58. தளரும் கோளரவத்தொடு -பாடல் 8

அகங்கை என்ற சொல் அங்கை

அங்கை ஆரழல் ஏந்தி நின்று ஆடலன்
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை
கங்கையான் உறையும் கரக் கோயிலைத்
தம் கையால் தொழுவார் வினை சாயுமே
 

விளக்கம்

அகங்கை என்ற சொல் அங்கை என்று மருவியது. கையின் அகத்திலே அதாவது உள்ளங்கை என்று பொருள். ஆர் அழல் = தாங்குவதற்கு மிகவும் அரிய தீப்பிழம்பு. சாய = வலிமை இழந்து கெட. பெருமான் நடனம் ஆடும்போது மங்கை உடன் இருந்து பாடுவதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானின் நடனத்தை எப்போதும் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பினைப் பெற்ற பார்வதி அன்னை, நடனத்தை ரசித்தவாறு பாடுவதாக பல தேவாரப் பாடல்கள் கூறுகின்றன.

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் (1.46.7) பாடலில், உமையம்மை கீதம் பாட வேத முதல்வனாகிய பெருமான் நடனம் ஆடுவதாக கூறுகின்றார். ஞான சம்பந்தருக்கு இறைவன் தனது நடனக் காட்சியை காட்டியபோது பாடிய பதிகம். என்பதால் ஆடும் வீரட்டானம் என்று பெருமான் தன் முன்னே நடனம் ஆடியதை பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்
கீதம் உமை பாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன் நின்று ஆடும் வீரட்டானத்தே

புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (3.11.6) சம்பந்தர், உமை அன்னையின் பாட்டுக்கு பெருமான் நடனம் ஆடுவதாக குறிப்பிடுகின்றார்.

வாருறு மென்முலை மங்கை பாட நடமாடிப் போய்
காருறு கொன்றை வெண்திங்களானும் கனல்வாயதோர்
போருறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில்
சீருறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே

வாய்மூர் தலத்திற்கு சென்ற அப்பர் பிரானைப் பின் தொடர்ந்து சென்ற ஞானசம்பந்தர், அந்த தலத்தில் இறைவனின் நடனக் காட்சியைக் காண்கின்றார். அந்த காட்சியினை அப்பர் பிரானுக்கு அவர் சுட்டிக்காட்ட, அப்பர் பிரானும் அந்த காட்சியைக் கண்டு களிக்கின்றார். அந்த நடனக் காட்சியை உணர்த்தும் பாடலை சம்பந்தர், உமையம்மை அருகில் இருந்து பாடவும் தாளமிடவும், பெருமான் நடனம் ஆடியதாக கூறுகின்றார். இந்த பாடல் உமையம்மை பற்றிய குறிப்புடன்தான் தொடங்குகின்றது. தளிர்களோடு கூடிய இளங்கொம்பு போன்ற உமை பாட என்று தொடங்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (2.111.1). கிறிமை = மாயமான வேடம். விளரிள = முழு வளர்ச்சி அடையாத இளமையான முலைகள் வளர்ந்துகொண்டிருக்கும் பருவப் பெண். பாம்பினைத் தனது இடையில் கட்டி, தன்னை இளமங்கையர்கள் நெருங்காதவாறு வேடம் தரித்தாலும், தன்னிடம் அன்பு செலுத்தும் அவர்கள் பால் அதிகமான கருணை கொண்டு அவர்களுக்கு அருள் புரியும் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார்.

தளிர் இள வளர் என உமை பாடத் தாளம் இட ஓர் கழல்
                                    வீசிக்
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேடக்
                                     கிறிமையார்
விளரிள முலையவர்க்கு அருள் நல்கி வெண்ணீறு அணிந்து
                                 ஓர் சென்னியின் மேல்
வளரிள மதியமொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

பொழிப்புரை

தாங்குதற்கு மிகவும் அரிதான தீப்பிழம்பினைத் தனது உள்ளங்கையினில் ஏந்தி ஆடும் பெருமானின் நடனத்திற்கு ஏற்ப உமை மங்கை பாட, அந்த பாடலை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டவன் சிவபெருமான். தனது விரிந்த சடையில் கங்கை நதியை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், கடம்பூர் கரக் கோயிலில் உறைகின்றான். தங்களது கைகளால், பெருமானைத் தொழும் அடியார்களின் வினைகள், தங்களது வலிமையை இழந்து கேட்டுவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com