41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 5

முடிவிலாத ஆற்றல் உடையவன்,

பாடல் 5

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே
                                                      யாதொன்றும் நுணுகினானை
ஆக்காதே யாதொன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்
                                                       தம்மை அணுகாதானைத்
தேக்காதே தெண்கடல் நஞ்சு உண்டான் தன்னைத் திருப்புன்கூர்
                                                       மேவிய சிவலோகனை
நீக்காத பேரொளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான்
                                                        நினையாவாறே

விளக்கம்

இறைவன் படைத்த உயிர்களுக்கு கருவி கரணங்கள், தங்களது அறிவினை பெருக்கிக்கொள்ளவும், வாழவும் தேவைப்படுகின்றன. அவ்வாறு அளிக்கப்பட்டுள்ள கருவிகளும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இயங்குகின்றன. நமது கண்களால் குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட பொருட்களை மட்டுமே காணமுடியும். நமது அறிவினால், ஒருவர் நமக்கு உணர்த்தும் விடயங்களை மட்டுமே அறிய முடியும், ஆனால் இத்தைகைய வரையறைகள் இறைவனுக்கு இல்லை. இந்த செய்திதான் இங்கே உணர்த்தப்படுகின்றது. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு உரை காணும் பரிமேலழகர், இறைவனின் எட்டு குணங்களாக கருதுபவை இன்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன - தன்வயத்தன், தூய உடம்பினன், இயற்கை உணர்வினன், முற்றும் உணர்ந்தவன், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன், பேரருள் படைத்தவன், முடிவிலாத ஆற்றல் உடையவன், வரம்பிலா இன்பம் உடையவன். குறிப்பிட்ட எல்லைக்குள் இயங்கும் கருவிகளைக் கொண்டு, அவனால் முற்றும் உணரமுடியதாது அல்லவா. எனவே தான், கருவிகளைக் கொண்டு உணராதவன் என்பதை தெளிவிக்கும் பொருட்டு, நோக்காதே நோக்கினான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

ஆக்காதே யாதொன்றும் ஆக்கினான் = நாம் ஒரு பொருளை உண்டாக்க வேண்டும் என்றால், அதற்குரிய மூலப் பொருட்களும், கருவிகளும் நமக்கு தேவைப்படும். மேலும், அவ்வாறு உருவாக்குவதற்கு நேரமும் செலவாகும். ஆனால் இறைவன் நினைத்த மாத்திரத்தில் எந்த பொருளையும், உருவாக்கும் சக்தி படைத்தவன். அவ்வாறு படைப்பதற்கு அவனுக்கு எந்த மூலப் பொருளும், கருவிகளும் தேவையில்லை. இந்த கருத்து தான் இங்கே சொல்லப்படுகின்றது. மணிவாசகரும் திருவாசகம் திருச்சதகம் பதிகத்தில் வித்து ஏதுமின்றி முளைக்கச் செய்பவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். விச்சு = வித்து; முதலில் தோன்றியது விதையா அல்லது செடியா என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இறைவன் விதையின்றி செடியை உருவாக்கியதை மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

விச்சது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம்
                                                                          முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன்
                                                                             கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்
                                                                                 தாம் வளர்த்ததோர்
நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய
                                                                                                  நாதனே

அப்பர் பிரான் ஆரூர் பதிகத்தின் ஒரு பாடலில் (4.4.2) விதையின்றி பயிர் விளையச் செய்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். விச்சு = விதை. நாறு = பயிர். ஊழிக் காலம் முடிந்தபின்னர், ஒடுங்கிய உலகத்தையும் உயிர்களையும் மீண்டும் தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் சிவபெருமான், அப்போது ஒடுக்கத்திலிருந்து உலகத்தை விரிக்கின்றார். இதுதான் வித்து ஏதும் இல்லாமல் படைப்பது என்று இங்கே கூறப்படுகின்றது. அவ்வாறு தோன்றிய உலகத்தினின்று விதைகளும், விதைகளிலிருந்து பல உயிர்களும் தொடர்ந்து உண்டாகின்றன. கொடிய நரகம் புகுவதற்கு தகுதியான பாவங்கள் செய்தவர்களாக இருந்தாலும், அவர்களையும் தேவர்களின் நிலைக்கு உயர்த்தும் திறமை படைத்தவன் சிவபிரான் என்று, நரகரைத் தேவு செய்வான் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதம் கொண்டாட வல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன்னோட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச் சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

பொழிப்புரை

கண் போன்ற கருவிகளின் உதவி கொண்டு பார்க்காமல், தான் நினைத்த மாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் காண வல்லவன் சிவபெருமான். மிக மிக நுண்ணிய பொருட்களிலும் அந்த பொருட்களை விடவும் நுண்ணியனாய், அந்த பொருட்களுடன் கலந்து இருப்பவன் சிவபெருமான். எந்த விதமான கருவிகளோ அல்லது மூலப்பொருட்களோ இல்லாமல் அனைத்துப் பொருட்களையும், தான் நினைத்த மாத்திரத்தில் படைப்பவன் சிவபெருமான். தன்னை நெருங்காத மனிதர்களுக்கு அருள் செய்யும் வண்ணம் அவர்களை நெருங்காமல் இருப்பவன் சிவபெருமான். தெளிந்து இருந்த பாற்கடல், கடையப்பட்டதால் எழுந்த நஞ்சினை, உலகத்தவர் அனைவரையும் காக்கும் பொருட்டு, மிச்சம் மீது வைக்காமல் அனைத்து நஞ்சினையும் உண்டவன் சிவபெருமான்; இத்தகைய அரிய பண்புகள் வாய்ந்தவனும் திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும் நீங்காத பேரொளி உடையவனும் நீடூர் தலத்து இறைவனும் ஆகிய பெருமானை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com