70. நம்பனை நால்வேதம் - பாடல் 7

என்புருக நைந்தார்
70. நம்பனை நால்வேதம் - பாடல் 7

கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்
              கடல் வரை ஆகாசம் ஆனான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்
             திங்களை ஞாயிற்றைத் தீ ஆனானை
எம்மானை என் மனமே கோயிலாக இருந்தானை
             என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை ஆவடு தண்துறையுள் மேய அரன்
             அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:
வரை = மலை; பெருமானைப் பற்றிய சிந்தையினால் மனம் உருகுவது தலை சிறந்த அடியார்களின் தன்மையாகும். கானப்பேர் (இன்றைய வழக்கில் காளையார் கோயில் என்று அழைக்கப்படும் தலம்) இறைவன் சுந்தரருக்கு கனவின் கண் காட்சி அளித்தபோது, சுந்தரர் என்புருக நைந்தார் என்று சேக்கிழார் கூருகின்றார். திருச்சுழியல் தலத்தில் இறைவனை தரிசித்த பின்னர் அந்த தலத்தில் சுந்தரர் இரவில் தங்கியபோது கானப்பேர் இறைவன், தான் உறையும் இடத்திற்கு சுந்தரர் வர வேண்டும் என்ற விருப்பத்துடன் காளையார் எனப்படும் தனது கோலத்தை காட்டுகின்றார். தனது கையினில் பொன் செண்டும், தலையில் தலைப்பாகை போன்ற அமைப்பையும் கொண்டவராக இறைவன் காட்சி அளிக்க, அவரது திருக்கோலத்தைப் பார்த்த சுந்தரரின் மனமும் எலும்பும் உருகியது என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார்.
    
அங்கணரைப் பணிந்து உறையும் ஆரூரர்க்கு அவ்வூரில்
கங்குலிடைக் கனவின் கண் காளையாம் திருவடிவால்
செங்கையினில் பொற்செண்டும் திருமுடியில் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம் என்புருக முன் காட்டி 


பூந்துருத்தி தலத்தில் அப்பர் பிரானை சந்தித்த ஞானசம்பந்தர், உடன் வந்த அன்பர்களுடன் திருக்கோயில் வலம் வந்தபோது என்புருக வலம் கொண்டு இறைவனைப் பணிந்து ஏத்தினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
    
அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆனேற்றார் மகிழ் கோயில்
முன்பு அணித்தாகச் சென்று கோபுரத்தை முன் இறைஞ்சித்
துன்பமிலாத் திருதொண்டருடன் தொழுது புக்கருளி
என்புருக வலம் கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார்


திருவேசறவு பதிகத்தின் முதல் பாடலில், மணிவாசகர், கரும்பு போன்று வலிய மனம் படைத்த தன்பால் ஈர்த்த பெருமான் என்று குறிப்பிட்டு, தனது எலும்பினையும் இறைவன் உருகியதாக கூறுகின்றார். ஆரவாரம் செய்யும் அலைகளுடன் வெள்ளமாக பாய்ந்து வந்த கங்கை நதி பெருமானின் சடையில் அடைக்கப்பட்ட நிலையை, அடங்கிய அலைகளுடன் சடையில் உலவிய கங்கை என்று கூறுகின்றார். 
    
இரும்பு தரு மனத்தேனை ஈர்த்தீர்த்து என் என்பு உருக்கிக்
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம்
பெரும் குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே 


திருப்பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் நாட்களைக் கழித்துக் கொண்டும், திருக்கோயில் பணிகளை மேற்கொண்டும் இருந்த மணிவாசகர், மதுரைக்கு திரும்ப நேரிடுகின்றது. திருப்பெருந்துறையில் அவர்க்கு கிடைத்த அனுபவம் மதுரையில் கிடைக்கவில்லை. எனவே வருத்தத்தில் ஈடுபடும் அவர், பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்சிகளை அசை போட்டவாறு, இறைவன் மீது அன்பு கொண்டு ஆடாமலும், என்பு உருகி படாமலும், இறைவனைக் காணமல் பொழுதினை வீணாக போக்குகின்றோமே என்று பதைபதைப்பு அடையாமலும், அவனது திருவடிகளை பணியாமலும், அவனது திருவடிகளில் மலர்களைச் சூட்டி வணங்காமலும், திருவடியில் இருக்கும் மலர்களை எடுத்து தனது மேனியில் சூட்டிக் கொள்ளாமலும், இவ்வாறு செய்ய வேண்டிய செயல்கள் எதனையும் செய்யாமல் பிணம் போன்று இருக்கும் நெஞ்சமே என்று மனதினை நொந்து கொள்ளும் பாடல் இது. இந்த பாடலில் என்புருக இறைவனை குறித்த பாடல்கள் பாடாமல் இருந்த நிலையை குறிப்பிடுகின்றார். 
    
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இல்லை என்பு உருகிப்
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இல்லை துணை இலி பிணை நெஞ்சே 
தேடுகின்றிலை தெருவு தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே 


கைம்மான களிறு = துதிக்கையை உடைய யானை. 

பொழிப்புரை:

வலிமை நிறைந்த துதிக்கையை உடையதாக மதம் பொழிய எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்தவனும், கடல் ஆகாயம் மலையாக எங்கும் பரந்து நிற்பவனும், செம்மை நிறம் உடைய பவளம் போன்று திகழ்பவனும், முத்து போன்று அரிதானவனும், சந்திரன் ஞாயிறு மற்றும் தீ ஆகிய பொருட்களில் கலந்து அவற்றை இயங்கச் செய்பவனும், எனது தலைவனும், எனது மனதினை கோயிலாகக் கொண்டு அதனில் உறைபவனும், தங்களது எலும்புகள் உருகுமாறு இறைவனிடம் அன்பு வைத்து அவனை வழிபடும் அடியார்களின் தலைவனாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com