70. நம்பனை நால்வேதம் - பாடல் 11

இறைவனை அடைந்த
70. நம்பனை நால்வேதம் - பாடல் 11


தரித்தானைத் தண்கடல் நஞ்சு உண்டான் தன்னைத்
          தக்கன் தன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்
பிரித்தானைப் பிறை தவழ் செஞ்சடையினானைப்
         பெருவலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத்தானை
         நீசனேன் உடலுறு நோயான தீர
அரித்தானை ஆவடு தண்துறையுள் மேய அரன்
         அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

விளக்கம்:
பதிகத்தின் முந்தைய பாடல்கள் அனைத்திலும், ஆவடு தண் துறை இறைவனை அடைந்து உய்ந்ததாக கூறிய அப்பர் பிரான், முதன் முதலாக தான் திருவதிகையில் இறைவனை அடைந்த சூழ்நிலையினை நினைவு கூர்ந்தார் போலும். தனது சூலை நோயினைத் தீர்த்து தன்னை ஆட்கொண்ட நிகழ்ச்சியை குறிப்பிடும் வண்ணம் நீசனேன் உடலுறு நோயான தீர அரித்தானை என்று குறிப்பிட்டு பதிகத்தினை முடிக்கின்றார். இவ்வாறு அவர் கூறுவது, தான் ஆவடுதுறையில் வீற்றிருக்கும் இறைவனை அதிகையில் வழிபட்ட அன்றே வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று உணர்த்தும் வண்ணமோ என்றும் நமக்குத் தோன்றுகின்றது. .

திருமங்கலக்குடி குறுந்தொகைப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (5.73.9) பெருமான் தன்னை சமணர்களிடமிருந்து வேறுபடுத்திய அன்றே தான் உய்வினை அடைந்தேன் என்று பொருள் படுமாறு பாடிய பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுமை செய்தலையே தங்கள் தொழிலாகக் கொண்ட சமணர்களுடன் கலந்திருந்த தன்னை, அவர்களிடமிருந்து பிரித்தது ஈசனின் பெருங்கருணை என்று மனம் நெகிழ்ந்த அப்பர் பிரான், அவர்களை விட்டுத் தான் பிரிந்த அன்றே உய்ந்ததாக கூறுகின்றார்.
    
    கூசுவார் அலர் குண்டர் குணமிலர்
    நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
    மாசர் பால் மங்கலக்குடி மேவிய
    ஈசன் வேறுபடுக்க உய்ந்த்தேன் அன்றே
 


இதே செய்தியைத் தான், சேக்கிழார் பெரிய புராணத்தில் சிவனருள் கூடியதால், தருமசேனர் (சமணர்களுடன் வாழ்ந்த போது தருமசேனர் என்று அப்பர் பிரான் அழைக்கப்பட்டார்) அவர்களை விட்டு பிரிந்தார் என்று கூறுகின்றார். அந்த பெரிய புராண பாடலை நாம் இங்கே காணலாம். அயர்வு = தளர்ச்சி; செவ்வாறு = செம்மையான வழி, சிறந்த சைவ நன்னெறி. 
    
அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனியான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப்புன்சமயத்து ஒழியா இத்துயர் ஒழிய
செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என

மந்திரங்கள், தந்திரங்கள் என பலவாறு சமணர்கள் முயற்சி செய்தும் தீராத சூலை நோயினால் மிகவும் தளர்ச்சி அடைந்திருந்த தருமசேனர், தனது தமக்கை தனக்கு நல்ல தீர்வு காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். எனவே தமது தமக்கையாரிடம் தான் அனுப்பிய தூதுவன் நல்ல சேதி கொண்டு வருவான் என்று காத்திருந்த அவர், தனது தமக்கை, நன்றி அறியாச் சமணர்கள் இருக்கும் இடத்திற்கு தான் வரமாட்டேன் என்று மறுத்தது பேரிடியாக இருந்தாது. தனது தமக்கை சொல்லி அனுப்பிய மறுமொழியைத் தனது வேலையாள் மூலம் அறிந்த அவரது மனம் உடைந்தது; அவரது தளர்ச்சி மிகவும் அதிகமாகியது. ஏற்கனவே சூலை நோயினால் மிகவும் வாடியிருந்த அவர் தமக்கையின் மறுமொழியை கேட்டறிந்த பின்னர் மேலும் தளர்ந்திருக்க வேண்டும், இந்த நோயிலிருந்து மீள்வோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன, அதற்கு என்ன காரணம் என்பதை சேக்கிழார் வாய்மொழியால் உணருகின்றோம். ஈசரின் அருள் கூடியது.

ஈசர் அருள் கூடியதால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன என்பதை நாம் இங்கே பார்க்கலாம். தமக்கையார் உதவி செய்ய மறுத்த நிலையில், அந்நாள் வரை தான் பெற்று வந்த மருத்துவ உதவியை தொடர்ந்து பெற்றிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, சமணர்களின் உதவியால் தனது நோய் தீராது என்ற எண்ணம் அவரது மனதினில் தோன்றுகின்றது (ஒவ்வா இப்புன்சமயத்து இத்துயர் ஒழியா), அவரது மனதினில் சமணர்களை விட்டு அகன்று தனது தமக்கை இருக்குமிடம் சென்று சேர வேண்டும் என்ற துணிவு பிறக்கின்றது; இந்த துணிவின் காரணமாக, நோயினால் மிகவும் நலிவுற்று இருந்த அவரது உடல் எழுகின்றது; இரவோடு இரவாக கடலூரிலிருந்து திருவதிகை நடந்து செல்ல முடிகின்றது; இவை அனைத்தும் ஈசரின் அருள் கூடியதன் விளைவாக எழுந்த செயல்கள் தானே. இதனால் அவருக்கு, தாம் எவ்வாறேனும் இந்த சூலை நோயிலிருந்து மீள்வோம், தான் உய்வினை அடைவோம் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. இந்த நம்பிக்கை பிறந்ததைத் தான், சமணர்களிடமிருந்து இறைவனின் அருளால் தான் வேறுபடுத்தப் பட்ட அன்றே தான் உய்வினை அடைந்தேன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். 

சேக்கிழார் பெருமான் திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில், சூலை நோய் தீர்க்கப்பட்ட பின்னர், அப்பர் பிரான் தான் சமணர்களிடம் இருந்து பிரிந்து வந்ததற்கு காரணமான சூலை நோய்க்கு கைம்மாறு என்ன செய்வேன் என்று வருந்தியதாக கூறுகிறார். .
    

பொய் வாய்மை பெருக்கிய புன்சமயப்
          பொறியில் சமண் நீசர் புறத்துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழும் ஆறு
          அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறுங்குழல் மாமலையாள்
          மணவாளன் மலர்க் கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தகு சூலையினுக்கு
          எதிர் செய்குறை என் கொல் எனத் தொழுவார். 

பொழிப்புரை:

குளிர்ந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினைத் தான் உண்டதை உணர்த்தும் விதமாக, கரிய நிறத்தினைத் தனது கழுத்தினில் தரித்தவனும், எவரும் அந்நாள் வரை கண்டிராத வகையில் பிரம்மாண்டமாக தக்கனால் செய்யப்பட்ட வேள்வியை அழித்து அவனது ஆணவத்தைத் தகர்த்தவனும், தனது சடையில் பிறைச் சந்திரனைச் சூடியவனும், தனது வலிமையை பெரிதாக எண்ணி ஆணவத்துடன் கயிலாய மலையை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் மலையின் கீழே அழுந்துமாறு நெரித்தவனும், அழகான அணிகலன்களை அணிந்த பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், சமணர்களுடன் கலந்து கீழ்மகனாகத் திகழ்ந்த எனது உடலைப் பற்றிக் கொண்ட சூலை நோயினைத் தீர்த்து எனக்கு அருள் செய்தவனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

முடிவுரை:
 

தான், திருவதிகைத் தலத்தில் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு உய்வினை அடைந்ததை நினவு கூர்ந்த அப்பர் பிரான் அந்த நினைவுகள் ஏற்படுத்திய மகிழ்ச்சிப் பெருக்கினால், பதிகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கையை மறந்து மேலும் ஒரு பாடல் அளித்து பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக அப்பர் பிரான் அருளியுள்ளார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தான் உய்ந்ததை நமக்கு எடுத்துச் சொல்லி நாமும் அவரை பின்பற்றி இறைவனைப் பணிந்து வாழ்வினில் உய்வினை அடியுமாறு ஊக்குவிக்கும் பதிகம் இது. 

பதிகத்தின் முதல் பாடலை, நாம் விரும்பத் தக்கவன் என்றும் நம்பத் தக்கவன் என்றும் பொருள் பட இறைவனை நம்பன் என்று அழைக்கும் அப்பர் பிரான் அதே பாடலில், கற்பகமா அடியார்க்கு வேண்டுவன கொடுப்பான் இறைவனின் வள்ளல் தன்மையை உணர்த்துகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில், மழையாக பொழிந்து உலகத்தவர்க்கு அருளும் பெருமான், தாயாகவும் தந்தையாகவும் அனைவரையும் காப்பாற்றுகின்றார் என்று உணர்த்துகின்றார். இந்த இரண்டு பாடல்களில் உணர்த்தப்பட்ட வள்ளல் தன்மையை புரிந்துகொண்டு, அவனிடம் அன்பு செலுத்தும் அடியார்களின் மனதினில் இருந்து அவர்களை நல்வழிப் படுத்தும் செயலை பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். தனது அடியார்களை இவ்வாறு நல்வழிப் படுத்தும் இறைவன், எவ்வாறு ஏணியாகவும் தோணியாகவும் செயல்பட்டு நம்மை முக்தி நிலைக்கும் என்றும் அழியாத பேரின்ப நிலைக்கும் அழைத்துச் செல்கின்றான் என்பதை பதிகத்தின் நான்காவது பாடலில் உணர்த்தும் அப்பர் பிரான், ஐந்தாவது பாடலில் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ள நிலையை எடுத்துரைக்கின்றார். முதல் ஐந்து பாடல்களில் கருணை வள்ளலாக இருக்கும் பெருமானின் ஆற்றல்கள் அடுத்து வரும் ஐந்து பாடல்களில் விளக்கப் படுகின்றன.

ஊழிக் காலத்தையும் தாண்டி என்றும் அழியாத நிலையானவன் என்று ஆறாவது பாடலிலும், கடலாகவும் ஆகாயமாகவும் மலையாகவும் எங்கும் பரந்து, வியாபித்து நிற்கும் நிலை ஏழாவது பாடலிலும். மெய்ப்பொருளாகத் திகழும் தன்மை எட்டாவது பாடலிலும், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக உள்ள தன்மை ஒன்பதாவது பாடலிலும், அனைவரையும் விரட்டி அடித்த நஞ்சினை உண்ட பின்னரும் உடலுக்கு ஏதும் கேடு அடையாத நிலையினை பத்தாவது பாடலிலும் உணர்த்திய அப்பர் பிரான், பதினோராவது பாடலில் இராவணனுக்கு அருள் புரிந்ததை நினைவூட்டி, நாமும் இறைவனின் புகழைப் பாடலாக பாடி, நாம் இந்நாள் வரை செய்த பாவங்களும் தவறுகளும் மன்னிக்கப்பட்டு அவனது அருளைப் பெற்று உய்யலாம் என்பதை உணர்த்துகின்றார். அப்பர் பிரான் காட்டிய வழியில் சென்று நாமும் இறைவனைப் புகழ்ந்து பாடி அவனது அருளினைப் பெறுவோமாக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com