71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 1

சாம்பலை பூசி
71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 1

முன்னுரை:

திருவாவடுதுறை தலத்து இறைவனை வழிபாட்டு பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான் அதன் பின்னர் இடைமருது தலத்திற்கு வருகின்றார். இடைமருது தலத்தில் பல நாட்கள் தங்கி உழவாரப் பணிகள் செய்த அப்பர் பிரான், தலத்து இறைவன் மீது அருளிய நேரிசைப் பதிகம் தான் இந்த பதிகம். ஒவ்வொரு பாடலிலும் இறைவனாரின் பெருமையை உணர்த்தி, அத்தகைய பெருமைகளை உடைய இறைவன், இடைமருது தலத்தினை இடமாகக் கொண்டான் என்று கூறும் முகமாக, இடைமருது இடம் கொண்டாரே என்று ஒவ்வொரு பாடலையும் அப்பர் பிரான் முடிக்கின்றார்.  

பாடல் 1: 
    
    காடுடைச் சுடலை நீற்றர் கையில் வெண்டலையர் தையல்
    பாடுடைப் பூதம் சூழப் பரமனார் மருத வைப்பில்
    தோடுடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
    ஏடுடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே 

 
விளக்கம்:
காடுடைய சுடலை நீற்றர் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருஞானசம்பந்தரின் முதல் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. காடுடைய சுடலைப் பொடி பூசிய பெருமான் தனது உள்ளம் கவர்ந்த கள்வர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் (1.1.1) கூறுகின்றார் 
    
    தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூ வெண்மதி சூடி
    காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 

மேற்கண்ட பாடலில் திருஞான சம்பந்தர், பெருமான் புரியும் ஐந்து தொழில்களை குறிப்பிடுகின்றார். தருமதேவதை எப்போதும் சிவபிரானுடன் இணைந்து இருக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு பெருமானிடம் வேண்ட, பெருமானும் அதற்கு இணங்கி தருமதேவதையை இடபமாக மாற்றிய தன்மை படைத்தல் தொழிலையும் (விடையேறி), முற்றிலும் தேய்ந்து வந்து அணுகிய சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த செயல் காக்கும் தொழிலையும் (தூ வெண்மதி சூடி), முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்கிய பின்னர் உலகப் பொருட்களும் உடலும் அழிந்து எரிந்த சாம்பலை பூசிக் கொண்ட செயல் அழிக்கும் தொழிலையும் (காடுடைய சுடலைப் பொடி பூசி), அடுத்தவர் பொருளினைக் கவரும் தொழிலைச் செய்யும் திருடன் தான் திருடிய பொருளை மறைப்பது போன்று ஞான சம்பந்தரின் உள்ளத்தைக் கவர்ந்து மறைத்தது மறைத்தல் தொழிலையும் (உள்ளம் கவர் கள்வன்), பிரமனுக்கு அருள் செய்த செயல் அருளும் தொழிலையும் (அருள் செய்த) குறிப்பதாக விளக்கம் அளிப்பார்கள். 

இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்று உள்ள தாமரை மலரை ஏடுடைய மலர் என்று ஞான சம்பந்தர் மேற்கண்ட பாடலில் குறிப்பிட்டது போன்று, ஏடுடைக் கமலம் என்று அப்பர் பிரானும் இந்த பதிகத்தின் பாடலில் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பாடு=பக்கம், அருகில்; பாடுடைத் தையல்=உடலின் ஒரு பாகத்தில் அமர்ந்துள்ள பார்வதி தேவி; கிடங்கு=அகழி; கைதை=தாழை மலர் தோடு=மடல்கள்: இந்த பாடலில் தலத்தில் அகழி இருந்ததாகவும், அகழியில் தாமரைக் கொடிகள் இருந்ததாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார். தாமரைக் கொடியின் தண்டுகள் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டிருக்கும் நிலையில், கொடிகளில் சிக்கிக் கொள்ளாமல் நீந்திச் செல்வது மிகவும் கடினமான செயல் என்பதால், அகழியில் இருந்த தாமரைக் கொடிகள் வேலியாக அமைந்த நகரம் இடைமருது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பரமன்=அனைவர்க்கும் மேலானவர்; 
  
பொழிப்புரை:
சுடுகாட்டில் உள்ள பிணங்களின் சாம்பலை பூசியவராக, தனது கையில் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரமனின் கபாலத்தை ஏந்தியவராக, தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை ஏற்றவராக, பூதங்கள் சூழ இருக்கும் பெருமான், அனைவர்க்கும் உயர்ந்தவர் ஆவார். மடல்களை உடைய தாழை மலர்கள் நிறைந்ததும்  அகழிகளில் குதித்து கரையேற முயலும் பகைவர்களைத் தடுக்கும் வல்லமை கொண்ட கொடிகள் கொண்ட, இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்காக அமைந்த தாமரை மலர்கள் நிறைந்த அகழியினை அரணாகக் கொண்டதும் ஆகிய இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் சிவபெருமான் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com