71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 2

நான்கு நெறிகளிலும்
71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 2

பாடல் - 2
    முந்தையார் முந்தியுள்ளார் மூவர்க்கு முதல்வர் ஆனார்
    சந்தியார் சந்தியுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
    சிந்தையார் சிந்தையுள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார்
    எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம் கொண்டாரே

விளக்கம்:

முந்தையார்=முன்னே தொன்றியவர்கள், பிரமன் மற்றும் திருமால் ஆகியோர்; முன்னே தோன்றியவர்களுக்கும் முன்னோனாக இருக்கும் தன்மை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுவது, நமக்கு மணிவாசகரின் திருவெம்பாவை பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் என்று இறைவனை மணிவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகத்தில் தோன்றும் எந்த பொருளுக்கும் அழிவு என்பது நிச்சயம். எனவே இன்றோ அல்லது நாளையோ அல்லது அதற்கு பின்னரோ தோன்றும் எந்த பொருளும், அவை தோன்றும் சமயத்தில் புதியது என்ற உணர்வினை நம்மிடம் ஏற்படுத்தும். எனினும் அத்தகைய பொருட்கள் அழிந்த பின்னரும், இருப்பவன் இறைவன் என்பதால், இறைவனே என்றும் புதியவனாக, இனிமேல் தோன்ற இருக்கும் பொருட்களுக்கும் புதியவனாக இருக்கின்றான் என்று மணிவாசகர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.     
    
முன்னை பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாக பெற்ற உன் சீர் அடியோம்    
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் 

பாங்கு=அருகில், துணையாக; திருவெம்பாவை பதிகத்தில் முதல் எட்டு பாடல்களில், ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு நீராடச் செல்லும் தோழிகள், அனைவரும் சேர்ந்து பாடும் ஒன்பதாவது பாடலாக மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது. பெருமானது அடியார்களைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம் என்று சொல்லும் தோழிகள், சிவனடியாரையே தங்களது கணவராக ஏற்றுக் கொள்வோம் என்றும், அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே தங்களது பணியாக ஏற்றுக்கொண்டு மிகவும் மகிழ்சியுடன் செய்வோம் என்றும், அத்தகைய வாய்ப்பு தங்களது வாழ்க்கையில் கிடைத்தால், எந்த குறையும் தங்களுக்கு இல்லை என்றும் கூறுவதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். திருமணத்திற்கு முன்னர், சிவபெருமானது அடியாராக இருந்த தாங்கள், திருமணத்திற்கு பின்னரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதையும், அந்த வாய்ப்பினை நல்குமாறு இறைவனிடம் வேண்டுவதையும் நாம் இந்த பாடலில் உணரலாம். 

மூவர்க்கும் முதல்வர்=அரி, அயன், அரன் ஆகிய மூவர்க்கும் முதலாக இருப்பவர் சிவபெருமான். சந்தி=இரண்டு பொழுதுகள் சேரும் சமயம், இரவு முடித்து பகல் தோன்றும் சமயமாகிய காலை நேரம், நண்பகல் முடிந்து பின்பகல் தோன்றும் உச்சி நேரம், பகல் முடிந்து இரவு தோன்றும் சமயமாகிய மாலை நேரம். இந்த மூன்று நேரங்களிலும் சந்தியாவந்தனம் செய்து இறைவனை தியானிப்பது அந்தணர்கள் வழக்கம். அந்த மூன்று நேரங்களாகவும், சந்தியாவந்தனம் செய்யும் அந்தணர்களின் மனதினில் உள்ளவராகவும் இறைவன் இருக்கும் தன்மை, சந்தியார் சந்தியுள்ளார் என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது.   

சந்தியா வந்தனம் செய்வோர்கள், உடலால் பல செயல்கள் செய்வது மட்டுமன்றி மந்திரங்களையும் ஓதுவார்கள். எனவே இவர்கள், சந்தியாவந்தனம் மூலமாக இறைவனை வழிபடுவது சரியை மற்றும் கிரியை மூலம் வழிபடுவதாக கருதப்படுகின்றது. தவநெறி தரித்துள்ள முனிவர்கள் வழிபடுவது யோக முறையினையும், யோகத்தால் அவர்கள் அடையும் ஞானம் ஞான நெறியை உணர்த்துகின்றது. இவ்வாறு நான்கு நெறிகளிலும் வழிபடும் அடியவர்கள் நெஞ்சினில் இறைவன் இருப்பது இந்த பாடலில் உணர்த்துப் படுகின்றது.           

பொழிப்புரை:

உலகிலுள்ள மூத்தவர்களுக்கும் மூத்தவராக இருக்கும் சிவபெருமான், அரி அயன் உருத்திரன் ஆகிய மூவருக்கும் முதல்வராக விளங்குகின்றார். மூன்று பொழுதுகளாக விளங்குவது அன்றியும் ஒரு பொழுதுக்கும் மற்றொரு பொழுதுக்கும் இடையில் உள்ள நேரமாகவும் விளங்கும் சிவபெருமான், மூன்று வேளைகளிலும் சந்தியாவந்தனம் செய்து தன்னை தியானிக்கும் அந்தணர்களின் மனதினில் உறைகின்றார். மேலும் தவக்கோலம் பூண்டு தவம் செய்து ஞானத்தை அடையும் முனிவர்கள் மற்றும் துறவிகளின் சிந்தனையில் பொருந்தி உறைகின்றார். மற்றும் மங்கலமான நெறிகள் அனைத்திலும் பொருந்தி விளங்கும் சிவபெருமான், எமக்கு தந்தையாகவும் எனது தலைவனாகவும் விளங்குகின்றார். அவர் தான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com