70. நம்பனை நால்வேதம் - பாடல் 5

ஒளியுடன் மிளிரும் மணி
70. நம்பனை நால்வேதம் - பாடல் 5

பாடல் 5:
    

ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி தன்னை
          உதயத்தின் உச்சியை உருமானானைப்
பருமணியைப் பாலோடு அஞ்சு ஆடினானைப்
         பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றை
திருமணியைத் தித்திப்பைப் தேனதாகித் தீங்கரும்பின்
         இன் சுவையைத் திகழும் சோதி
அருமணியை ஆவடு தண்துறையுள் மேய அரன்
         அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:

ஒரு மணி = ஒப்பற்ற மணி; உதயத்தின் உச்சி = தோன்றும் ஒளிப்போருட்களுக்கு எல்லாம் முன்னமே தோன்றிய ஒளி; உருமு = இடி; பருமணி = பெரிய மணி; பவித்திரன் = தூயவன்; அருமணி = கிடைத்தற்கு அரிய மணி; திருமணி = எந்த திருத்தமும் செய்ய வேண்டிய நிலையில் இல்லாது இயல்பாகவே ஒளியுடன் மிளிரும் மணி; உலகுக்கோர் உறுதி என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். திண்மை என்பது நிலத்தின் தனிப் பண்பு. உறுதியாக இருக்கும் தன்மையாக நிலத்துடன் கலந்து இருப்பது சிவபெருமான் என்று உணர்த்தும் வண்ணம், உலகுக்கோர் உறுதி என்று இங்கே கூறுகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருவாசகம் திருவண்டப் பகுதியின் கீழ்க்கண்ட அடிகளை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. அருக்கன் = சூரியன்; கலப்பு = பறந்து வியாபிக்கும் தன்மை; ஊக்கம் = அசைவு. 
    

    அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு 
    மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
    தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
    வானில் கலப்பு வைத்தோன் மேதகு
    காலின் ஊக்கம் கண்டோன் நிகழ்திகழ்
    நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
    மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று


பொழிப்புரை:

ஒப்பற்ற மாணிக்கமாகவும், நிலம் எனப்படும் உலகத்திற்கு உறுதியான நிலையாக உள்ளவனும். ஒளி பொருந்திய பொருட்கள் அனைத்திற்கும் முன்னமே தோன்றியவனும், இடியாக இடித்து உலகிற்கு மழை பொழியச் செய்பவனும், பெரிய மணி போன்று ஒளி வீசுபவனும், பசுவிடமிருந்து கிடைக்கும் பால் முதலான ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுபவனும், தூய்மையானவனும், உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருப்பவனும், பவளக் குன்று அனைய சிவந்த திருமேனியை உடையவனும், திருத்தம் தேவைப்படாத மணி போன்று இயல்பாகவே பிரகாசம் மிகுந்து மிளிர்பவனும், தேனில் காணப்படும் இனிப்பு மற்றும் கரும்பின் சுவை போன்று அடியார்களுக்கு இனிமையாக இருப்பவனும், சோதி வடிவாக உள்ளவனும், கிடைத்தற்கு அரிய மணியாகவும் திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com