41. பிறவாதே தோன்றிய பெம்மான் - பாடல் 6

சுடுகாட்டு சாம்பலைத் தனது உடலில்,

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்தம் உடையானை முடைநாறும்
                                                                                       புன்கலத்தில்
ஊணலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளிதிகழும்
                                                                                       மேனியானைச்
சேணுலாம் செழும்பவளக் குன்று ஒப்பானைத் திருப்புன்கூர்
                                                                          மேவிய சிவலோகனை
நீணுலா மலர்க்கழனி நீடூரானை நீதனேன் என்னே நான்
                                                                                        நினையாவாறே

விளக்கம்

பூணலாப் பூண் = எவரும் அணியமுடியாத அணிகலன், கொடிய விடம் கொண்டு படம் எடுத்தாடும் பாம்பினை அணிகலனாக உடலில் பூணும் வல்லமை உடையவன் சிவபெருமான் ஒருவனே என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. ஊணலா ஊணான் = தான் உண்பதற்காக அன்றி பிச்சை எடுப்பவன். பிச்சை எடுத்த உணவினை உண்ணாதபோது அவன் எதற்காக பிச்சை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவன் பிச்சை எடுப்பதே, தான் வாழ்வதற்கன்றி, உலகத்தவர்கள் தங்களது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை பிச்சையாக இறைவனிடம் சமர்ப்பித்து தாங்கள் உய்வதற்காகத்தானே.

பொழிப்புரை

எவரும் அணிவதற்கு தயக்கம் கொள்ளும் பாம்பினை, அணிகலனாகத் தனது உடலில் அணிந்தவன் சிவபெருமான்; மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சுடுகாட்டு சாம்பலைத் தனது உடலில், சந்தனம் பூசிக் கொள்வது போன்று மிகவும் விருப்பத்துடன் அணிந்துகொள்பவன் சிவபெருமான். புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சை எடுத்த உணவினை உண்ணாதவன் சிவபெருமான். மேற்கண்ட அவனது செய்கைகளின் காரணத்தை எவரும் அறிந்திலர். ஒளி திகழும் மேனியை உடையவனும், மிகவும் சிறந்த செம்மையான பவளக் குன்றினை ஒத்த மேனியை உடையவனும் ஆகிய திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், மிகுதியான மலர்கள் காணப்படும் வயல்களை உடைய நீடூர் தலத்து இறைவனும் ஆகிய இறைவனை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com