40. ஆண்டானை அடியேனை - பாடல் 10

கயிலாய மலையினை தகர்ப்பதற்கு

பாடல் 10

இறுத்தானை இலங்கையோர் கோன் சிரங்கள் பத்தும் எழுநரம்பின்
                                                                    இன்னிசை கேட்டு இன்புற்றானை    
அறுத்தானை அடியார் தம் அருநோய் பாவம் அலைகடலில் ஆலாலம்
                                                                                                                      உண்டு கண்டம்
கறுத்தானைக் கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானைக் கனல்
                                                                                                 மழுவும் கலையும் அங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற
                                                                                                                  நாள் போக்கினேனே

விளக்கம்

இறுத்தான் = நசுக்கியவன்

பொழிப்புரை

கயிலாய மலையினை தகர்ப்பதற்கு முயற்சி செய்த அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் மலையின் அடியில் நசுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும், பின்னர் அரக்கன் இராவணன் தனது கை நரம்புகளை வீணை நரம்புகள்போல் மீட்டி சாம வேதம் இசைக்க, அந்த இன்னிசை கேட்டு இன்பமடைந்து, அரக்கனின் துயர் தீர்த்தவனும், அடியார்களின் கொடிய நோய்களையும், தீய வினைகளையும் தீர்த்தவனை, பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த கொடிய ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி, நீலகண்டனாக விளங்குபவனும், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளால் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு விழித்தவனும், தீப்பொறி கக்கும் மழுப் படையினையும் கலைமான் கன்றினையும் தனது கையினில் ஏந்தியவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

முடிவுரை

பதிகத்தின் முதல் மூன்று பாடல்களிலும், தன்னை ஆளாகக் கொண்டதையும், தனது சிந்தையுள்ளே திகழ்ந்து இருந்ததையும், தன்னைத் தேவாரப் பாடல்கள் பாடவைத்ததையும், தனது உள்ளத்தில் இருந்த இருளை நீக்கி தனது சிந்தைனையை தெளிவுபடச் செய்ததையும் குறிப்பிட்டு அப்பர் பிரான் இவ்வாறு அருள்புரியும் கருணைக் கடலாகத் திகழ்ந்த சிவபெருமானை நினையாது வீணாக பல வருடங்கள் சமண சமயம் சார்ந்து இருந்ததை நினைத்து வருந்துகின்றார். இவ்வாறு பல விதங்களிலும் தனக்கு உதவி செய்த பெருமானை, எப்போதும் நினைத்தவாறு அப்பர் பிரான் இருந்ததில் வியப்பு ஏதுமில்லை. பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில் தனது உள்ளத்தை விட்டு என்றும் நீங்காது இறைவன் இருந்ததாக, மிகுந்த பெருமையுடன் அப்பர் பிரான் கூறிக் கொள்வதை நாம் உணரலாம். இவ்வாறு, இறைவன் தன்னை ஆட்கொண்டதால் தான் அடைந்த பெருமைகளை, பயன்களை அப்பர் பிரான் இந்த பதிகத்தின் பல்வேறு பாடல்களில் கூறுவது நமக்கு திருவாசகத்தின் கோத்தும்பீ பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது.

நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ

இறைவனால் திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப்படுவதற்கு முன்னர், வாதவூரன் என்ற பெயரில் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்தவர் மணிவாசகர். இவ்வாறு மந்திரியாக வாழும் வாழ்க்கையே நிலையானது என்ற உணர்வுடன், மதி மயங்கி வாழ்ந்துவந்த தனது செருக்கு, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவுடன் அழிந்தது என்பதை உணர்ந்த மணிவாசகர், தனது உண்மையான நிலையை, ஆன்மா வாதவூரன் என்ற பெயருடன் பிணைக்கப்பட்டுள்ள வாழ்க்கை நிலையற்றது என்பதையும், ஆன்மா வேறு வாதவூரன் வேறு என்ற உண்மையையும் உணர்கின்றார். இந்த உண்மையைத்தான், இதுவரை தான் யார், தனது உள்ளம் எத்தகையது, தனது அறிவின் உண்மையான நிலை யாது என்பதை தான் உணராமல் இருந்ததாகவும், தனது உண்மையான நிலையை புரிந்து கொண்டதாக கூறுகின்றார். தான் இறைவனின் திருவடியில் கட்டுண்ட அடிமை என்றும், தனக்கென்று ஊர் பெயர் ஏதுமில்லை என்பதும், தனது உள்ளத்தில் யான் எனது என்ற நினைவுகள் நீங்கிய பின்னர் இறைவனே குடிகொண்டிருப்பதால் தனக்கென்று தனியாக உள்ளம் ஏதுமில்லை என்பதையும், உணர்ந்ததை நமக்கு உணர்த்துகின்றார். நான் என்ற உணர்வே மறைந்த பின்னர், அது பற்றிய ஞானமும் மறைகின்றது.

ஆனால் தன்னில் ஏற்பட்ட இந்த மாற்றங்களை, தன்னைத் தவிர வேறு எவரும் அறியவில்லை என்று கூறும் மணிவாசகர், இறைவனின் திருவடிக்கு சென்று தனது தூதுச் செய்தியை உணர்த்துமாறு தும்பியை வேண்டுகின்றார்.

பதிகத்தின் ஐந்தாவது பாடலில் பஞ்ச பூதங்களின் தன்மையாக விளங்கி, உலகுக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இறைவன் உள்ள நிலை உணர்த்தப்படுகின்றது.

பதிகத்தின் கடைப் பாடல்கள் மூன்றும் இறைவனின் பெருமையையும் கருணையும் உணர்த்துகின்றன. பல வருடங்கள் சிவபெருமானைப் போற்றாது வீணாகத் தனது வாழ்நாளை கழித்த நிலையைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கும் அப்பர் பிரான், அத்தகைய நிலைக்கு நாம் ஆளாமல், இளமைக் காலத்தில் இருந்தே இறைவனை வணங்கி நாம் உய்ய வேண்டும் என்பதை இந்த பதிகம் மூலம் உணர்த்துகின்றார். அவரது அறிவுரையை ஏற்று நாமும் இறைவனை வணங்கி பயன் பெறுவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com