38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 7

தனது மகளுக்குத் தான் கூறிய அறிவுரைகள்


பாடல் 7

    ஒன்று தான் அறியார் உலகத்தவர்
    நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
    துன்றுவார் பொழில் தோணிபுரவர் தம்
    கொன்றை சூடும் குறிப்பது ஆகுமே

விளக்கம்

தனது மகளுக்குத் தான் கூறிய அறிவுரைகள் தனது மகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தனது வேண்டுகோளை ஏற்று சிவபெருமானும் தனது மகளின் துயரினைத் தீர்ப்பதற்கான செயல் ஏதும் செய்யவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அப்பர் நாயகியின் துயரம் நீள்கின்றது. நடந்ததை உணராத உலகத்தவர், தாய் தனது மகளின் உடல் நலத்தினை பேணவில்லை என்று குறை கூறவே, அந்த தாய் உலகத்தவரை சாடுகின்றாள். அந்த கருத்தினில் அமைந்த பாடல் இது.

பொழிப்புரை

நடந்ததை, அதாவது எனது மகளுக்கு நான் அறிவுரை கூறியதையும், அந்த அறிவுரைகளை அவள் ஏற்றுக்கொள்ளாமல், அவள் பிடிவாதமாக சிவபெருமான் மீது கொண்டுள்ள காதலை கைவிடாமல் இருப்பதையும், சிவபெருமானிடம் நான் வேண்டியதையும், சிவபெருமான் எனது வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல் இருந்ததையும், உலகத்தவர் அறியமாட்டார்கள். எனது மகளின் விருப்பம், சோலைகள் நெருக்கமாக உள்ள தோணிபுரத்து இறைவர் தனது தலையில் சூடியுள்ள கொன்றை மலரைத் தனது தலையில் சூடிக் கொள்ளவேண்டும் என்பதுதான். இந்த விருப்பம் நிறைவேறுவது கடினம் என்பதை அவர்கள் எவரும், எனது மகளுக்கு அறிவுரையாக சொல்லி, அவளை நல்வழிப்படுத்தவும் முயற்சி ஏதும் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com