41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 3

ஊனக் கண்களுக்கு இல்லாதவன் போன்று

பாடல் 3

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை இனிய
                                                 நினையாதார்க்கு இன்னாதனை
வல்லானை வல்லடைந்தார்க்கு அருளும் வண்ணம்
                       மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைத் திருப்புன்கூர்
                                                                மேவிய சிவலோகனை
நெல்லால் விளைகழனி நீடூரானை நீதனேன் என்னே நான்
                                                                                 நினையாவாறே

விளக்கம்

இல்லானை = ஊனக் கண்களுக்கு புலப்படாத தன்மை. இன்னாதான் = கொடியவன். வல்லடைந்தார் = வலிதான பற்றாக அடைந்தவர்கள், வலிமையான பற்றுக்கோடு என்று கருதி இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொள்ளும் அடியார்கள். மாட்டாதார் = நினைக்கமாட்டாதார்கள், சொல்லாதவர்கள், அடையாதார்கள். செல்லாத = பிறர் எவரும் செல்ல இயலாத, செல்லாத செந்நெறி என்பதற்கு, அந்த இடத்தினை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நிலையாக இருக்கும் இடம் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. வல்லடைந்தார் = விரைந்து சரண் புகும் அடியார்கள்;

பொழிப்புரை

அனைத்து இடங்களிலும் பரந்தும், அனைத்துப் பொருட்களிலும் கலந்தும் இருந்தாலும் ஊனக் கண்களுக்கு இல்லாதவன் போன்று தோன்றுபவனும், அன்புடன் தன்னை நினையாத உயிர்களுக்கு இனியன் அல்லாதவனாக இருப்பவனும், தன்னை விரைந்து சரணம் புகும் அடியார்களுக்கு அருள் புரியும் வல்லமை படைத்தவனும், தன்னைச் சரணடையாத மனிதர்களுக்கு எவ்வகையிலும் அருள் செய்யாமல் இருப்பவனும், மறுபடியும் பிறப்பெடுத்து பூமிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வகையில் தனது அடியார்களுக்கு நிலையான முக்திப் பேறு அளிப்பவனும், திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், நெல்வயல்கள் நின்றந்த நீடூர் தலத்து இறைவனும் ஆகிய பெருமானை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com