70. நம்பனை நால்வேதம் - பாடல் 3

வித்து முளை வேர்
70. நம்பனை நால்வேதம் - பாடல் 3

பாடல் 3:
    

பத்தர்கள் சித்தத்தே பாவித்தானைப்
               பவளக் கொழுந்தினை மாணிக்கத்தின் 
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
               சொல்லுவார் சொற்பொருளின் தோற்றமாகி
வித்தினை முளைக் கிளையை வேரைச் சீரை
               வினை வயத்தின் தன் சார்பை வெய்யத் தீர்க்கும்
அத்தனை ஆவடு தண்துறையுள் மேய அரன்
               அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:

விதையிலிருந்து முதலில் தோன்றுவது முளை. முளைத்த பின்னர் தோன்றுவது வேர். எனவே வித்து முளை வேர் என்று வரிசைப்படுத்தும் பாங்கினை நாம் இந்த பாடலில் உணரலாம். 

பொழிப்புரை:

அடியார்களின் உள்ளத்தை தான் உறையும் இடமாக பாவித்து அங்கே உறைபவனும், பவளக் கொழுந்தாகவும் மாணிக்கக் குவியலாகவும் மிகவும் அரிதாகத் திகழ்பவனும், தூய்மையான நல்ல நெறியாக நிற்பவனும். தன்னை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னை புகழ்ந்து சொல்லும் அடியார்களின் சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அவர்களின் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களுக்கு விதை போன்று மூலமாகவும், விதையிலிருந்து கிளைத்தெழு முளையாகவும். முளை வேரூன்றி வளர்வதற்கு உதவும் வேராகவும் இருந்து பொருட்களை பாதுகாத்து வளரச் செய்பவனும், பொருட்களின் பயனாக இருப்பவனும், ஊழ்வினையின் தொடர்பால்
வரும் கொடுமையான துன்பங்களைத் தீர்க்கும் தலைவனாகத் திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com