38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 6

வெண்மையான பற்களைக் கொண்டு ஒளி வீச

பாடல் 6

    முல்லை வெண்ணகை மொய் குழலாய் உனக்கு
    அல்லன் ஆவது அறிந்திலை நீ கனித்
    தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே
    நல்லை ஆயிடுகின்றனை நங்கையே

விளக்கம்

சென்ற பாடல் மூலம் இறைவனை, நீ தான் எனது மகளின் பிரிவுத் துயரினைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டிய தாய், தனது மகளின் துயரம் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதைக் கண்டு கோபம் கொள்கின்றாள். தனது வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ளாமல், தனது மகளின் துயரத்தையும் புரிந்துகொண்டு செயல்படாத சிவபெருமான் நல்லவன் அல்லன் என்ற முடிவுக்கு வருகின்றாள். தனது கருத்தினை தனது மகளுக்குத் தெரிவிக்கும் முகமாக இந்த பாடல் அமைந்துள்ளது.

பொழிப்புரை

முல்லைப் பூ போன்று வெண்மையான பற்களைக் கொண்டு ஒளி வீச நகை செய்யும் மகளே, புது மலர்கள் அணிந்ததால் வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளே, சிவபெருமான் உனக்கு நல்லவனாக இல்லாத நிலையை நீ உணரவில்லை. உனது அன்பினை பொருட்படுத்தாமல் இருக்கும் அவன், உனக்கு உரியவனாகமாட்டான் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்; ஆனால் இந்த உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல், கனிகள் அதிகமாக காய்க்கும் சோலைகளைக் கொண்டதும், பழமை வாய்ந்ததும் ஆகிய தோணிபுரத்து இறைவர்க்கு, நீ மிகவும் நல்லவளாக இருக்கின்றாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com