38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 1

ஞானசம்பந்தர் அப்பரே என்று அழைக்க


(தோணிபுரம் – குறுந்தொகை)

பின்னணி

தில்லையில் அப்பர் பிரான் உழவாரப் பணி செய்து வரும்போது ஒரு நாள், ஒரு அடியவர் சீர்காழியில் இறைவனது அருளால் ஞானப்பால் பெற்ற நாள் முதல், பதிகங்கள் பாடிய குழந்தை ஞானசம்பந்தரின் பெருமையினை சொல்லக் கேட்டார். இதனைக் குறிப்பிடும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    கடை யுகத்தில் ஆழியின் மேல் மிதந்த திருக்கழுமலத்தின்
                                                              இருந்த செங்கண்
    விடை உகத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை
                                                              திருமுலைப் பாலோடும்
    அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து
                                                               ஊட்டஅமுது செய்த
    உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை அடியார்கள்
                                                                உரைப்பக் கேட்டார்

அந்த சொற்களைக் கேட்ட உடனே அப்பர் பிரான், காழிப் பெருந்தகையின் மலர் போன்ற திருவடிகளை வணங்க விருப்பம் கொண்டார். பின்னர் அம்பலத்தரசனை அடிவணங்கி, தில்லையின் திருவீதிகளில், புரண்டு திருவலம் செய்து சீர்காழி சென்றார். திருநாவுக்கரசுப் பெருமான் சீர்காழி வருவதை அறிந்த ஞானசம்பந்தர் தனது தொண்டர்களுடன் கூடி, அவரை நகர எல்லையில் வரவேற்றார். அப்போது ஞானசம்பந்தர் அப்பரே என்று அழைக்க, திருநாவுக்கரசரும் அடியேன் என்று பதில் கொடுத்தார் என்று சேக்கிழார் பெரியபுராணப் பாடல் ஒன்றினில் கூறுகின்றார்.

    தொழுது அணைவுற்ற ஆண்ட அரசு அன்புருகத் தொண்டர் குழாத்திடையே
                                                                                                                                  சென்று
    பழுதில் பெருங்காதலுடன் அடிபணியப் பணிந்தவர் தம் கரங்கள் பற்றி
    எழுதரிய மலர்க் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்
                                                                                                                                    தம்மை
    அழுது அழைத்துக் கொண்டவர் தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்

ஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்கும் பேற்றினை பெற்றேன் என்று அப்பர் பிரான் மகிழ்ச்சி அடைய, திருநாவுக்கரசு நாயனாரை வணங்கியதால் சம்பந்தரும் பெருமகிழ்ச்சி அடைய இருவரும் ஒருவருடன் ஒருவர் கலந்து நின்ற நிலையினை, சைவ சமயத்தின் இரண்டு புண்ணிய கண்கள் கலந்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பின்னர் இருவரும் தொண்டர்கள் உடனாக திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானை தரிசனம் செய்தார்கள். அப்போது திருஞான சம்பந்தர், அப்பர் பிரானை நோக்கி, உங்கள் தம்பிரானரை நீங்கள் பாடுங்கள் என்று வேண்ட, அப்பர் பிரானும் பார் கொண்டு மூடி என்று தொடங்கும் திருவிருத்தப் பதிகத்தை பாடினார். சீர்காழி தனது ஊராக இருந்தாலும், சீர்காழி தலத்தில் உறையும் இறைவனை புகழ்ந்து பல பதிகங்கள் தான் பாடி இருந்தாலும், எனது இறைவன் என்று சொல்லாது, உங்களது தம்பிரான் என்று சம்பந்தர், தன்னைவிடவும் அப்பருக்கு நெருங்கியவராக சிவபிரான் உள்ளார் என்று உணர்த்துவது, அவர் அப்பர் பிரான் பால் வைத்துள்ள மதிப்பினையும் மரியாதையையும் உணர்த்துகின்றது.

    பண்பயில் வண்டு அறை சோலை சூழும் காழிப் பரமர் திருக்கோபுரத்தைப்
                                                                                                                     பணிந்து உள் புக்கு
    விண் பணிய ஓங்கு பெருவிமானம் தன்னை வலம் கொண்டு தொழுது
                                                                                                    விழுந்து எழுந்த எல்லைச்
    சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானரை நீர் பாடீர் என்னக்
    கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மைக் கலை பயிலும்
                                                                                        மொழி பொழியக் கசிந்து பாடி

அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய மூன்று பதிகங்களில் இந்த பதிகம் ஒன்று. இந்த பதிகத்தில் அப்பர் பிரான் சீர்காழியினை தோணிபுரம் என்று குறிப்பிடுகின்றார். தோணிபுரம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். உலகம் முழுவதும் ஊழி வெள்ளத்தில் அழுந்தி மறைந்த போதும், தான் அழியாமல் கடலில் மிதக்கும் தோணி போன்று மிதந்த ஊர் என்பதால் தோணிபுரம் என அழைக்கப்பட்டது என்று சம்பந்தர் ஒரு (3.67.6) பாடலில் குறிப்பிடுகின்றார். ஆணியல்பு = ஆணின் குணமாகிய வீரத் தன்மை. வன வாண = வனத்தில் வாழும் வேடர்களின் இயல்பான வேடத்தில். தூணி = அம்பறாத் தூணி. வேணு சிலை = மூங்கிலால் செய்யப்பட்ட வில். பாணி = கை. பாணி அமர் = கைகளால் செய்யப்படும் மல்யுத்தம். பிரமாணி = கடவுள் தன்மைக்கு பிரமாணமாக உள்ள சிவபெருமான். ஏணி = மிகுந்து. பாணி = தண்ணீர். உலகாள = உலகத்தினை மூழ்கடிக்க. மிக ஆணின் மலி = தண்ணீரின் வலிமையையும் கடந்து மிதந்த.

ஆணியல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர்
தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன்
பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
பாணி உலகாள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே

சிவபெருமான் அர்ச்சுனனின் வீரத்தினை சோதனை செய்பவர் போன்று வேடனின் உருவில் வந்து, அர்ச்சுனன் விடுத்த மழை போன்ற அம்புக் கூட்டத்தினையும் தகர்த்து, அவனது அம்பறாத்தூணியில் அம்புகள் ஏதும் மீதம் இல்லாத வகையில் போர் செய்து, மேலும் அவனது வில்லின் நாணை அறுத்து வில்லினையும் முறித்தார். தனது ஆயுதங்கள் பயனற்றுப் போனதால் நாணமுற்ற அர்ச்சுனன், சிவபெருமானிடம் மற்போரில் ஈடுபட அவனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான் என்றும் கூறப்படும் இந்த பாடலில், ஊழிக் காலத்தில், பொங்கி வந்த நீரினையும் தாண்டி மிதந்த தலம் தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி என்றும் உணர்த்தப்படுகின்றது.

பதிகத்தின் ஒன்பது பாடல்கள் தாயின் கூற்றாகவும், ஒரு பாடல் மகளின் கூற்றாகவும் அமைந்துள்ள இந்த அப்பர் பிரானின் பதிகம் அகத்துறை வகையினைச் சார்ந்தது. சிவபெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள தனது மகளின் நிலையினை விவரிப்பதாக அமைந்துள்ள பாடல். சங்க இலக்கியங்கள், காதலுக்கும் வீரத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல்களை அதிகமாக கொண்டவை. அத்தகைய இலக்கியங்களை, சுவைத்து மகிழ்ந்த தமிழ் மக்களின் இரசனைக்கு ஏற்ப, இறைவனின் வீரச் செயல்களை ஆங்காங்கே விவரிக்கும் தேவார ஆசிரியர்கள், சிவபெருமான் மீது ஆராத காதல் கொண்ட அடியார்களை பெண்களாக உருவகித்து, அவர்களின் உணர்வுகளை, அகத்துறை கருத்துகளை கொண்ட பாடல்களாகவும் வடித்துள்ளனர். இறைவனை தலைவனாகவும், அவனது திருவடிகளை அடையத் துடிக்கும் அடியார்களை பெண்களாகவும் பாவித்து பாடல்கள் எழுதுவது, பல அருளாளர்கள் கடைப்பிடித்த பாணியாகும். நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களில், வரும் அத்தகைய நாயகிகளை பரகால நாயகி என்றும் பராங்குச நாயகி என்றும் உரை ஆசிரியர்கள் அழைக்கின்றார்கள். பரகாலன் என்று அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களில் வரும் பெண்மணிகள் பரகாலநாயகி என்றும், பராங்குசன் என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரின் நாயகிகள் பராங்குச நாயகி என்றும் பொதுவாக, உரை ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றார்கள். அதுபோன்று நாமும் அப்பர் நாயகி என்று, இந்த பதிகத்தில் உணர்த்தப்படும் தலைவியை அழைக்கலாம். அப்பர் பிரான், இந்த பதிகத்தின் நாயகி மூலம், சிவபெருமானால் ஈர்க்கப்பட்ட ஆன்மாவின் தன்மையை கூறுகின்றார். ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து, சிவானந்தத் தேனை பருக விரும்பும் நிலையை உணர்த்தும் பதிகமாக இந்த பதிகம் கருதப்படுகின்றது.

பாடல் 1


    மாது இயன்று மனைக்கு இரு என்றக்கால்
    நீதி தான் சொல நீ எனக்கு ஆரெனும்
    சோதியார் தரு தோணிபுரவர்க்குத்
    தாதி ஆவன் என்னும் என் தையலே

விளக்கம்

வயதுக்கு வந்த பெண்ணின் இயல்பு வீட்டினில் அடங்கி இருத்தல் என்பது நமது தேசத்தின் பண்பாடு. இந்த காரணத்தினால் தான் பண்டைய காலத்தில் பெண்களுக்கு கல்வியும் மறுக்கப்பட்டது. விஞ்ஞான யுகமாகக் கருதப்படும் இந்த நூற்றாண்டில், பெண்கள் தங்களது விருப்பப்படி கல்வி பயில அனுமதிக்கப்பட்டு, பொருளாதாரத்தின் அடிப்படையில் வேலைக்கு செல்வது அவசியமாக கருதப்படும் இந்த நாளிலும், பெருவாரியான தாயார்களின் விருப்பம் தங்களது பெண் அடக்கமாக இருக்கவேண்டும் என்பதுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதே விருப்பம்தான் அப்பர் நாயகியின் தாயின் விருப்பமாக இந்த பாடலில் தொனிக்கின்றது. காதல் வயப்பட்டு, காதலனைக் காண்பதற்காக ஏங்கும் எந்த பெண்ணின் உள்ளமும், தனது தாய் சொல்லும் அறிவுரையை ஏற்பதில்லை. இது உலக இயல்பு. இந்த இயல்பு தான் இங்கே சித்திரிக்கப் படுகின்றது தாயின் அறிவுரையை ஏற்காமல் புறக்கணித்தது மட்டுமல்லாமல், தாயினை நீ யார் என்று கேட்கும் அளவுக்கு, அப்பர் நாயகியின் காதல் தீவிரமாக இருந்ததை நாம் உணரலாம். இந்த நிலை, அப்பரின் ஆரூர் திருத்தாண்டகத்தை (6.25.7) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் நாயகி, தனது தாயினையும் தந்தையினையும் துறந்த தன்மையை நாம் உணுகின்றோம்.

    முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
    தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

முன்னம் ஒரு சமயம், ஆரூர் பெருமானது திருநாமத்தைக் கேட்ட தலைவி, அவனது தன்மைகளை பிறர் மூலம் கேட்டு அறிந்தாள்; அவனது இருப்பிடம் ஆரூர் என்பதையும் அறிந்த அவள், அவன் மீது தீராத காதல் கொண்டாள்; தனது பெற்றோர்களை அன்றே மனத்தினால் துறந்த அந்த நங்கை, அவனைப் பற்றிய நினைப்பில் எப்போதும் மூழ்கி இருந்ததால், தான் செய்யும் செயல்களையும் மறந்தாள்; தனது பெயரினையும் மறந்து இறுதியில் தன்னையே மறந்த அந்த நங்கை, அவனது திருவடிகளையே நினைத்து அவனுடன் ஒன்றிவிட்டாள் என்று இந்த பாடலில் அப்பர் நாயகியின் தன்மைகளை, இறைவன் மீது தீராத காதல் கொண்ட அடியார்களின் தன்மைகளை நமக்கு உணர்த்துகின்றார். மாது இயன்று = பெண்ணுக்கு உரிய இயல்புடன், அடக்கத்துடன். தையல் = மகள்.

பொழிப்புரை

தாய் என்ற உரிமையில், எனது மகளை நோக்கி, பெண்ணுக்கு உரிய அடக்கத்துடன், நீ வீட்டில் இரு என்று நான் கூறினேன். அதற்கு எனது மகள் அளித்த மறுமொழி இதுதான் - எனக்கு நீதி சொல்வதற்கு நீ யார்? நான் ஒளி பொருந்திய தோணிபுரத்து இறைவனார்க்கு அடிமையாக இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்; எனவே எனது காதலனாகிய சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பொருட்டாக கருதமாட்டேன். இந்த நிலையில் இருக்கும் எனது மகள் குறித்த எனது கவலை மிகவும் அதிகமாக பெருகுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com