70. நம்பனை நால்வேதம் - பாடல் 4

அளவில்லாத பக்தி
70. நம்பனை நால்வேதம் - பாடல் 4

பாடல் 4:
    

பேணிய நற்பிறை தவழ் செஞ்சடையினானைப்
               பித்தாராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டு இங்கு
              இளைக்கின்றேர்க்கு அக்கரைக்கே ஏற வாங்கும் 
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச் சுலா
              வெண்குழையானைச் சுடர்     பொற்காசின்
ஆணியை ஆவடு தண்துறையுள் மேய அரன்
              அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:

பேணுதல் = காப்பாற்றுதல். முற்றிலும் அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் அடைக்கலம் புகுந்த சந்திரனை காப்பாற்றிய செயல் இங்கே உணர்த்தப்படுகின்றது. ஏணி = தான் இருந்த நிலையில் மாறாமல், தன்னை வணங்கும் அடியார்கள் துன்பக்கடலில் மூழ்காமல் மேலே ஏற உதவும் தன்மை. தோணியும் தான் எப்போதும் நீரினில் இருந்தாலும், தன்னில் ஏறுபவர் நீரினில் மூழ்காமல் அடுத்த கரை செல்வதற்கு உதவும். அக்கரை = துன்பங்கள் ஏதும் கலவாது, நிலையான பேரின்ப நிலையை உடைய முக்தி நிலை; ஆணி = தங்கத்தின் தரத்தினை அறிவதற்காக ஒப்பிடுவதற்காக கொல்லர்கள் வைத்திருக்கும் உயர்ந்த ரகத்து தங்கத் துண்டு; சுலாவுதல் = அசைதல்; சுலா வெண் குழை = வெண்மை நிறம் கொண்டு அசையும் குழை ஆபரணம்.  பித்தராம் அடியார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவன் மீது கொண்டுள்ள அளவற்ற பக்தியின் காரணமாக, தாம் செய்வது இன்னதென்று அறியாமல், பிறர்
தம்மை பித்தர் என்று ஏளனம் செய்யும் வகையில், பெருமானின் திருநாமங்களைச் சொல்லியவாறு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கும் நிலையினில் உள்ள அடியார்களை பித்தராம் அடியார் என்று கூறுகின்றார். வேறு எந்தப் பொருளையும் விரும்பாமல் ஒரே பொருளை விரும்பும் தன்மை, பித்தினை ஒத்து இருப்பதால், வேறு எந்த தெய்வத்தையும் விரும்பாமல் சிவபிரானை விரும்புவர்களை பித்தர் என்று அப்பர் பிரான் கீழ்க்கண்ட பாடலில் அழைக்கிறார். அவ்வாறு வழிபடும் அடியவர்களை தானும் அதுபோல சிவபிரான் விரும்புவதால், சிவபிரானை பித்தற்குப் பித்தர் என்று அப்பர் (6.11.2) பிரான் அழைப்பதை இந்த பாடலில் காணலாம். பித்தற்குப் பித்தன் = தன்னிடம் பித்து கொண்டது போன்று பக்தி கொண்ட அடியார்களுக்கு அளவின்றி கருணை புரிந்து பித்தனைப்போல் நடந்துகொள்பவன்.
    

பின்றானும் முன்றானும் ஆனான் தன்னைப்
          பித்தற்குப் பித்தனாய் நின்றான் தன்னை
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானேயாகி
          நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னைச்    
சென்று ஓங்கி விண்ணளவும் தீயானானைத்
         திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நின்றாய நீடூர் நிலாவினானை நீதனேன்
         என்னே நான் நினையாவாறே

பித்தற்குப் பித்தன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது நமக்கு, ஞான சம்பந்தரின் துருத்தி பதிகத்தின் ஒரு பாடலை (2.98.10) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் பெருமானை பித்தர் பித்தன் என்று சம்பந்தர் கூறுகின்றார். தம் பால் அளவின்றி பற்று கொண்டுள்ள அடியார்களின் மீது இறைவனும் அதே போன்று அளவின்று பற்று கொண்டவனாக உள்ள நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.
    

    புத்தர் தத்துவம் இலாச் சமண் உரைத்த பொய் தனை
    உத்தமம் எனக் கொளாது உகந்து எழுந்து வண்டினம்
    துத்த நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்
    பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பு அறுத்தல் பெற்றியே

சுந்தரர் முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (7.43.11) பித்தனை ஒத்த தான் பிதற்றிய பாடல்கள் என்று கூறுவதை நாம் காணலாம்.
பெருமானிடத்தில் தான் கொண்டிருந்த மிகுதியான அன்பினால் பித்தர் போன்று தான் பிதற்றுவதாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களைப் பாடும் ஞானிகள், தடுமாற்றம் ஏதும் இல்லாது பெருமானைத் தொழும் அடியார்கள், அனைத்து வகையான தவத்தில் ஈடுபடுவோர் ஆகிய அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் அடைவார்கள் என்று கூறுகின்றார்.
    

    முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப்
    பித்தன் ஒப்பான் அடித் தொண்டன் ஊரன் பிதற்றிவை
    தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார்
    எத்தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே 

தன்னை மற்றவர்கள் பித்தன் என்று அழைக்கும்படி மாற்றியவன் சிவபெருமான் என்று திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர் கூறுகின்றார் இறைவனிடம் நாம் கொண்டுள்ள அன்பு வளர்வதற்குத் தடையாக இருக்கும் உலகப் பொருட்களின் மீது உள்ள பாசத்தைக் களைந்து, தனது திருவடிகளுடன் எனது மனம் பிரியாது இருக்குமாறு கட்டுவித்த இறைவன் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார். தான் அடைந்துள்ள பேறு எத்தகையது என்பதை புரிந்து கொள்ளாத உலகத்தவர் தன்னைப் பித்தன் என்று கூறுவதாக மணிவாசகர் குறிப்பிடுகின்றார். 
    

    பத்திமையும் பரிசும் இலாப் பசுபாசம் அறுத்தருளிப்
    பித்தன் இவன் என என்னை ஆக்குவித்துப் பேராமே
    சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
    வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே

ஆதிரை திருவிருத்தப் பதிகத்தின் ஒரு பாடலிலும், பெருமான் மீது கொண்டுள்ள அளவில்லாத பக்தி எவ்வாறு அடியார்களை பக்தர்களாக மாற்றுகின்றது என்பதை அப்பர் பிரான் கூறும் பாடலை (4.21.4) நாம் இங்கே காண்போம். நாள்தோறும் காலையில் தேவர்கள் வணங்கும்படி, தெய்வத்தன்மை பெற்று சிறப்பு வாய்ந்த சிவபிரானின் மார்கழி மாதத்து ஆதிரைத் திருவிழாவில், பங்கேற்கும் அடியார்கள் சிவபிரானது உயர்ந்த குணங்களையும் அருட்செயல்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டும், மற்றவர்களுடன் கூடி இறைவனது புகழினைப் பாடிக்கொண்டும், சென்றனர். அவ்வாறு பேசிக்கொண்டு செல்கையில், சிவபிரானின் பேரில் தங்களுக்கு இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, தாங்கள் சிவபிரானைப் பற்றி சொல்லும் கருத்தே சரியென்று, மற்றவர்களுடைய கருத்துடன் உடன்படாமல், மறுபடியும் மறுபடியும் தங்களது கருத்தையே வலியுறுத்தி பித்தர் போல் பிதற்றுகின்றார்கள். இவ்வாறு அடியார்களின் அன்பு வெளிப்படும் ஆதிரைத் திருநாளின் நினைவுகள், அதனைக் காணும் அடியார்களின் மனதினில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.
    

    குணங்கள் பேசி கூடிப் பாடித் தொண்டர்கள்
    பிணங்கித் தம்மில் பித்தரைப் போல் பிதற்றுவார்
    வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
    அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் 

பொழிப்புரை:

ஏறக்குறைய முற்றிலும் அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னைச் சரணடைந்த சந்திரனை, அழியாமல் காப்பாற்றும் வண்ணம் தனது செஞ்சடையில் அணிந்தவனும், தன்னிடம் கொண்டுள்ள அளவில்லாத அன்பின் வயப்பட்டு பித்தர்கள் போன்று மற்றவர்களுக்குத் தோன்றும் அடியார்களுக்கு வீடுபேற்று நிலையை காட்டி, ஏணியாக இருந்து அந்த உயர்ந்த நிலையை அடைய உதவுபவனும், வாழ்க்கைத் துன்பங்கள் எனப்படும் கடலின் சுழிகளின் இடையே அகப்பட்டு வருந்திய அடியேனை, துன்பங்கள் ஏதும் இல்லாத அடுத்த கரையினை (நிலையான பேரானந்த நிலைக்கு) அழைத்துச் செல்லும் படகு போன்றவனும், தூய்மையான சோதியாக இருப்பவனும், அசைந்து ஆடும் தன்மை கொண்ட வெள்ளி குழை ஆபரணத்தை அணிந்தவனும், சுடர் விட்டு ஒளிவீசும் பொற்காசுகளின் மாற்றினை அளக்க பயன்படுத்தும், மாற்று குறையாத பொன் போன்று குற்றங்கள் ஏதும் இல்லாமல் விளங்குபவனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com