. அந்த அடியார்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களுடன் இணைந்து இருப்பதையே விரும்பும் ஆன்மா, அவர்களது தொடர்பினால் தானும் சிவானந்தத்தில் திளைக்கும் நிலையினை அடைகின்றது என்பதே இந்த பாடலின் உட்கருத்தாகும்

பொழிப்புரை

செங்கயல் மீன்களும் சேல் மீன்களும், தாங்கள் உண்பதற்காக இனிய பழங்கள் நிறைந்த நீர்நிலைகளை நாடி, தாங்கள் இருந்த இடத்தினை விடுத்து அகன்ற குளத்தினை அடைகின்றன. அந்த குளத்தினில் நீராடும் மங்கையர்களின் செழுத்த மார்பகங்களைக் கண்ட மீன்கள், அவைகளை கனிகள் என்று நினைத்து ஏமாறுகின்றன. அத்தகைய அழகினைக் கொண்டவர்களாகவும் இல்லறத்தில் சிறந்தவர்களாகவும் விளங்கும் பெண்கள் வாழும் வலம்புரத்து தலத்தில், சிவபெருமான் வலம்புரத்து அடிகளாக உறைகின்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com