59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 1

கடம்பூர் தலம் சென்று இறைவனை

(கடம்பூர் – குறுந்தொகை)

முன்னுரை

கடம்பூர் தலம் சென்று இறைவனை வழிபட்ட அப்பர் பிரானுக்கு, பெருமான் தன்னை பல இடர்களிலிருந்து காப்பாற்றியது நினைவுக்கு வந்தது போலும். அவ்வாறு தன்னைப் பாதுகாத்த இறைவனுக்கு அடிமையாக தனது வாழ்நாளைக் கழிப்பதே தனது கடமை என்ற முடிவுக்கு வந்த அப்பர் பிரான், தனது கடன் இறைவனுக்கு பணி செய்து கிடப்பதே என்று அறிவிக்கின்றார். அந்நாள் வரை தன்னை பாதுகாத்த இறைவன் தன்னை இனிவரும் நாட்களிலும் அவ்வாறே பாதுகாக்க வேண்டியது அவனது கடமை என்றும் கூறும் அப்பர் பிரான், அவ்வாறு சொல்வதன் மூலம் இறைவனுக்குப் பணி செய்யும் எவரையும் இறைவன் அவர்களுக்கு ஏற்படும் பல இடர்களிலிருந்தும் காப்பான் என்ற செய்தியையும் நமக்கு உணர்த்துகின்றார்.

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திரு கரக்கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே

மேற்கண்ட பாடலின் மூலம் கரக்கோயிலானின் கடமை என்ன என்பதை உணர்த்திய அப்பர் பிரானுக்கு, நாம் அனைவரும் கரக்கோயிலில் உள்ள இறைவனைத் தொழுது பயனடைய வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது போலும். அந்த விருப்பத்தின் விளைவாக எழுந்த இந்த பாடலில், அந்த இறைவனை, அந்த கோயிலை, நாம் தொழுவதால் ஏற்படும் பலன்களை நமக்கு அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார்.

பாடல் 1

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்
குருவதாய் குழகன் உறைவிடம்
பரு வரால் குதி கொள்ளும் பழனம் சூழ்
கருவதாம் கடம்பூர்க் கரக்கோயிலே
 

விளக்கம்

குருவதாய் = தென்முகக் கடவுள் வடிவத்தில் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருளை உணர்த்தியது. பருவரால் = உடல் தடித்த பெரிய வரால் மீன்கள். குழகன் = அழகன். பழனம் = வயல்கள் இந்த பாடலில் ஒன்று இரண்டு மூன்று ஆகிய எண்களை பயன்படுத்தி, இறைவனை அபப்ர் பிரான் குறிப்பிடுவது நமக்கு ஞானசம்பந்தரின் திருவெழுகூற்றிருக்கை பதிகத்தை (1.128) நினைவூட்டுகின்றது.

ஓருருவாயினை மான் ஆங்காரத்து
ஈரியல்பாய் ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை

இந்த பாடலில் எல்லாத் தத்துவங்களையும் கடந்து நின்று, வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாத உருவமாக நிற்கும் பெருமான் ஐந்து தொழில்களையும் செய்ய திருவுள்ளம் கொண்டு, ஐந்து வடிவங்களை எடுக்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. மும்மூர்த்திகள் என்று மூன்று உருவங்களும், சக்தி சிவன் என்று இரண்டு உருவங்களும், முழு முதல்வன் என்ற ஒரு மூர்த்தியாக இருக்கும் பெருமான்தான் என்பது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது.

சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக் கடவுள் வடிவத்தில், அவர்களுக்கு வேதங்களை உணர்ந்துகொள்வதில் இருந்த ஐயங்களை போக்கியவர் சிவபெருமான் என்று கூறும் சம்பந்தரின் பாடல் (1.48.1) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சேல் = மகன். முருகப்பெருமான் சூரபத்மனுடன் போருக்குச் செல்லும் வழியில், பாடிவீடு அமைத்து சேய்ஞலூர் தங்கியதாக கந்தபுராணம் கூறுகின்றது. அந்த செய்தியை சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களைப் படித்தும், சிவபெருமானின் திருவடிகளைச் சென்று அடைவதற்கான வழியை தாங்கள் உணரமுடியவில்லை என்பதால் தங்களுக்கு இருந்த அறியாமையை போக்குமாறு சனகாதி முனிவர்கள் சிவபெருமானை வேண்டியதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல் மேவி அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேவனே

பொழிப்புரை

சக்தியும் சிவமும் இணைந்த ஒரே உருவமாக இருப்பவனும், சிவமாகவும் சக்தியாகவும் வேறு வேறு உருவமாக இருப்பவனும், மும்மூர்த்திகளாக இருப்பவனும், தென்முகக் கடவுள் வடிவம் கொண்டு குருவாக மௌன மொழியால் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசம் செய்தவனும், வேதங்களின் உட்பொருளை உணர்த்தியவனும் ஆகிய அழகன் உறையும் இடம் கடம்பூர் கரக் கோயிலாகும். உடல் பருத்த பெரிய வரால் மீன்கள் துள்ளி விளையாடும் நிலங்கள் நிறைந்த கடம்பூர் தலத்தில் அமைந்துள்ள கரக்கோயிலில், அனைத்துப் பொருட்களுக்கும் மூலமாகிய பெருமான் உறைகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com