38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 2

காதலனை அடைய முடியாத ஏக்கத்தில் தலைவி


பாடல் 2

    நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்ட
    மிக்க தையலை வெள்வளை கொள்வது
    தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்குத்
    தக்கது அன்று தமது பெருமைக்கே


விளக்கம்

காதலனை அடைய முடியாத ஏக்கத்தில் தலைவி உடல் இளைப்பதாகவும், அவ்வாறு உடல் இளைத்த தலைவியின் கைகளிலிருந்து அவளது வளையல்கள் கழன்று விழுவதாகவும் கூறுவது சங்க இலக்கியங்களில் காணப்படும் நயம். இந்த நிலைக்கு காரணமான தலைவனை வளையல்களை கொண்டவன் என்று கூறுவதும் சங்க இலக்கிய மரபு. அந்த மரபு இங்கே பின்பற்றப்பட்டு, தனது பெண்ணின் வளையல்களைக் கொண்டவன் சிவபிரான் என்று அப்பர் நாயகியின் தாய் குற்றம் சாட்டுகின்றாள். தனது மகள் தனது பேச்சினை ஏற்காத நிலையில், அந்த நிலைக்கு அவளை மாற்றிய அவளது காதலன் மீது தாயின் கோபம் பாய்வது இயற்கை தானே. பிச்சை கேட்க வந்த இறைவன், பிச்சைப் பொருள் இடப்பட்ட பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு, செல்வது தானே முறை; அதனை விடுத்து பிச்சையிட்ட பெண்ணின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவளது வளையல்கள் கழன்று விழுமாறு அவளை வருத்துவது தகாத செயல் அல்லவா.

சிவபெருமான் மீது காதல் கொண்ட நாயகி, பெருமானை அடையாத ஏக்கத்தினால் தனது உடல் இளைத்து வளையல்கள் கழன்று விழுந்ததை, பெருமான் மேல் ஏற்றி, அவனை வளைகள் திருடியவன் என்றும் வளைகள் கொண்டவன் என்றும் தேவார ஆசிரியர்கள் கூறுவதை கீழக்கண்ட பாடல்களில் நாம் காணலாம். திருஞான சம்பந்தர், தனது முதல் பதிகத்தின் (தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகம்) இரண்டு பாடல்களில், வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் என்று குறிப்பிடுகின்றார். முக்கீச்சரம் (தற்போதைய பெயர் = உறையூர், திருச்சியின் ஒரு பகுதி) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.6) சம்பந்த நாயகி, இருளில் நடனம் ஆடுபவரும், உடல் முழுவதும் வெண்ணீறு பூசுபவரும் ஆகிய சிவபெருமான், தனது வளையல்களை மாயமாக கவர்ந்து விட்டார் என்று கூறுகின்றாள். சிவபெருமானைக் காணாத ஏக்கத்தால், உடல் இளைத்து கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்த நிலைக்கு பெருமான் தான் காரணம் என்று இங்கே குற்றம் சாட்டுகின்றாள். மாமானதன் = பகைவரது மானத்தை அழிப்பவன். உறையூர் திருக்கோயில் கோச்செங்கட் சோழன் குறிப்பும் கட்டிய கோயில் என்ற இங்கே காணப்படுகின்றது.

    வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கிருள்
    வந்தென் ஆரவ்வளை கொள்வதும்ங்கொரு மாயமாம்
    அந்தண் மாமானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
    எந்தை முக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் ஏதமே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.97) முதல் பாடலில் அப்பர் பிரான், வீடுகள் தோறும் பிச்சை எடுக்கச் செல்லும் சிவபெருமான், பிச்சையிடும் மகளிரின் வளையல்கள் கழன்று விழுமாறு, அவர்கள் தன் மீது பிரேமை கொள்ள வைத்து அவர்களை ஏங்கச் செய்வது எதற்காக என்று கேள்வி கேட்பதை நாம் உணரலாம். இந்த பாடல், தாருகவனத்து மகளிரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் என்று கூறுவார்கள்.

    அட்டுமின் இல்பலி என்று அகம் கடை தோறும் வந்து
    மட்டவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என் கொலோ
    கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோளரவும்
    நட்ட நின்றாடிய நாதர் நல்லூர் இடம் கொண்டவரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பாடல் (7.37.2) ஒன்றினில் சிவபெருமானைக் காணாத ஏக்கத்தில் தனது கைகளில் வளையல்கள் நிற்கவில்லை என்பதை சுந்தர நாயகி உணர்த்துகின்றாள். அறத்திற்கு கண் போன்று விளங்கும் தலைவராகிய சிவபெருமானை, தான் மறக்க முடியாமல், உறக்கம் இழந்த நிலையையும் உடல் இளைத்து வளையல்கள் கழன்று நிற்கும் நிலையையும் பெருமானுக்கு உணர்த்துமாறு, பறவைகளை வேண்டும் பாடல் இது.

    பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்
    அறக் கண் எனத்தகும் அடிகள் ஆரூரரை
    மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும்
    உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே

முந்தைய பாடலில், தனது மகள் தனது பேச்சை ஏற்காமல் தன்னை புறக்கணித்ததால் தாய்க்கு மகள் மீது ஏற்பட்ட கோபம் உணர்த்தப்படுகின்றது. மேலும் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கிய, மகளின் காதலன் மீது அவள் கோபம் திரும்புகின்றது. இந்த நிலை நாம் இன்றும் காண்கின்ற நிலைதானே. தாய், சிவபெருமானின் செய்கை அவரது தகுதிக்கு ஏற்றதன்று என்று இங்கே கூறுகின்றாள். அந்த கோபம் இந்த பாடல் மூலம் வெளிப்படுகின்றது. நக்கம் = குறைந்த ஆடையுடன்.

பொழிப்புரை

குறைந்த ஆடைகள் அணிந்தவராய் தனது இல்லத்தின் வாயிலுக்கு வந்த பெருமான் பலி இடுக என்றலும், அவர் மீது பரிவுகொண்டு எனது மகள் அவருக்கு பிச்சை அளித்தாள்; பிச்சை அளித்த பெண், தன் மேல் விருப்பம் கொள்ளுமாறு செய்து, பின்னர் அவளை ஏங்க வைத்து, அவள் ஏக்கத்தினால் உடலிளைத்து தனது வளையல்கள் கழன்று விடும் நிலைக்கு அவளை உட்படுத்துவது, நீர் நிறைந்த வயல்கள் கொண்ட தோணிபுரத்து இறைவரின் பெருமைக்கு தகுந்த செயல் ஆகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com