58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 11

தனது வழியில் குறுக்கிட்டது

வரைக் கண் நாலஞ்சு தோளுடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்
திரைக்கும் தண்புனல் சூழ் கரக் கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே
 

விளக்கம்

வரை = மலை, கயிலாய மலை. அரைக்க = அறைப்படும்படி. திரை = அலைகள். ஓயும் = செயல்படாது மெலியும்.

பொழிப்புரை

தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி, கைலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த இருபது தோள்கள் உடைய அரக்கனாகிய இராவணனின் பத்து தலைகளும், கயிலாய மலையின் கீழே நசுக்குண்டு அரைபடும்படி, தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய பெருமான், பின்னர் அரக்கன் கதறி அழுத போது அவனுக்கு அருள்கள் செய்தார். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான், அலைகள் வீசும் குளிர்ந்த தண்ணீர் உடைய ஆறுகளால் சூழப்பட்ட கடம்பூர் கரக்கோயிலில் உறைகின்றார். அந்த திருக்கோயிலின் பெயரை உரைக்கும் அடியார்களின் வினைகள், செயல்படாதவாறு தங்களின் வலிமை இழந்து ஓய்ந்துவிடும்.

முடிவுரை

பெருமான் தன்னைக் காப்பாற்றிய கருணைச் செயல்களை நினைவு கூர்ந்து, மனம் நெகிழ்ந்த அப்பர் பிரான், பெருமானுக்கு என்றென்றும் அடிமைப்பணி செய்து கிடப்பேன் என்று தனது கொள்கையை அறிவித்த உணர்ச்சிப்பெருக்கில், பாடல்களின் எண்ணிக்கையை மறந்து மேலும் ஒரு பாடலை அளித்துள்ளார் போலும். பெருமான் உறையும் கோயிலைத் தொழுதால் என்ன பலன்கள் அடையலாம் என்பதை இந்த பதிகத்தில் கூறுகின்றார். கரக்கோயிலைக் கை தொழுது உய்மின்கள் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறும் அப்பர் பிரான், இந்த கோயிலை நினைக்கும் அடியார்களின் வினைகள் நீங்கும் என்று பதிகத்தின் ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். மேலும் பதிகத்தின் எட்டாவது பாடலில், தங்களது கைகளால் இந்த கோயிலைத் தொழும் அடியார்களின் வினைகள் செயலற்றுவிடும் என்று கூறுகின்றார். மேலும் பதிகத்தின் கடைப் பாடலில் இந்த திருக்கோயிலின் பெயரை உரைக்கும் அடியார்களின் வினைகள் ஓய்ந்து விடும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு தொண்டு செய்வதைத் தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு அப்பர் பிறன வாழ்ந்தது போன்று, நாமும் நமது வாழ்வினில், பெருமானுக்கும் பெருமானின் அடியார்களுக்கும் தொண்டு செய்வதை நமது கடமையாக ஏற்றுக்கொண்டு, அந்த கடைமையை நிறைவேற்றி பலன் அடைவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com