38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 5

தலைவனை விட்டு பிரிந்திருக்கும் தலைவி


பாடல் 5

    பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இப்
    பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
    சுண்ணம் ஆடிய தோணிபுரத்து இறை    
    அண்ணலாருக்குச் சால அழகிதே

விளக்கம்

பெய்வளை = கைகளில் அடர்த்தியாக உள்ள வளையல்கள். சுண்ணம் = திருநீறு. வளை கொள்வது பற்றி இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், மறுபடியும், சிவபிரானுடன் இணையாத ஏக்கத்தில், அப்பர் நாயகியின் வளைகள் கழன்று விழுவதை, சிவபெருமான் வளைகள் கவர்ந்து கொண்டார் என்று அவர் மீது ஏற்றிச் சொல்வதை நாம் காணலாம். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு அவர் திருப்பழனம் தலத்தின் மீது அருளிய சொன்மாலை என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலை (4.12.10) நினைவூட்டுகின்றது. குஞ்சி = குடுமி, தலயில் உள்ள முடிக் கற்றை.

    வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்
    பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
    அஞ்சிப் போய் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி
    குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடு இயையே.

கோடு இயைதல் என்பது, தலைவனை விட்டு பிரிந்திருக்கும் தலைவி, தலைவனுடன் கூடுவது எந்நாளோ என்ற கவலையில், செய்யும் ஒரு செயல். தனது கண்களை மூடிக்கொண்டு, கால் கட்டை விரலால் தரையில் கோடுகள் இடுவது, அல்லது சிறு சிறு வட்டங்கள் போடுவது வழக்கம். இவ்வாறு போடப்படும் கோடுகள் இணைந்தால், தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும், வரைந்த சிறு வட்டங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் வந்தால் தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும் நம்புவதுண்டு. எனவே இவ்வாறு கோடுகள் இடும்போதும், வட்டங்கள் வரையும் போதும், அந்த கோடுகள் இயைய வேண்டும், அதாவது இணைய வேண்டும் என்றும் வட்டங்கள் இரட்டைப்படையாக கூட வேண்டும் என்று விரும்புவதும், அந்த விருப்பம் ஈடேற வேண்டும் என்று வேண்டுவதும் இயற்கை. எனவேதான், அப்பர் நாயகி தான் வரையும் கோடுகள் இணைய வேண்டும் என்று தனது விருப்பத்தை வேண்டுகோளாக, கோடு இயையே என்று இங்கே இறைவனை வேண்டுகின்றாள்.

எனது வளையல்களைக் கவர்ந்து என்னை வஞ்சித்து, என்னை பிரிந்துவிட்ட எனது தலைவன் சிவபிரான், செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்பஞ்சு போன்ற சிறகுகளையும் உடைய அன்னங்கள் கூட்டமாக ஆரவாரம் செய்யும் பழனத்துப் பெருமான், வாராமால் போனாலும் போகலாம். எனவே, பயத்தினால் கலி வருந்தி மெலியுமாறு வேள்விகள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடியில் பூவாகத் தனது சேவடிகளை வைத்த சிவபெருமானே, நான் வரையும் கோடுகள் இணையுமாறு அருளவேண்டும். அவ்வாறு கோடுகள் இணைந்தால், எனது தலைவன் என்னுடன் வந்து கூடுவான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படும் என்று நாயகி வேண்டுவதாக அமைந்துள்ள பாடல். எந்த இறைவன் வளையல்களை கவர்ந்தான் என்று குற்றம் சாட்டுகின்றாளோ அந்த இறைவனிடமே கோடு இயைய அருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் வைப்பது நமக்கு விசித்திரமாக தோன்றலாம். ஆனால் சற்று சிந்தித்து பார்த்தல் இந்த வேண்டுகோளின் பின்னணியில் உள்ள அடிப்படையை நாம் புரிந்து கொள்ளலாம். இறைவனின் பிரிவால், இறைவனுடன் கூடாததால் ஏற்பட்டுள்ள வருத்தத்தை இறைவன் ஒருவன் தானே தீர்க்க முடியும். அதனால் தான் இறைவனிடமே, உன்னைப் பிரிந்து நான் அடைந்துள்ள துயரத்தினை நீ தான் தீர்க்க வேண்டும் என்று அப்பர் நாயகி விண்ணப்பம் வைக்கின்றாள்.

துறவிக் கோலத்தில் வந்து பிச்சை ஏற்காமல், வேறு விதமாக வந்திருந்தால் ஒருகால் தனது பெண், பெண்ணுக்குரிய அடக்கத்துடன் வீட்டினில் உள்ளே இருந்திருப்பாளோ என்ற எண்ணம் தாய்க்குத் தோன்றுகின்றது. அதனால் தான் இங்கே அப்பர் நாயகியின் தாய், பெருமான் பிச்சை ஏற்று வந்த கோலத்தினை குறிப்பிட்டு, பெருமானிடம் குற்றம் காண்கின்றாள். ஆடைகளைத் துறந்து திருநீறு உடல் முழுவதும் பூசி, துறவி போன்று காட்சி அளிக்கும் ஒருவர், பிச்சையிட்ட பெண்மணியின் உள்ளத்தைக் கவர்வது, அவர் பூண்டுள்ள துறவிக் கோலத்திற்கு இழுக்கினைத் தேடித்தரும் அல்லவா. சிவபெருமான் தனது மகளின் வளையல்களை கவர்ந்தது அவரது தகுதிக்கு, பெருமைக்கு பொருத்தமான செயல் அல்ல என்று இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறிய தாய், இந்த பாடலிலும் அவ்வாறே கூறுகின்றாள். தாயின் உணர்வு மிகவும் அழகாக நமக்கு எடுத்து உரைக்கப்படும் நயமான பாடல்.

பொழிப்புரை

இனிமையான இராகம் போன்ற மொழியினைக் கொண்ட எனது பெண், எங்களது இல்லத்து வாயிலில் பிச்சை கேட்டு வந்த பெருமானுக்கு பிச்சை இட்டாள்: அந்த பெண்ணை, தனது அழகால் மயக்கிய சிவபெருமான், அவளை பிரிவுத் துயரில் ஆழ்த்தி அவளது வளையல்கள் கழலுமாறு செய்தான்; இத்ததைய செயல், திருநீற்றினால் அபிஷேகம் செய்யப்படுவதை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்ளும், தோணிபுரத்து அண்ணலுக்கு, பெருமை சேர்க்கும் செயலாக கருதப்படாது. எனவே சிவபெருமான், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு அவளது துயரத்தினைக் களைய வேண்டும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com