41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 4

பாடல் 4

கலைஞானம் கல்லாமே கற்பித்தானைக் கடு நரகம் சாராமே
                                                                       காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானேயாகிப் பணிவார்கட்கு அங்கங்கே
                                                                           பற்றானானைச்
சிலையால் புரம் எரித்த தீயாடியைத் திருப்புன்கூர் மேவிய
                                                                             சிவலோகனை
நிலையார் மணிமாட நீடூரானை நீதனேன் என்னே நான்
                                                                             நினையாவாறே


விளக்கம்

கல்லாதே கற்பித்தான் = கற்க வேண்டிய அவசியம் இன்றி, தனது அடியார்களின் உள்ளே நின்று அவர்கள் அனைத்தையும் உணரச் செய்யும் தன்மை; இந்த பண்பிற்கு எடுத்துக்காட்டாக நாம் திருஞான சம்பந்தரின் வாழ்க்கையை காண்கின்றோம். மூன்று வயது குழந்தைக்கு, ஞானம் கலந்த பால் ஊட்டப்பட்டு, அந்த நிமிடத்திலிருந்தே பாடல்கள் பாடச் செய்தவன் சிவபெருமான். இதனை உணர்த்தும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி
உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர் நோக்கும்
கண்மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற்கிண்ணம்
                                                                                           அளித்து
அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள்
                                                                                          புரிந்தார்

பொழிப்புரை

கலைஞானத்தை முறைப்படி கற்று அறிய வேண்டிய அவசியம் இல்லாதபடி, கற்பிக்க வல்லவனும்; தனது அடியார்களை கொடிய நரகம் சென்று அடியாதபடி காக்கும் வல்லமை படைத்தவனும்; அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டும் அவர்களை காக்கும் பொருட்டும், பல வேடங்களை ஏற்றவனும், தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களுக்கு பற்றுகோடாகத் திகழ்பவனும், மேரு மலையினை வில்லாகக் கொண்டு ஒரே அம்பினால் பறக்கும் மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், தனது உள்ளங்கையில் தீயினை ஏந்தியவண்ணம் நடனமாடுபவனும், திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், நிலையாக விளங்கும் அழகிய மாட வீடுகளை உடைய நீடூர் தலத்து இறைவனும் ஆகிய பெருமானை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com