40. ஆண்டானை அடியேனை - பாடல் 8

திருமால் சிவபெருமானை புகழ்ந்து

பாடல் 8

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா
                                                                                     அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும்
                                                                                                  மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள்
                                                                 தீயெழத் திண்சிலைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே
                                                                         ஆற்ற நாள் போக்கினேனே


விளக்கம்

ஆயிரம் நாமங்கள் கொண்டு வானவர்கள் சிவபெருமானை ஏத்துவதாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில்,

திருமால் சிவபெருமானை புகழ்ந்து அவரது ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு பாடிய சஹஸ்ரநாமம் ஒரு பகுதியாக உள்ளது. திருமால் அருளிய இந்த தோத்திரத்தை,

வானவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிவபெருமானை வணங்கினார்கள் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். ஒரு நாமம், ஒரு உருவம் என்ற கட்டுப்பாட்டுக்கு

அடங்காத பெருமானுக்கு, ஆயிரம் திருநாமங்கள் பாடி தெள்ளேணம் கொட்டுவோம் என்று மணிவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார். பலவேறு வடிவங்களில்

அடியார்களுக்கு காட்சி அளிப்பவனும், எங்கும் நிறைந்தும் காணப்படும் இறைவனை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்கமுடியுமா, முடியாது அல்லவா. எந்த வடிவத்தில்

அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்திபடைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அவன் எடுக்கும் உருவங்களுக்கு ஏற்ப,

அவனது கருணைச் செயல்களுக்கு ஏற்ப, அவனது புகழத்தக்க குணங்களுக்கு ஏற்ப, அவனுக்கு பல பெயர்கள் அமைகின்றன. எனவே அத்தகைய பெயர்களையும் நாம் ஒரு

எண்ணிகையில் அடக்கமுடியாது. அதனால்தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார்.

திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

ஆயிரம் என்பது எண்ணிக்கை கடந்த நிலையை உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம். வாராத செல்வம் = வீடுபேறு, எளிதில் கிடைக்காத முக்திச் செல்வம் என்றும் மறுபடியும் பிறப்பு எடுக்க நேரிட்டு நிலவுலகுக்கு திரும்பி வாராத நிலை அளிக்கும் முக்திச் செல்வம் என்று இருவிதமாக பொருள் கொள்ளலாம்.

இந்த தலத்தில் உள்ள இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர். தாரகாசுரனுடன் செய்த போரினால் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு. சிவபெருமானை முருகப் பெருமான் வேண்ட, சிவபெருமான் தனது மனைவி உமை அம்மையுடன் இங்கே எழுந்தருளி மருத்துவம் செய்ததாக தல வரலாறு கூறுகின்றது. பெருமான் அளித்த மருந்தினை, எண்ணெயில் குழைத்து காயங்களில் தடவுவதற்கு வசதியாக தேவி, தனது கையில் எண்ணெய்க் கிண்ணம் தாங்கியதால் தேவிக்கு தைல நாயகி என்றும் வைத்தியம் செய்த பெருமானுக்கு வைத்தியநாதன் என்ற பெயரும் ஏற்பட்டன. நாளடைவில் தைல நாயகி என்ற பெயர் தையல் நாயகி என்று மருவிவிட்டது. இந்த தலத்தின் தலமரமான வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து சிவபெருமான் காயம் பட்ட வீர்களுக்கு சிகிச்சை செய்ததாக நம்பப்படுகின்றது.

பஞ்சாக்கர மந்திரத்தை மந்திரம் என்றும், பஞ்சாக்கர மந்திரத்தால் விளக்கப்படும் ஆகம நூல்களை தந்திரம் என்றும் அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின் வழியே செய்யப்படும் தியானம், பூஜை, ஜெபம் ஆகியவற்றை மருந்து என்றும் அப்பர் பிரான் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை

எண்ணிக்கையில் அடங்காத பல்லாயிரம் திருநாமங்கள் சொல்லி வானோர்கள் சிவபெருமானை வாழ்த்தி வணங்குகின்றார்கள். எப்போதும் தங்களது சிந்தனையில் பெருமானை நினைத்து வாழும் அடியார்களுக்கு, எளிதில் எவருக்கும் கிடைக்காத முக்திச் செல்வத்தை அளிப்பவன் சிவபெருமான்; மந்திரமாகவும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளாகவும் இருந்து தீராத நோய்களையும் தீர்க்கவல்ல மருந்தாகவும் இருப்பவன் சிவபெருமான். தங்களது விருப்பம் போன்று வானில் பறந்துகொண்டு இருந்த மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழியுமாறு, வல்லமை வாய்ந்த வில்லினைக் கையில் ஏந்தி போரில் ஈடுபட்டவன் சிவபெருமான். இத்தகைய பண்புகள் கொண்ட புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com