40. ஆண்டானை அடியேனை - பாடல் 7

நெருப்பினை ஒத்து சிவந்த நிறத்து மேனியின்

பாடல் 7

நெருப்பு அனைய திருமேனி வெண்ணீற்றானை நீங்காது
                      என் உள்ளத்தின் உள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும்
                        வியன் துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய்மலை நீங்கா
         இறையவனை எனை ஆளும் கயிலை என்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே
                            ஆற்ற நாள் போக்கினேனே

விளக்கம்

பதிகத்தின் முதல் நான்கு பாடல்களில், பெருமான் தனக்கு உதவியதை நினைவுகூர்ந்து மனம் நெகிழும் அப்பர் பிரான், தனது உள்ளத்தில் பெருமான் என்றும் நீங்காது நிலவுவதாக இந்த பாடலில் கூறுகின்றார். தனது மனதினில் இறைவன் உறைவதாக கூறிய அப்பர் பிரானுக்கு இறைவன் மூர்த்தமாக உறையும் பல சோழ நாட்டுத் தலங்கள் நினைவுக்கு வந்தன போலும். சில தலங்களை இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

நெருப்பினை ஒத்து சிவந்த நிறத்து மேனியின் மேல் வெண்ணீறு அணிந்தவனாக காணப்படுபவனும், மிகுந்த விருப்பத்துடன் எனது உள்ளத்தில் நீங்காது நிலைபெற்று இருப்பவனும், வேதம் ஒதுபவனும், வேதத்தை நன்கு உணர்ந்தவனும், திருவெண்காடு அகன்ற காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள திருத்துருத்தி இடைமருது ஈங்கோய்மலை ஆகிய தலங்களில் நீங்காது உறைபவனும், என்னை ஆட்கொண்டவனும், கயிலை மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் தலத்து இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com